நண்பர்களுக்கு CAT பரீட்சைக்கு பயிற்சி அளிக்கத்துவங்கிய ரவீந்திரனின் பயணம் இன்று மில்லியன் டாலர் கம்பெனியை உருவாக்கியதில் வந்து சேர்ந்திருக்கிறது. எப்படி நடந்தது இந்த அசாத்தியப்பயணம் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
‘BYJU’ லேர்னிங் ஆப் பற்றிய விளம்பரங்களை தற்போது நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். தற்போது இந்தியாவில் மிகப்பிரபல்யமாக மாணவர்களால் பயன்படுத்தப்படும் இந்த ஆப்பானது உலக அரங்களிலும் கால்பதிக்க காத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை உருவாக்கியவரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான ரவீந்திரன் தற்போது பில்லியனர் வரிசையில் இணைந்திருக்கிறார். இது அவரே எதிர்பார்க்காதது. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இதில் 21 சதவீத பங்குகளை ரவீந்திரன் வைத்திருக்கிறார்.
நண்பர்களுக்கு பயிற்சி
அடிப்படையில் பொறியாளரான ரவீந்திரன் சில ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு 2003 இல் சொந்த ஊர் திரும்பினார். அங்கே தனது நண்பர்கள் சிலர் CAT தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்க அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தார். ஆரம்பத்தில் இது டியூஷன் போன்று இல்லாமல் அவர் விருப்பத்தின் அடிப்படையில் உதவினார். பெங்களூருவில் நடைபெற்ற தேர்வில் அவரும் கலந்துகொண்டார். அந்தத்தேர்வில் அவர் 100% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்தார்.
மீண்டும் சில நண்பர்களுக்கு பயிற்சி அளித்து 2005 ஆம் ஆண்டு தேர்வில் அவர் எத்தகைய தயாரிப்பும் செய்யாமல் தேர்வில் கலந்துகொண்டார், அந்த தேர்விலும் அவர் 100% மதிப்பெண்களை பெற்றார். இந்தமுறை IIM நடத்திய A, B, C என்ற மூன்று கட்ட நேர்முகத்தேர்விலும் கலந்துகொண்டு தேர்ச்சி அடைந்தார். ஆனால் கல்லூரியில் இணைந்து MBA பட்டம் பெறுவதைவிட மாணவர்களுக்கு எப்படி இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைவது என்பதை சொல்லித்தரலாம் என்கிற முடிவுக்கு வந்தார் ரவீந்திரன்.
பயிற்சி மையம் உருவானது
ஆரம்பத்தில் எந்தவித பெரிய விளம்பரங்களும் இன்றித்தான் இவர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத்துவங்கினார். ஆனால் இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தொடர்ச்சியாக நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற ஆரம்பித்த பிறகு மக்களே இவரது பயிற்சி குறித்து பேசத்துவங்கினார்கள். 2007 ஆம் ஆண்டு மிகப்பெரிய அரங்கில் 1000 மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கும் அளவுக்கு உயரத்துவங்கியது இவரது பயிற்சி மையம்.
தொடர்ச்சியாக நல்ல தேர்ச்சி சதவிகிதம் கிடைக்கவே 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக முக்கிய 9 நகரங்களில் இவரது பயிற்சி மையம் அமையப்பெற்றது. ஆமாம், ஒரு வாரத்திற்கு 9 நகரங்களில் இருக்கும் பயிற்சி மையங்களுக்கும் நேரடியாக சென்று பயிற்சி எடுப்பதை வழக்கப்படுத்திக்கொண்டார் ரவீந்திரன்.
ஆன்லைனுக்கு மாறிய பயிற்சி மையம்
மிகப்பெரிய அரங்குகளில் பயிற்சி தரும் போது மாணவர்களிடம் என்ன சந்தேகம் எழுகிறது என்பதை அவ்வளவு எளிதாக கேட்டு அதற்கு விளக்கம் அளித்திட இயலாது. ஆனாலும் அதற்கான தீர்வை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது பைஜூ. 2011 ஆம் ஆண்டு ஆன்லைனில் வீடியோ மூலமாக பயிற்சி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவரிடம் பயிற்சி பெற்று IIM இல் பயின்று வரும் மாணவர்களும் இதற்கு உதவினார்கள். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் மிக முக்கியமான வீடியோக்களை உருவாக்கும் பணிக்காக இந்த அணி செலவிட்டு இருக்கிறது.
அடுத்ததாக, மாணவர்கள் பாடங்களையும் சில அடிப்படை விசயங்களையும் புரிந்துகொள்ளும் விதமான வீடியோக்களையும் இந்த அணி தயாரித்தது. 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்குமான பாடங்கள் தயாரிக்கப்பட்டன. இவர்களின் அனிமேஷன் கலந்த விளக்கங்கள் மாணவர்கள் எளிமையாக பாடங்களை புரிந்துகொள்வதற்கு உதவியாக இருப்பதாகவும் ஆகவே மாணவர்களின் வரவேற்பை பெற்றதாகவும் கூறுகிறார் ரவீந்திரன்.
வழக்கம் போல நேரடியாக பயிற்சி அளிப்பதை தொடர்ந்துகொண்டு ஆன்லைனில் பாடங்களை கற்றுக்கொடுக்கும் முறையையும் தொடர்ந்தார் ரவீந்திரன். மாணவர்களுக்கு ஒரு விசயத்தை பற்றிய முழு புரிதலையும் ஏற்படுத்துவது தான் முழு நோக்கமும் என்ற ரீதியில் தான் பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ரவீந்திரனின் உண்மையான பலம்
இன்று ‘BYJU’ ஆப்பை பல மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களை சேர்ந்தவர்களும் கூட பயன்படுத்துகிறார்கள். ‘BYJU’ ரவீந்திரனும் கூட கேரளாவில் இருக்கும் ஒரு கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்தான். நாமெல்லாம் நினைப்பதைப்போல வெறும் புத்தகங்கள் மட்டுமே ரவீந்திரனின் வெற்றிக்கு காரணமல்ல. அவரது வெளியுலக அனுபவம் தான் தனக்கு உலகில் நடப்பவை பற்றிய அறிமுகத்தை தந்தன . பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் பல்வேறு விளையாட்டு அணிகளில் இடம்பெற்றிருந்தது வெளியுலகம் பற்றிய புரிதலுக்கு பேருதவியாக இருந்தது என்கிறார் ரவீந்திரன்.
BYJU வின் உண்மையான நோக்கம்
தற்போது மாணவர்கள் தேர்வுக்கு படிக்கிறார்கள், தேர்வு முடிந்த பிறகு மறந்துவிடுகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் புரிதலின்றி படிப்பது தான். BYJU வின் உண்மையான நோக்கம் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி மனப்பாடம் செய்வது என்ற நிலையிலிருந்து புரிந்துகொள்வது என்ற நிலைக்கு மாற்றுவது தான். ஒரு தொழில்முனைவோராக நாங்களும் சில பிரச்சனைகளை சந்தித்தோம் என்று சொல்லும் ரவீந்திரன், ஆசிரியர் – பள்ளி – மாணவர் – தேர்வு என்ற ரீதியிலேயே பழக்கப்பட்டுப்போன பெற்றோர்களுக்கு ஒரு ஆப்பில் வீடியோ பார்த்து எங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ளப்போகிறார்களா என்ற தயக்கம் இருந்து வந்தது.
இதனாலேயே இலவசமாக சில தரவுகளை வழங்கிடுவதை வழக்கமாக்கிக்கொண்டோம். அதனை பார்க்கும் பிள்ளைகளின் புரிதலில் மாற்றத்தை உணரும் பெற்றோர்கள் கற்றுக்கொள்வதற்காக தங்களது பிள்ளைகள் மொபைல் பார்ப்பதனால் மகிழ்ச்சி அடைகிறார்கள். தொடர்ச்சியாக வீடியோக்களை பார்த்து கற்றுக்கொள்ளும் மாணவர்கள் ஒரு ஆண்டுக்கு கட்டணம் கட்டி படிக்கும் அளவுக்கு மாறுகிறார்கள்.
தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இதில் 21 சதவீத பங்குகளை ரவீந்திரன் வைத்திருக்கிறார். இந்தியாவில் இருக்கும் பில்லியனர்கள் பட்டியலில் தற்போது ரவீந்திரன் அவர்களும் இணைந்திருக்கிறார். தனக்கு தெரிந்த ஒரு விசயம், நம்பிக்கை, புதுமையை புகுத்துதல் போன்றவற்றை கடைபிடித்து முயற்சி செய்தால் நிச்சயமாக நீங்களும் பில்லியனர் ஆகலாம்.
‘BYJU’ ரவீந்திரனின் பயணம் உங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறதா? உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.
தாமஸ் ஆல்வா எடிசன் எனும் கண்டுபிடிப்புகளின் பேரரசன்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை
அலிபாபா நிறுவனர் ஜாக் மா சாதித்தது எப்படி?
கேமரான் ஜான்ஸன் 19 வயதில் மில்லியனர்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.