Friday, May 10, 2024
HomeSuccess Storiesஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை | Success Story Of Asian Paints

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை | Success Story Of Asian Paints

Asian Paints – இந்தியாவில் முதன்மையான பெயிண்ட் நிறுவனமாகவும் ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய பெயிண்ட் நிறுவனமாகவும் விளங்கக்கூடிய ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints] நான்கு நண்பர்களால் சிறிய அறையில் தான் துவங்கப்பட்டது. ஏசியன் பெயிண்ட்ஸ் இன்று இவ்வளவு பெரிய நிறுவனமாக எப்படி வளர்ந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

பற்பசை ஒன்றின் பெயரைக்கூறுங்கள் என்று எவரேனும் கேட்டால் பொதுவாக அனைவரும் சொல்லக்கூடிய பெயர் ‘கோல்கேட்’ என்பதாகத்தான் இருக்கும். அதுபோலவே தான் ஒரு பெயிண்ட் நிறுவனத்தின் பெயரைக்கூறுங்கள் என எவரேனும் கேட்டால் பொதுவாக நாம் சொல்லக்கூடிய பெயர் ‘ஏசியன் பெயிண்ட்ஸ்’. அந்த அளவிற்கு நம் மக்களின் மனங்களில் சிறந்த பிராண்டாக ஊடுருவி இருக்கிறது ஏசியன் பெயிண்ட்ஸ். அந்த அளவிற்கு பெயிண்ட் துறையில் சாதனை படைத்திருக்கிறது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம்.

1942 – இரண்டாம் உலகப்போரின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் பெயிண்ட்டுகள் இறக்குமதிக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பெரிய பெயிண்ட் நிறுவனமாக Shalimar paints [ஷாலிமார் பெயிண்ட்ஸ்] மற்றும் சில வெளிநாட்டு பெயிண்ட் நிறுவனங்களின் பெயிண்டுகள் தான் சந்தைகளில் கிடைத்தன. இந்தியா விடுதலை போராட்டத்தில் கடுமையாக பங்கேற்று இருந்த அந்த நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தனது போராட்டத்தை வலுப்படுத்திக்கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 26 வயதேயான சம்பக்லால் சோக்ஸி [Champaklal Choksey] அவரது மூன்று நண்பர்களுடன் சிமன்லால் சோக்ஸி, சூர்யகாந்த் டானி, அரவிந்த் வாகில் [Chimanlal Choksi, Suryakant Dani, and Arvind Vakil] ஆகியோருடன் இணைந்து ஒரு சிறிய அறையில் பெயிண்ட் உற்பத்தி செய்திடும் நிறுவனத்தை துவங்கினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் ஒரு சிறிய அறையில் பெயிண்ட் தயாரிக்க துவங்கியவர்கள் தங்களது பெயிண்ட் நிறுவனத்திற்கு ‘ஏசியன் பெயிண்ட்ஸ்’ என்ற பெயரை சூட்டினார்கள். ஏற்கனவே மார்க்கெட்டில் குறைவான போட்டியாளர்களே இருந்த சூழ்நிலையில் இவர்களின் கடும் முயற்சியால் நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டியது. ஏற்கனவே இருந்த நிறுவனங்கள் மிகப்பெரிய நகரங்களை குறிவைத்து இயங்கிக்கொண்டிருக்க இவர்களோ சாதாரண கிராமங்களை நோக்கி தங்களது வணிகத்தை துவங்கியிருந்தது பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆமாம், 1952 இல் நிறுவனத்தின் நிகர லாபம் 23 கோடி. 1967 இல் இந்தியாவின் முதன்மையான பெயிண்ட் உற்பத்தி செய்திடும் நிறுவனம் என்ற சாதனையை நிகழ்த்தியது ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints]. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாதனையை தன்னகத்தே கொண்டிருக்கிறது ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints] நிறுவனம்.

ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints] நிறுவனம் சாதித்தது எப்படி?

நாம் ஏற்கனவே கூறியது போல ஏசியன் பெயிண்ட்ஸ் தனது விற்பனை நிலையங்களை நகரத்தை மையப்படுத்தி இல்லாமல் பிற நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளை மையப்படுத்தியாக இருந்தது. இதன் விளைவாக, கிராமப்புறங்களில் ஏசியன் பெயிண்ட்ஸ் நல்ல விற்பனையை அடைந்தது. அதன் காரணமாக, நகரத்திலும் மார்க்கெட்டை பிடித்தது. விற்பனையாளர்கள் ஏசியன் பெயிண்ட்ஸ் ஐ கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

மார்க்கெட்டிங் என்பது ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். ஒரு பெயிண்ட் நிறுவனத்தின் பெயரைக்கூறுங்கள் என எவரேனும் கேட்டால் ஏசியன் பெயிண்ட்ஸ் என்று சொல்லும் அளவுக்கு நிறுவனத்தின் பிராண்ட் ஐ மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வேலையை கச்சிதாக செய்துள்ளது இந்நிறுவனம்.

தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் எப்போதும் முன்னோடியாக இருந்துள்ளது. 1970 இல் இந்நிறுவனம் சுமார் 7 கோடிக்கு கணினிகளை வாங்கியது. அப்போது சில நிறுவனங்கள் கணினியை பயன்படுத்தின. ஆனால் அவை வரவு செலவுகளை கணக்கிடவே பயன்படுத்தின. ஆனால் ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints] நிறுவனம் எங்கே பெயிண்ட் தேவை இருக்கிறது, விற்பனை எங்கெல்லாம் எப்படி நடைபெறுகிறது என்பதை data analytics மூலமாக கண்டறிந்து விற்பனையை ஊக்குவித்தது.

இன்றைய நிலவரப்படி, ஏசியன் பெயிண்ட்ஸ் குழுமம் உலகம் முழுவதும் 15 நாடுகளில் இயங்குகிறது. இது ஏசியன் பெயிண்ட்ஸ் [Asian Paints], ஏசியன் பெயிண்ட்ஸ் பெர்கர் [Asian Paints Berger], எஸ்சிஐபி பெயிண்ட்ஸ் [SCIB Paints], அப்கோ கோட்டிங்ஸ் [Apco Coatings] மற்றும் டவுப்மேன்ஸ் [Taubmans], காஸ்வே பெயிண்ட்ஸ் [Causeway Paints] மற்றும் கடிஸ்கோ [Kadisco] ஆகிய எட்டு பிராண்டுகள் மூலம் ஆசியா, மத்திய கிழக்கு, தென் பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு பிராந்தியங்களில் இயங்குகிறது.

ஏசியன் பெயிண்ட்ஸ் எப்போதும் சந்தையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஆராய்ச்சிகளில் [research] முதலீடு செய்து வருகிறது. ஆகவே தான் ஒவ்வொரு முறையும் நாம் மாறுபட்ட தொழில்நுட்பத்தை ஏசியன் பெயிண்ட்ஸ் அறிமுகப்படுத்துவதை பார்க்க முடிகிறது.

உலகம் முழுமைக்கும் 26 உற்பத்தி நிலையங்களை கொண்டிருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 65 க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 1,50,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களை கொண்டிருக்கிறது.

தனது பிராண்ட் பெயரை மார்க்கெட்டில் தக்கவைக்க விளம்பரத்திலும் முதலீடு செய்து வருகிறது ஏசியன் பெயிண்ட்ஸ். இப்போதும் கூட விதவிதமான ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரங்களை நம்மால் காண முடிகிறது. குறிப்பாக ஏசியன் பெயிண்ட்ஸ் என்ற தாய் நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதோடு சக பிராண்டுகளான அல்டிமா, ராயல் போன்றவற்றையும் பிரபல்யப்படுத்தி வருகிறது.

வெறுமனே பெயிண்ட் என்றில்லாமல் டிசைனோடு சுவரை அழகுபடுத்துவதிலும் ஏசியன் பெயிண்ட்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் எந்த நிறம் வேண்டுமென சொல்கிறாரோ அந்த நிறத்தை துல்லியமாக தயார் செய்திடும் முறையையும் ஏசியன் பெயிண்ட்ஸ் கையாள்கிறது. வெள்ளை நிற பெயிண்டில் குறிப்பிட்ட நிற மாதிரிகளை வெவ்வேறான அளவுகளில் கலக்கும் போது புதுமையான நிறங்களை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது ஏசியன் பெயிண்ட்ஸ்.

தொடர்ச்சியாக நல்ல பொருளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல், புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், விளம்பரங்களின் வாயிலாக பிராண்ட் மதிப்பை உயர்த்துதல், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல், ஆராய்ச்சிகளில் முதலீடு செய்தல் போன்ற காரணங்களால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நம்பர் 1 பெயிண்ட் கம்பெனி என்ற சாதனையை தன்னகத்தே கொண்டிருக்கிறது ஏசியன் பெயிண்ட்ஸ்

TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular