Friday, May 10, 2024
HomeSuccess Storiesசுவர் கடிகாரங்களின் தந்தை 'ஓதவாஜி ராகவ்ஜி படேல்' வெற்றிக்கதை | Odhavaji Raghavji Patel

சுவர் கடிகாரங்களின் தந்தை ‘ஓதவாஜி ராகவ்ஜி படேல்’ வெற்றிக்கதை | Odhavaji Raghavji Patel

Father Of Wall Clocks

Rs 55 சம்பளம் பெறும் அறிவியல் ஆசிரியர் உருவாக்கிய Rs 1200 கோடி மதிப்புள்ள சுவர் கடிகார கம்பெனி.இதனாலேயே சுவர் கடிகாரங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார் ‘ஓதவாஜி ராகவ்ஜி படேல்’  

சுவர் கடிகாரங்களின் தந்தை என நீங்கள் தேடினால் ‘ஓதவாஜி ராகவ்ஜி படேல்’ [Odhavaji Raghavji Patel] என்ற இந்தியரின் பெயர் வரும். ஒரு காலத்தில் இவர் ரூபாய் 55 சம்பளம் பெரும் ஒரு சாதாரண அறிவியல் ஆசிரியராக இருந்தார். இவரது கடும் முயற்சிக்குப்பிறகு மாபெரும் சுவர் கடிகாரங்கள் தயாரிக்கும் Ajanta Group [அஜந்தா குழுமம்] என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இதனாலேயே சுவர் கடிகாரங்கள் தந்தை என அழைக்கப்படுகிறார்.

ஜூன் 24,1925 ஆம் நாள் அன்று குஜராத் மாநிலத்தில் இருக்கும் மோர்பி [Morbi] என்ற இடத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் ஓதவாஜி ராகவ்ஜி படேல். விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் படிப்பில் அக்கறை காட்டி வந்தார் படேல். இளம் வயதில் தான் ஒரு விமான ஓட்டியாக ஆக வேண்டும் என விரும்பினாலும் கூட தனது குடும்பத்தில் ஏழ்மையான நிலை காரணமாக BSc முடித்த பிறகு அருகே இருக்கும் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். அடுத்த 27 ஆண்டுகள் அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராகவே இருந்தார். இறுதியாக அவருக்கு கிடைத்த மாத சம்பளம் என்பது ரூபாய் 55.

தனக்கென குடும்பம், பிள்ளைகள் என ஆன பிறகு பிள்ளைகளை நல்லவிதமாக வளர்க்க இந்தப்பணம் போதாது என நினைத்தார் படேல். இதனால் தொழில் ஏதும் தொடங்கலாமா என அருகே உள்ளவர்களிடம் அவ்வப்போது விவாதிக்கவும் செய்தார். அப்போது தான் அவருக்கு அந்த வாய்ப்பு வந்தது. மூன்று பேர் சுவர் கடிகாரம் தயாரிக்கும் கம்பெனியை திறக்க முயற்சி செய்வதாகவும் அவர்களுக்கு அறிவியல் பின்னனி உள்ள ஒரு ஆள் தேவைப்படுவதாகவும் செய்தி கிடைக்க அவர்களை சந்தித்தார் படேல். இவரும் அறிவியல் ஆசிரியராக இருந்தபடியால் சிறு முதலீட்டோடு இவரையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டனர்.

1971 ஆம் ஆண்டு 1 லட்ச ரூபாய் முதலீட்டுடன் அஜந்தா டிரான்சிஸ்டர் கடிகாரம் உற்பத்தி நிறுவனம் [Ajanta Transistor Clock Manufacturing Company] உருவானது. ஆரம்பத்தில், வாடகைக்கு பிடித்த இடத்தில் இவரும் இவரது  பார்ட்னர்களும் இணைந்து இயந்திர கடிகாரங்கள் [mechanical clocks] தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

முதல் மூன்று ஆண்டுகளில் அவர்கள் எதிர்பார்த்த லாபம் நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை. தொடர் இழப்புகளை சந்தித்தபடியால் படேல் அவர்களுடன் இணைந்திருந்த அவரது பார்ட்னர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தார்கள்.  ஆனால் ஆதவ்ஜி ராகவ்ஜி படேல் வெளியேற விரும்பவில்லை. அதே நிறுவனத்தை தொடர்ந்து நடத்திட விரும்பினார். 1975 ஆம் ஆண்டு தனது 19 வயது மகன் பிரவின் படேல் அவர்களையும் கடிகார தொழிலுக்குள் கொண்டு வந்தார் ஓதவாஜி ராகவ்ஜி படேல்.

அந்த ஆண்டே அவரும் அவரது மகனும் ஜப்பான் மற்றும் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்கள். அவர்கள் அங்கிருந்து குவார்ட்ஸ் [quartz] தொழில்நுட்பத்தை இங்கே கொண்டுவந்து அதனை பயன்படுத்தி கடிகாரம் தயாரிக்க ஆரம்பித்தார்கள். மிகவும் சிறிய அளவில், குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட, துல்லியமான நேரத்தை கணக்கிடும் குவார்ட்ஸ் கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன. முதலாவதாக உருவான குவார்ட்ஸ் கடிகாரத்திற்கு ‘ஜனதா கடிகாரம்’ என பெயரிடப்பட்டு விற்பனைக்கு வந்தது.

பெண்கள் அதிகமாக வேலைகளில் அமர்த்தப்படுவதில்லை என்ற குற்றசாட்டு பெருவாரியாக எழுந்த 1986 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கு தங்களது தொழிலகங்களில் வேலை கொடுக்க முடிவு செய்தார்கள். தற்சமயம் 5600 பணியாளர்கள் ஜனதா குழுமத்தில் பணியாற்றுகிறார்கள். அதிலே 5000 பேர் அதாவது 96% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓதவாஜி மற்றும் பிரவின் இருவரும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை கொடுத்தனர். ஒருவர் ஒரு மாதத்திற்கு 100 கடிகாரங்களை உருவாக்குவதன் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு 1.35 கோடி சுவர் கடிகாரங்களை உருவாக்கினார்கள்.

1991 – 1996 க்கு இடைப்பட்ட கால இடைவெளியில் Ajanta Orpat என்ற கிளை நிறுவனத்தை துவங்கினார்கள். இந்த நிறுவனம் 1996 ஆம் ஆண்டு முதல் கால்குலேட்டர் மற்றும் டெலிபோன் உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்தது. விரைவிலேயே இந்தியாவின் மிகப்பெரிய கால்குலேட்டர் உற்பத்தியாளர் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றது. அதன் பிறகு அந்த நிறுவனம் பல்வேறு வீட்டு உபயோகப்பொருள்கள் தயாரிப்பிலும் ஈடுபட ஆரம்பித்தது.

ஓதவாஜி அவர்களின் பேரன் நெவில் படேல் [Nevil Patel] தற்போது இந்த அஜந்தா குழுமத்தை வழிநடத்தி வருகிறார். இவரது தலைமையின் கீழாக நிறுவனத்தின் நிகர லாபத்தை 2025 க்குள் 2500 கோடி அளவிற்கு  உயர்த்துவதே லட்சியம் என சொல்லியிருக்கிறார். வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் பழுதான பொருள்களை சீரமைக்கும் பகுதிக்கு தனது அப்பா பிரவின் வாரத்திற்கு ஒருமுறையாவது சென்றுவிடுவார் என குறிப்பிடும் நெவில், வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்ட மாற்றத்தை விரும்புகிறார்கள், எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கிறார்.

55 ரூபாய் சம்பளம் பெரும் அறிவியல் ஆசிரியர் மிகப்பெரிய ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது. நமக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது.


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular