Friday, May 10, 2024
HomeBiographyஜெப் பெசோஸ் வெற்றிக்கதை | Jeff Bezos Success Story In Tamil

ஜெப் பெசோஸ் வெற்றிக்கதை | Jeff Bezos Success Story In Tamil

அமேசான் நிறுவனத்தை உருவாக்கிய பயணம்

ஜெப் பெசோஸ் [jeff bezos] முயற்சி செய்யாத துறைகளே இல்லை எனலாம். அனைத்துமே வெற்றி பெறாது எனத்தெரியும். ஆனால் சோதனையே முதல் படி என்று சொல்லும் ஜெப் பெசோஸ், தோல்வி அடையும் விசயங்களுக்கான இழப்பை வெற்றியடையும் முயற்சிகள் ஈடு செய்யும் என்பார்.

ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை உருவாக்கி ஜெயித்தது எப்படி?

இன்று உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற நிலைக்கு உயர்ந்து நிற்கிறார் ஜெப் பெசோஸ். ஜெப் பெசோஸ் பற்றி அறிந்த பலருக்கு அவர் அமேசான் நிறுவனத்தை கட்டியெழுப்பிய சாதனைப்பயணம் மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் அதனையும் தாண்டி “Blue Origin” எனும் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை சொந்த முதலீட்டில் நடத்தி வருகிறார். அதேபோல அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான ““The Washington Post” ஐ விலைக்கு வாங்கி தற்போது நடத்தி வருகிறார். இதுபோல இன்னும் பல நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் தொடர்ச்சியாக முதலீடுகளையும் செய்து வருகிறார். அதேபோல புதிய வாய்ப்புகளில் முதலீடு செய்து அதை சோதனை செய்தும் வருகிறார் ஜெப் பெசோஸ். 

ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திட மிகவும் அவசியமான இரண்டு விசயங்கள் “சோதனை” செய்து பார்ப்பது, மீண்டும் மீண்டும் “முயற்சிப்பது”. புதிதாக ஒரு தொழிலை உருவாக்க நினைக்கும் தொழில்முனைவோருக்கும் இந்த இரண்டு விசயங்களும் அவசியமானவை தான். அது இவரிடம் ஏராளமாக இருக்கிறது.

ஜெப் பெசோஸ் இளமைக்காலம்

ஜெப் பெசோஸ் ஜனவரி 12, 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருக்கும் அல்புகர்கி எனும் இடத்தில் பிறந்தார். ஜெப் பெசோஸ் பிறக்கும் போது அவரது அம்மா ஒரு டீனேஜர். அவரது பெயர் ஜாக்லின் [Jacklyn] மற்றும் அவரது தந்தை பெயர் டெட் ஜார்கென்ஸ் [Ted Jorgense]. குழந்தை பிறந்த பிறகு ஓராண்டுக்குத்தான் இவர்களின் திருமண வாழ்க்கை நீடித்தது. பிறகு மிகுவல் பெசோஸ் [Miguel Bezos] என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஜாக்லின். 

சிறுவயதில் புத்தகப்புழுவாக இருந்த ஜெப் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் [electrical engineering and computer science] துறையில் பட்டம் பெற்றார். அவர் பட்டம் பெற்றபிறகு 1986 ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு பெரிய நிறுவனங்களில் [Intel and Bell Labs] இருந்து வேலைக்கு சேரும் வாய்ப்பு [call letter] வந்தது. ஆனால் இரண்டையும் புறக்கணித்த அவர் பிடெல் [Fitel] எனும் புத்தம் புதியதாக துவங்கப்பட்ட நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 

ஜெப் பெசோஸ் இளமைப்பருவ புகைப்படம்

அதன்பிறகு அங்கு வேலையை விட்ட அவர் பேங்கர்ஸ் டிரஸ்ட் [Bankers Trust], புதிய தொழில்களில் முதலீடு செய்திடும் D. E. Shaw & Co வில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு 30 வயது இருக்கும் போது D. E. Shaw & Co நிறுவனத்தில் மூத்த துணைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அப்போதே அவருக்கு 6 இலக்கங்களில் சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

அப்போது மற்றவர்கள் ஜெப் பெசோஸ் பற்றி பேசும் போது “ஜெப் பெசோஸ் ஒரு வெற்றி பெற்ற மனிதர்” என குறிப்பிட்டனர்.ஆனால் அதிக சம்பளம் பெற்று நிம்மதியான வாழ்க்கையை நகர்த்திடும் ஒரு சராசரி மனிதனாக இருக்க ஜெப் பெசோஸ் விரும்பவில்லை. அவர் அந்த உயரிய பதவியை விட்டு வெளியே வந்தார். ஒரு நல்ல பதவியை விட்டு விலகுவது சரியான முடிவு இல்லை என அவரது நலம் விரும்பிகளும் குடும்ப உறுப்பினர்களும் சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் ஜெப் பெசோஸ் கேட்பதாக இல்லை, காரணம் அவர் ஏற்கனவே வேறொரு யோசனையை வைத்திருந்தார்.

அமேசான் ஐடியா உதித்தது எப்படி?

புத்தக விற்பனையில் ஜெப் பெசோஸ் புகைப்படம்

அவர் ஏற்கனவே பணி புரிந்த D.E. Shaw & Co நிறுவனத்தில் இவரது பணி “புதிதாக எந்த தொழிலில் முதலீடு செய்யலாம்” என்பதைத் தேடுவது தான். அப்படி தேடுதலில் ஈடுபட்டிருக்கும் போது கிடைத்த ஒரு தகவல் தான் ஜெப் பெசோஸ் ஐ சிந்திக்க வைத்தது. அந்த தகவல் என்னவென்றால் “ஒவ்வொரு மாதமும் இன்டர்நெட் பயன்பாடு 2300% அளவில் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது” என்பதுதான். இதே சமயத்தில் தான் அமெரிக்க கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் ஒரு நிரந்தர கடை என்ற ஒன்று இல்லாவிடில் விற்பனை வரி வசூலிக்கத் தேவையில்லை என கூறப்பட்டு இருந்தது. 

இரண்டையும் இணைத்து ஒரு பிறந்தது தான் அமேசான் ஐடியா. ஒரு ஆன்லைன் விற்பனையகத்தை தொடங்கினால் என்ன என யோசித்து அதனை சோதித்து பார்ப்பதற்கு தனது 6 இலக்க சம்பள வேலையையும் துறந்தார். சரி என்னென்ன பொருள்களை முதலில் விற்பனை செய்யத்துவங்குவது என ஒரு லிஸ்ட் போட ஆரம்பித்தார். அதில் பொதுமக்கள் ஆன்லைனில் அதிகம் வாங்க விருப்பப்படும் 20 பொருள்களை பட்டியலிட்டார். அதில் முதலிடம் பிடித்தது “புத்தகம்” 

துவக்க காலம்

ஆரம்பத்தில் “Cadabra” என்ற பெயரில் தான் அமேசான் நிறுவனம் அழைக்கப்பட்டது. பின்னர் தான் மிகப்பெரிய நதியான “அமேசான்” நினைவால் “அமேசான்” என அழைக்கப்பட்டது.”

எல்லா நிறுவனங்களைப்போலவே அமேசான் நிறுவனமும் ஆரம்ப காலத்தில் சில பின்னடைவுகளை சந்தித்தது. அதேசமயம் அதன் போக்கு மக்கள் கூடிய விரைவில் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையையும் அளிக்கத்தவறவில்லை. தனது சேமிப்பு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவி மூலமாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டினார் ஜெப். புத்தக விற்பனையை ஆன்லைனில் செய்ய திட்டமிட்ட அவர் அதற்காக தனது வீட்டையும் இடம்பெயர்வு செய்துகொண்டார். ஒரேகான் பகுதியில் இருக்கும்  Ingram Book Group க்கு சொந்தமான புத்தக நிலையத்திற்கு அருகே தான் இவரது இருப்பிடம் இருந்தது. 

அடுத்த ஆண்டு, 5 ஊழியர்கள் பணியாற்ற துவங்கினார்கள். இவர்களின் முக்கியப்பணி புத்தகங்கள் குறித்த தகவல்களை எப்படி பெறுவது, அதனை மக்கள் எளிதில் தேடி கண்டறியும் விதமாக தங்களது இணையதளத்தில் மாற்றம் கொண்டுவருவது எப்படி என்பதுதான். 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிட்டத்தட்ட 1 மில்லியன் தலைப்புகளைக்கொண்ட புத்தகங்களை மக்கள் பெரும் விதமான “ஆன்லைன் புத்தக விற்பனை நிலையம்” வெளியிடப்பட்டது. Amazon.com என்ற இணையதளத்தில் மக்கள் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை ஆர்டர் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பூமியிலேயே இருப்பதில் மிகப்பெரிய புத்தக நிலையம் [“Earth’s Biggest Book Store”] என அமேசான் தன்னை கூறிக்கொண்டது.

வளர்ச்சி அடைந்த அமேசான்

அமேசான் துவங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் 100 பணியாளர்கள் பணியாற்றும் நிறுவனமாக மாறியது, அப்போது 15.7 மில்லியனுக்கு விற்பனை நடந்தது. அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் 3000 பணியாளர்கள் 610 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விற்பனை என வேகமெடுத்தது அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி. ஆனால் அமேசான் நிறுவனம் விற்பனையை அதிகரித்ததே தவிர லாபத்தை அதிகரிக்கவே இல்லை. சொல்லப்போனால் நஷ்டம் தான் பல சமயங்களில் ஏற்பட்டது. 1997 ஆம் ஆண்டு மட்டும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் நஷ்டம் குறைந்து லாபத்தை நோக்கி அமேசான் பயணிக்கவும் ஆரம்பித்தது.

2004 ஆம் ஆண்டு அமெரிக்கர்களில் 60 சதவிகிதம் பேர் வீட்டில் இன்டர்நெட் வசதி இருந்தது. ஆகையினால் ஒரு பொருளை ஆன்லைன் மூலமாக வாங்கிடும் பழக்கம் அதிகரிக்க துவங்கியது. இதனால் ஏற்கனவே நல்ல சேவையை வழங்கி வந்த அமேசான் நிறுவனம் தவிர்க்க முடியாத நிறுவனமாக மாறிப்போனது. அமேசான் நிறுவனமும் புத்தகம் என்பதையும் தாண்டி சிடி, மின்னணு பொருள்கள்,ஆடைகள் என அனைத்தையும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தது. 

ஜெப் பெசோஸ் எப்போதும் சொல்லுவார் – புதியவர்கள் வருவார்கள், புதிய தொழில்நுட்பம் வரும். அதனை ஏற்றுக்கொண்டு மாறுதல்களை செய்துகொண்டால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.

அதன்பிறகு அமேசான் நிறுவனம் வளர்ச்சி கட்டுக்கடங்காத வகையில் ஏறிக்கொண்டே போனது. பிறகு Amazon Prime, இலவச டெலிவரி, ஒருநாள் டெலிவரி என புதுப்புது மாற்றங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது அமேசான். அதனால் தான் இன்றளவும் அதன் வளர்ச்சியை தடை போடவே எவராலும் முடியவில்லை. எப்போதும் அமேசான் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செல்வது இல்லை. மாறாக தனக்கு ஒரு பொருளை விற்பதன் மூலமாக 100 ரூபாய் லாபம் கிடைத்தால் அதில் 60 முதல் 70 ரூபாயை ஆபர் என்ற பெயரில் வாடிக்கையாளருக்கே கொடுத்து விடுகிறது. இதனால் தான் மற்ற இடங்களைக்காட்டிலும் பொருள்கள் அமேசானில் விலை குறைவாக விற்கப்படுகின்றன. 

தற்போதைய சூழலில் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பது அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் அதன் தலைமை அதிகாரியுமான ஜெப் பெசோஸ் [JEFF BEZOS ] தான். கிட்டத்தட்ட 113 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்து மதிப்பை கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. ஆரம்பகாலகட்டத்தில் நல்லதொரு 6 இலக்க சம்பளம் போதுமென்று நினைத்து இருந்தால் இன்று ஒரு எட்டு இலக்கங்களில் சம்பளம் பெரும் நபராக இருந்திருப்பார்.

ஆனால் அவர் ஒரு பூ இடப்பட்ட பாதையை விரும்பாமல் தனது யோசனையை நம்பி கற்கள் நிறைந்த பாறையை தேர்ந்தெடுத்தார். சில ஆண்டுகள் அந்த பாதையில் பல தடை கற்களை தாண்டி பயணித்து இன்று உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்து நிற்கிறார். ஒருவேளை ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை துவங்காமல் போயிருந்தாலும் யாரோ ஒருவர் பிற்காலத்தில் அதை துவங்கி வைத்திருப்பார். காலம் அப்படிப்பட்டது தான், வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ளாவிடில் அந்த வாய்ப்பு பிறர் கைகளுக்கு போய்விடும்.

ஜெப் பெஸோஸ் தினசரி செய்வது இதுதான்

வாரன் பபெட்டின் பொன்மொழிகள் கேளுங்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular