Monday, May 20, 2024
HomeTech Articlesசுந்தர் பிச்சை அமெரிக்காவை அதிரவைக்கவில்லை | உண்மை என்ன?

சுந்தர் பிச்சை அமெரிக்காவை அதிரவைக்கவில்லை | உண்மை என்ன?

 


கூகுள் நிறுவனத்தின் CEO, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை அவர்கள் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடு காரணமாக விளக்கம் அளித்திட அமெரிக்க காங்கிரஸ் குழு (House Judiciary Committee) முன்பாக ஆஜர் ஆனார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் 30 நிமிடம் தொடர்ந்த இந்த விவாதத்தில் பங்கேற்ற சுந்தர் பிச்சை தன் முன்பாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.

சுந்தர் பிச்சை அவர்களின் திறமையின் மீதும் தமிழர்களுக்கு பெருமையளித்துக்கொண்டு இருக்கிறார் என்பதிலும் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டியது சுந்தர் பிச்சையின் ஆளுமையை அல்ல , அவர் அளித்த பதிலையும் இந்த கால தொழில்நுட்பங்கள் பற்றியதுமே.

 

சில மாதங்களுக்கு முன்பாக facebook நிறுவனர் மார்க் ஜூகன்பெர்க் இந்த கமிட்டியின் முன்பாக ஆஜர் ஆகியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த அமெரிக்க காங்கிரஸ் (House Judiciary Committee) குழுவின் முக்கிய நோக்கம் இணைய சமநிலையை மீறுகின்ற அல்லது இணையத்தை தவறாக பயன்படுத்துகின்ற நிறுவங்கள் மீதான குற்றசாட்டை விசாரிப்பது தான்.


அமெரிக்காகாவை அதிர வைத்தாரா சுந்தர் பிச்சை?

 

தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது. ஆம் அதுதான் “அமெரிக்காவை அதிரவைத்தார் தமிழன் சுந்தர் பிச்சை” என்ற செய்தி. ஆனால் அங்கு எதற்காக சுந்தர் பிச்சை ஆஜர் ஆனார்? உண்மையாலுமே அமெரிக்காவை அதிர வைத்தாரா சுந்தர் பிச்சை? அங்கு நடந்தது என்ன என்பது குறித்துதான் பார்க்க இருக்கிறோம்.

வீடியோவை பார்க்க வைக்க வேண்டும் என்பதற்க்காகவே இதுபோன்ற தலைப்புக்கள் இடப்படுவது வருத்தத்திற்கு உரியது


 

எதற்காக சுந்தர் பிச்சை ஆஜர் ஆனார்?

செய்வாய்க்கிழமை (11/12/2018) அன்று நடந்த விவாதத்தின் தலைப்பு “Transparency & Accountability: Examining Google and its Data Collection, Use, and Filtering Practices”. அதாவது “கூகுள் நிறுவனத்தின் தகவல் திரட்டுதல், சர்ச் என்ஜின் செயல்பாடு போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை” என்பதே.

கூகுள் மீதான முக்கிய குற்றசாட்டு,

  • பயன்படுத்துபவர்களுக்கு தெரியாமலேயே தகவலைகளை திரட்டுவது
  • அரசியல் விளம்பரங்கள்
  • சர்ச் என்ஜின் செயல்படும் விதம்
  • சீனாவிற்கான சென்சார் செய்யப்பட்ட சர்ச் என்ஜின் உருவாக்குவது

கடந்த ஓராண்டிற்கும் மேலாக, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட குடியரசுக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், தேர்தல் காலங்களில் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் எங்களுடைய குரலை ஒடுக்கும் விதமாக செயல்பட்டன என கூறிவந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே அந்த நிறுவனங்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

 


இந்த விசாரணையை கண்டவர்கள் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களை தப்பிக்க விடவே பல சக்தி குறைவான கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்


அங்கே சுந்தர் பிச்சையின் முன்பாக வைக்கப்பட்ட கேள்விகளை பார்க்கலாம்,

மொபைலில் விளையாடும் போது அரசியல் விளம்பரம் வருவது எப்படி?

 

Steve King இன் பேத்தி மொபைலில் விளையாடிக்கொண்டு இருக்கும்போது ஒரு Popup விளம்பரம் தோன்றுகிறது. அதில் ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினரை பற்றி எதிர்மறையான செய்தி ஒளிபரப்படுகிறது. இது எப்படி?

இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை ” ஐபோன் வேறு ஒரு நிறுவனம் உருவாக்குகின்ற மொபைல் போன்” என பதிலளித்தார்.

பின்னர் சுதாரித்துக்கொண்ட உறுப்பினர் அது ஆன்ட்ரோய்டு போனாகத்தான் இருக்க வேண்டும் என கூறினார்.

மிக முக்கியமான கேள்வியை கேட்க முற்படுகிறபோது என்ன மொபைல், என்ன கேம் என்பது போன்ற கேள்விகளை சரியாக முன்வைக்காமல் போனது வருத்தப்பட வேண்டியது.


 

‘Idiot’ என தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்?

 

காங்கிரஸ் உறுப்பினர் :  கூகுளில் இடியட் (Idiot) என தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? இதற்கான காரணம் என்ன?

 

சுந்தர் பிச்சை : முதலில் ஒன்றினை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் எவரும் சர்ச் ரிசல்ட் இல் மாற்றம் செய்திட முடியாது. நீங்கள் இப்போது ஒரு விவரத்தை தேடுகிறீர்கள் என வைத்துக்கொண்டால், கூகுள் தன்னிடம் இருக்கின்ற “crawled and stored copies of billions of their pages in our index” இல் இருந்து தகவலை காட்டும். மேலும் எந்த ரிசல்ட் ஐ முதலில் காட்டவேண்டும் என்பதற்கு 200 க்கும் மேற்பட்ட காரணிகளின் மூலமாக Page Rank செய்யப்பட்டுகிறத” என தெரிவித்தார்.

 


ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துபவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதனை கண்காணிக்கிறதா கூகுள்?

 

காங்கிரஸ் உறுப்பினர் : சில நிமிடங்களுக்கு ஒருமுறை கூகுள் ஆன்ட்ராய்டு போன்களில் இருந்து, பயன்படுகின்ற நபர் எங்கு இருக்கிறார்? எந்த திசையில் செல்கிறார்? என்பது போன்ற தகவல்கள் அனுப்பப்படுகிறதே. உண்மையா இல்லையா?

சுந்தர் பிச்சை : கூகுள் அனைவரது தகவலையும் சேகரிப்பது கிடையாது. எவரேனும் Fitness Apps போன்றவற்றை பயன்படுத்தினால் நடப்பது போன்ற தகவல்கள் அனுப்பப்படும். அதுவும் பயனாளர்களின் அனுமதியோடு தான் அனுப்பப்படும்.

காங்கிரஸ் உறுப்பினர் : புரிகிறது அந்த ஆப்கள் செயல்பட தகவல்கள் அவசியம். ஆனால் Terms and conditions ஐ ஏற்றுக்கொள்பவர்களில் பெரும்பாலானவர்களால் எந்தெந்த தகவல்களை கூகுள் கலெக்ட் செய்கிறது என்பதை தெரிந்துகொண்டு இருக்கிறார்களா?

சுந்தர் பிச்சை : Terms and conditions மட்டுமல்ல. அதனை தாண்டி Privacy Checkup ஆப்சன் இருக்கிறது. அதில் என்ன மாதிரியான தகவல்கள் கூகுலிடம் இருக்கிறது, அதில் எதனை கூகுள் பயன்படுத்தக்கூடாது என பயனாளர்கள் விரும்பினாலோ அல்லது அந்த தகவலை பெற விரும்பினாலோ அதனை செய்வதற்கான ஆப்சனையும் கூகுள் வழங்குகிறது.

 


சீனாவிற்காக சென்சார் செய்யப்பட்ட தேடுபொறியை உருவாக்க போகிறதா?

 

சீனாவில் ஒன்றை ஆட்சி முறை நடப்பதும் அங்கு ஆட்சிக்கு எதிராக எதனையும் பேசவோ எழுதவோ முடியாது என்பது அனைவரும் அறிந்திருந்ததே. மக்கள் தொகையில் அதிக சதவிகிதத்தை கொண்டுள்ள சீனாவிற்கு அந்த அரசாங்கம் விரும்பாத தகவல்களை காட்டாத அளவிலான தேடுபொறியை உருவாக்கிட கூகுள் உருவாக்க உடன்பட்டிருக்கிறது என சொல்லப்பட்டது. இது உண்மையா என கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, சீனாவில் சர்ச் என்ஜினை உருவாக்கிட தற்போதைய திட்டம் எதுவுமில்லை. தகவலை பெறுவது மனிதர்களின் உரிமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் திட்டவட்டமாகவும் தெரிவித்தார்

 


இதுபோன்ற பல கேள்விகளுக்குத்தான் பதில் அளித்து இருந்தார் கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை. இது சராசரியாக நடக்கின்ற நிகழ்வுதான். இதில் அமெரிக்காவையே அதிரவைத்துவிட்டார் என சொல்வதில் பெரிய உண்மை இருப்பதாக நான் நம்பவில்லை.

மேலும் கூகுள் உள்ளிட்ட அனைத்து மிகப்பெரிய நிறுவனங்களும் தமிழருக்கு சொந்தமானது அல்ல. ஆகவே இன்று தமிழர் தலைவராக இருக்கிறார் என்பதற்காக முறைப்படுத்தப்படாத தகவல் திரட்டு, சர்ச் என்ஜின் செயல்பாடு,அரசியலில் தலையீடு போன்றவற்றில் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க அவசியமில்லை.

> இன்று தொழில்நுட்ப அறிவு அவ்வளவாக இல்லாத பலரும் மொபைலை பயன்படுத்துகிற சூழலில் அவர்கள் Conditions ஐ அழுத்திவிட்டார்கள் என்பதற்காக அவர்களை அறியாமல் பல தகவல்கள் திரட்டப்படுகின்றன.

> சமூக வலைத்தளங்கள் அரசியல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெறுவதனால் மிகப்பெரிய ஆற்றலை அவை பெறுகின்றன. ஆகவே அவைகளை கண்காணிப்பது அவசியம்
> எந்த கேள்விக்கும் பதில் சொல்லிவிடும் சர்ச் என்ஜினாக இருக்க கூடிய, அதிகம் பேரால் பயன்படுத்தக்கூடிய கூகுள் சரியான பதிலை அளித்திடும் விதமாக கட்டமைக்கப்பட்ட வேண்டியது அவசியம்

> கூகுள் , facebook உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே பொதுமக்களின் தனிமனித உரிமையை காக்கின்ற விதத்தில் செயல்பட வேண்டும்.

இதனை உறுதிப்படுத்துகிறதா கூகுள் CEO சுந்தர் பிச்சையின் பதில் என்பதனை தான் இந்த தருணத்தில் பார்க்கவேண்டும் அதனை விடுத்து திறமையாக பதிலளித்தார் என்பதற்க்காக கொண்டாடுவது சரியாக இருக்க முடியாது.

இதனை நோக்கித்தான் நமது பார்வை இருக்க வேண்டும்.


 

TECH TAMILAN

RELATED ARTICLES

3 COMMENTS

  1. […] பெரும்பான்மையானவர்களுக்கு கூகுள் என்கிற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை பற்றி மட்டுமே தெரிந்திருக்கும். திடீரென கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டுவந்த சுந்தர் பிச்சை அவர்கள் ஆல்பபெட் எனும் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்படுகிறார் என்றவுடன் அது ஏதோ வேறொரு நிறுவனம் போல என எண்ணிக்கொண்டனர். ஆனால் கூகுள் என்பது ஆல்பபெட் எனும் நிறுவனத்திற்கு கீழே செயல்படுகிற துணை நிறுவனம் தான்.  […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular