Friday, May 10, 2024
HomeSuccess Storiesஸ்டீவ் ஜாப்ஸ் வெற்றிக்கதை | Steve Jobs Success Story In Tamil

ஸ்டீவ் ஜாப்ஸ் வெற்றிக்கதை | Steve Jobs Success Story In Tamil

1 டிரில்லியன் சந்தை மதிப்பை பெற்ற முதல் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் தான்

ஆகஸ்ட் 02, 2018 அன்று ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக வரலாற்றில் 1 டிரில்லியன் சந்தை மதிப்பை பெற்ற முதல் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் தான். இப்படிப்பட்ட மாபெரும் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் [Steve Jobs Success Story] எப்படி கட்டி எழுப்பினார் என்பதை இங்கே பார்ப்போம்.

உலக வரலாற்றில் 1 டிரில்லியன் சந்தை மதிப்பை பெற்ற முதல் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் தான். இதனை ஆகஸ்ட் 02, 2018 அன்று ஆப்பிள் நிறுவனம் பதிவு செய்தது. அதற்கு அடுத்தபடியாக ஏப்ரல் 30,2019 அன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் 1 டிரில்லியன் சந்தை மதிப்பை பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவதாக இணைந்தது. ஜனவரி 16,2020 அன்று ஆல்பபெட் [கூகுள்] மூன்றாவதாக இந்தப்பட்டியலில் இணைந்தது. இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்திய ஆப்பிள் நிறுவனத்தின் பெயரை உச்சரிக்கும் எவருக்கும் நினைவில் வரக்கூடிய இன்னொரு பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆமாம், ஆப்பிள் நிறுவனத்தை துவங்கிய இரண்டு நபர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து இவரையே வெளியேற்றினார்கள். பின்னர் வீழ்ச்சியடையதுவங்கிய ஆப்பிள் நிறுவனத்தை தூக்கி நிறுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் வாழ்க்கையும் கூட பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது தான் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். இந்தப்பதிவில் நாம் அனைத்து ஏற்ற இறக்கங்களின் வாயிலாகவும் பயணிக்கப்போகிறோம்.

ஸ்டீவ் ஜாப்ஸ் இளமைப்பருவம்

1955, பிப்ரவரி 24 ஆம் நாளன்று அப்துல்பட்டா ஜந்தாலி – ஜோன் சிம்ப்சன் ஆகிய இருவருக்கும் மகனாகப்பிறந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இவரது தந்தை சிரியாவை சேர்ந்தவர், தாய் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்தவர். இவர்கள் இருவரின் காதலுக்கு ஜோன் சிம்ப்சனின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். குடும்ப சூழல் காரணமாக ஸ்டீவ் ஜாப்ஸை தத்துக்கொடுக்க முடிவெடுத்தார் அவரது தாய். கணவர் அப்துல்பட்டா ஜந்தாலிக்கு தெரிவிக்காமல் அதற்கான ஏற்பாடுகளை செய்த அவர், பால்-கிளாரா தம்பதிக்கு ஜாப்ஸை தத்துக்கொடுத்தார். 2 மாத குழந்தையான ஸ்டீவ் பல்வேறு சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குக்கு பின்னர் பால் – கிளாரா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பால் – கிளாரா தம்பதியினர் ஸ்டீவ்வை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்து வந்தனர். அவருக்கு கல்வி பயிலவும் ஏற்பாடுகளை செய்தனர். ஸ்டீவ்க்கு கல்வியில் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லை. பள்ளியில் அத்தனை குறும்புத்தனத்தையும் வெளிப்படுத்தியதால் இவரை நல்ல மாணவர் என எவரும் கூற ஒப்புக்கொள்ள  மாட்டார்கள். அதிக பிடிவாதமும் முன்கோபமும் கொண்டவராகவே ஸ்டீவ் ஜாப்ஸ் இளம் வயதில் இருந்தார். இப்படி படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாதவராக இருந்தாலும் கூட மறுபுறம் தொழில்நுட்பம் அவரை வெகுவாக ஈர்த்தது. ரேடியோ மற்றும் டிவி-களின் உபகரண பாகங்களை வாங்கி ஒன்றிணைப்பதில் தீரா ஆர்வம் கொண்டிருந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் மதப்பற்று

ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய இளம் வயதில் உணர்ச்சிமிக்கவராகவே இருந்திருக்கிறார். தன்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு புத்தத் துறவியாக ஆக நினைத்தார் ஸ்டீவ். 1974-ல், இந்தியா வந்திருந்த அவருக்கு புத்தமதம் மீது ஆர்வம் பெருகி இந்த முடிவு எடுக்க நினைத்திருந்தார். அம்மதத்தின் மீதான ஈர்ப்பு அவருக்கு இறுதிவரை இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல மாத இதழ் ஒன்றில் மெலிந்த உடல் கொண்ட நைஜீரிய மக்களின் புகைப்படங்களை பார்த்துவிட்டு தேவாலயத்துக்கு ஓடிச்சென்று பாதிரியாரிடம் “”ஏன் இப்படி கடவுள் பாரபட்சமாய் உயிர்களைப் படைத்துள்ளார் பாதர்?” என்றான். “உனக்கு இது புரியாது” என்ற பதிலைக் கேட்டவுடன், “எனக்குப் புரியாதது தேவையுமில்லை” என்று மதத்தை ஒதுக்கினார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் : ஆப்பிள் நிறுவனம்

துவக்கத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் உடன் இணைந்து தனது பயணத்தை துவங்கினார். உலகம் முழுமைக்கும் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வதற்கான ப்ளூ பாக்ஸ் என்னும் டெலிபோன் ஹேக்கிங் கருவியை உருவாக்குவதில் தான் இருவரும் முதலில் ஈடுபட்டனர். சில காரணங்களால் அவர்கள் இதனை விட்டுவிட்டனர். இவர்கள் இருவரும் ஹோம்பிரூ கம்ப்யூட்டர் கிளப்பில் உறுப்பினர்களாக இருந்தனர். அங்கு அவர்கள் அலுவகங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த கணினிகளால் ஈர்க்கப்பட்டனர். ஒவ்வொரு வீடுகளுக்கும் கணினியை கொண்டு செல்வதே தங்களது இலக்கு என அவர்கள் கணினி உருவாக்கத்தில் ஈடுபடத்துவங்கினர்.

புகழ்மிக்க ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 01, 1976 ஆம் நாள் துவங்கப்பட்டது. நிறுவனம் துவங்கிய 10 ஆம் நாளன்று ஆப்பிள் 1 என்ற கணினியை அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு அப்போது புரோகிராம் எழுதக்கூட தெரியாது. அந்த வேலையை ஸ்டீவ் வோஸ்னியாக் பார்த்துக்கொண்டார். அசம்பிளிங் மற்றும் விற்பனை போன்றவற்றை ஸ்டீவ் ஜாப்ஸ் [பார்த்துக்கொண்டார்.

ஆப்பிள் 2 விற்பனையை அதிகரிக்க அவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள். ஆகவே அதனை அழகாக வடிவமைத்து இருந்தார்கள். முதலீடு பெருமளவில் இல்லாதபடியால் மூன்று கணினிகளை மட்டும் தயார் செய்து வைத்திருந்தார்கள். அப்போது நடைபெற்ற ஒரு கணினி கண்காட்சியில் இவர்களும் பங்கேற்றார்கள். அப்போது நிறைய கணினிகள் இருப்பதைப்போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த கணினி மாடல்களை அடுக்கி ரணகளப்படுத்தி இருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இதனைக்கண்ட வோஸ்னியாக், நம்மிடம் மூன்று கணினிகள் தானே இருக்கிறது நீ இவ்வளவு அடுக்கி வைத்திருக்கிறாயே என கேள்வி எழுப்பினார். வியாபாரத் தந்திரியான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் எண்ணம் பலித்தது. ஆப்பிள் 2 வின் வடிவமைப்பில் மயங்கிய பலர் ஆர்டர்களை கொடுக்க ஆரம்பித்தனர். இவர்களிடம் ஏராளமான கணினிகள் இருக்கின்றன என அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் ஆர்டர் வர வர இவர்கள் கணினிகளை தயாரித்து கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஏறுமுகம்

1978 ஆம் ஆண்டு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர லாபத்தை பெற்றது ஆப்பிள் நிறுவனம். வெறுமனே ஆப்பிள் 2 விற்பனை மூலமாக மட்டுமே இந்தப்பணம் கிடைக்கவில்லை. மாறாக, இவர்களது ஆப்பிள் 2 கணினியில் ஒரு வசதியை ஏற்படுத்தி இருந்தார்கள். அதனைக்கொண்டு ஆப்பிள் 2 கணினி வைத்திருப்பவர்கள் புரோகிராம்களை எழுத முடியும். அதனை பிறருக்கு விற்பனையும் செய்துகொள்ள முடியும். இதன் மூலமாக இவர்கள் நேரடியாக லாபத்தை பெறவில்லை என்றாலும் கூட அதிக கணினிகள் விற்பதற்கும் நிறைய பயனுள்ள புரோகிராம்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதற்கும் வழிவகை செய்தது.


ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்

தான் ஆரம்பித்த சொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டால் அது எத்தனைப்பெரிய வலியினைத்தரும் . மிகப்பெரிய ஸ்தானமாக வளர்ந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அதன் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணமும் அவரே.

ஆமாம், 1983 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் வேலை செய்த ஜான் ஸ்கல்லி என்பவரை ஆப்பிள் நிறுவனத்தின்  சிஇஓ வாக நியமித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் 2 தொடர்பாக இருவருக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக போர்டு மற்றும் சிஇஓ ஜான் ஸ்கல்லி இணைந்து ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை வெளியேற்றியது. தான் வேலைக்கு சேர்த்துவிட்டு நபராலயே வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது தான் இதில் வருத்தமான விசயம். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஸ்டீவ் ஜாப்ஸ் – நெஸ்ட் எனும் நிறுவனத்தை துவங்கினார் , பிக்ஸார் கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். நெஸ்ட் பெரிய அளவில் சோபிக்கவில்லை, ஆனால்  பிக்ஸார் கிராஃபிக்ஸ் நிறுவனம் எடுத்த திரைப்படம்  ‘டாய் ஸ்டோரி’ நல்ல வெற்றியை பதிவு செய்தது. இதனால் மீண்டும் வெற்றி ஜாப்ஸ் பக்கம் வந்தது.

வீழ்ந்த ஸ்டீவ் இல்லாத ஆப்பிள் நிறுவனம்

ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாத ஆப்பிள் நிறுவனம் மெல்ல மெல்ல சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதற்கு மேலும் அமைதி காத்தால் நிறுவனம் மூழ்கிவிடும் என்பதை உணர்ந்தவர்கள் 1996 இல் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐ தேட ஆரம்பித்தார்கள். நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனது நெஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனத்துடன் இணைத்தார் ஸ்டீவ். ஆப்பிள் நிறுவனம் மூழ்கிக்கொண்டிருக்கும் தருவாயில் அதனை மீட்டெடுக்க உதவி செய்தது மைக்ரோசாப்ட் தான். பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் இருவரும் நிறுவனங்கள் அடிப்படையில் மோதிக்கொண்டாலும் கூட தனிநபர் உறவை பேணிக்காத்து வந்தனர் என குறிப்பிடுகிறார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் எப்போதும் புதுமையை விரும்பக்கூடியவர். அப்போது பாடல்கள் கேட்க விரும்புகிறவர்கள் வாக்மேன் எனும் கருவியையே பயன்படுத்தி வந்தார்கள். அந்த தருணத்தில் சிறிய கையடக்க அளவில் ஐபேட் ஐ அறிமுகப்படுத்தி அசத்தினார் ஸ்டீவ். இதற்கு பெருமளவு வரவேற்பு குவிந்தது. அதன் தொடர்ச்சியாக மொபைல் போன்கள் தயாரிப்பிலும் அக்கறை காட்டத்துவங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் போன்களின் விலை மற்ற போன்களைக்காட்டிலும் அதிகமாக இருந்தது. இதனை ‘ஆடம்பர செலவு செய்பவர்களுக்கான மொபைல் போன்’ என விமர்சித்தார் பில்கேட்ஸ். அந்த சூழ்நிலையில் விலையை கருத்தில் கொண்டு பார்த்தால் சரியான விமர்சனம் என்று கருதினாலும் கூட தரமான போன்களை உருவாக்கி வழங்கியபடியால் வரவேற்பு அதிகரிக்கவே செய்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு

கணையம், கல்லீரல் என அனைத்தையும் பாதித்திருந்த புற்றுநோய் அவரை பலவீனப்படுத்தியது. சிறுநீரக அறுவைசிகிச்சை எல்லாம் நடந்தபின் கடைசி நாட்களை எண்ணத் துவங்கினார். தன் மகள்களுடனும், மகனுடனும், மனைவியுடனும் நேரம் செலவழித்தார். தன் வாழ்நாளில்  திருமண நாளையே கொண்டாடாதவர், கடைசித் திருமண நாளை 2011-ல்  கொண்டாடினார். 2011 ஆகஸ்டில் நடந்த ஆப்பிள் மாநாட்டில் பில்கேட்ஸுடன் கலந்து கொண்டார். அன்று க்ளவுட் கம்ப்யூட்டிங்கை அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் அவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி.  2011, அக்டோபர் 5 அன்று உயிரிழந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் இறந்தபோது வயது 56.

இன்னும் அவர் வாழ்ந்திருந்தால் ஆப்பிள் நிறுவனம் புதிய பரிமாணங்களை அடைந்திருக்கும். மக்களுக்கும் புதுவிதமான தயாரிப்பினை வழங்கி இருப்பார்.

ஆப்பிள் என்ற பெயர் உச்சரிக்கப்படும் வரை ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ வாழ்வார்.

Read More : ஜெப் பெசோஸ் வெற்றிக்கதை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular