Friday, May 10, 2024
HomeBiographyஅலிபாபா நிறுவனர் ஜாக் மா சாதித்தது எப்படி? | Jack Ma Success Story in...

அலிபாபா நிறுவனர் ஜாக் மா சாதித்தது எப்படி? | Jack Ma Success Story in Tamil

Jack Ma – Success Story – நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர முயற்சித்து நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். KFC யில் கூட வேலை கிடைக்கவில்லை. ஆனால் முயன்றேன் வென்றேன்.

 – ஜாக் மா

அமெரிக்காவில் பில்கேட்ஸ், இந்தியாவில் முகேஷ் அம்பானி போன்றவர்கள் எப்படி மிகப்பெரிய பணக்காரர்களாக அறியப்படுகிறார்களோ, புதிதாக தொழில் துவங்குவோருக்கு ஆதர்சன நாயகர்களாக இருக்கிறார்களோ அதனைப்போலவே சீனாவில் உள்ளவர்களுக்கு ஜாக் மா [Jack Ma] தான் ஆதர்சன நாயகன். வெறும்கையுடன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆன்லைன் உலகை ஆட்டிப்படைத்துவரும் அலிபாபா என்ற நிறுவனத்தை தனது கடும் முயற்சியினால் கட்டமைத்தவர்தான்  ஜாக் மா [Jack Ma]. இந்தப்பதிவில் அவர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத்தான் பார்க்க இருக்கிறோம்.

நிராகரிப்பிற்கு மிகவும் பிடித்தவர்

நிராகரிப்பு நிச்சயமாக ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு விசயத்தில் ஏற்பட்டே தீரும். அதனை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு முன்னேறுகிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியாக கருதுகிறவர்கள் காலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகிறார்கள். அலிபாபா நிறுவனர் ஜாக் மா [Jack Ma] பல நிராகரிப்புகளை தனது வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார். 

அலிபாபா நிறுவனர் ஜாக் மா

 

அக்டோபர் 15, 1964 ஆம் ஆண்டு ஹாங்சௌ என்ற இடத்தில் தான் ஜாக் மா பிறந்தார். 

இவருக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை உண்டு. இவர்களின் இளமைக்காலத்தில் செல்வசெழிப்பான குடும்பமாக இவர்களது குடும்பம் இருக்கவில்லை. ஜாக் மா நன்றாக படிக்கக்கூடிய மாணவனும் இல்லை. ஆகவே பள்ளிப்படிப்புகளை சில வகுப்புகளை இரண்டு மூன்று முறை படித்துதான் கரையேறினார். ஒருவழியாக படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம் என்றால் வேலையும் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. KFC இல் மேலாளர் பணிக்கு விண்ணப்பித்த 24 பேர்களில் இவருக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை என தனது அனுபவங்களை குறிப்பிடும் போது ஜாக் மா சொல்கிறார். அந்த அளவிற்கு நிராகரிப்பு அவரை துரத்தியது. 

படிப்பில் சுட்டியாக இல்லாவிட்டாலும் கூட கல்வி ஒன்று தான் ஒருவரை உயர்த்தும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார் ஜாக். அதேபோல ஆங்கில மொழி கற்றுக்கொள்வதிலும் அவர் ஆர்வத்தோடு பங்கேற்றார். இந்த ஆர்வத்தின் காரணமாக ஹாங்சௌ வில் இருக்கும் ஒரு ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பித்தார். அங்கு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை. படித்து முடித்துவிட்டு வெளியே வந்த அவர் ஆங்கில ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அவருக்கு சம்பளம் $10 தான். இவரிடம் பல மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்று வெளியேறினார்கள். இதன் தொடர்ச்சியாக சியாங் காங் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பையும் முடித்தார் ஜாக் மா. 

இண்டெர்நெட் அறிமுகம் – அலிபாபா உதயம்

1994 ஆம் ஆண்டு ஜாக் மா- விற்கு இண்டெர்நெட்  பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. இண்டெர்நெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கப்போகிறது என நினைத்த இன்றைய ஜாம்பவான்களில் ஒருவர் ஜாக் மா வும் ஒருவர். ஆம் அவர் இண்டெர்நெட்  மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகிறது என நம்பினார். நம்பியதோடு மட்டுமில்லாமல் அது பற்றி கற்றுக்கொள்ள ஆர்மபித்தார், நண்பர்கள் உதவியோடு அமெரிக்காவிற்கு சென்று கற்றுக்கொண்டார். அப்போதைய ஆரம்ப கால கூகுள் நிறுவனத்தில் Google Search இல் சீனா பற்றிய தகவல்களை தேடிப்பார்த்தார் ஜாக் மா. ஒரு தகவலும் கிடைக்கவில்லை, காரணம் எவரும் அதுபற்றிய தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவைக்கவில்லை. ஜாக் மா முதலில் தேடியது சீன பீர் பற்றித்தான் என சொல்லுவார்கள். 

ஜாக் மா இண்டெர்நெட்  துறையில் இறங்கலாம் என முடிவெடுத்தபோது பலர் அவரது முடிவை ஒரு முட்டாள்தனமான முடிவு என விமர்சித்தார்கள். உனக்கு இண்டெர்நெட் , கம்ப்யூட்டர் பற்றி என்ன தெரியும் என விமர்சனம் செய்தார்கள். ஆனால் ஜாக் மா அவற்றை எல்லாம் புறம் தள்ளினார். கடன் வாங்க வங்கியிடம் முயற்சித்தபோது அதிலும் தோல்வியே மிஞ்சியது. பிறகு 18 தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற $50,000 உடன் நிறுவனம் துவங்கப்பட்டது. மிகவும் கடுமையாக உழைத்தார் ஜாக் மா, அதற்கு காரணம் இருந்தது. அவர் மட்டுமே இது வெற்றி அடையும் என நம்பிக்கை கொண்டிருந்தார். 

 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு டாலர் கூட வருமானம் கிடைக்கவில்லை என கூறும் ஜாக் மா ஆனாலும் இந்த நிறுவனத்தை நடத்துவதற்கு காரணம் இருக்கிறது, நான் கொண்ட நம்பிக்கை வீண் போகாது என நம்புவதற்கு காரணம் இருக்கிறது என சொல்வதற்கு காரணம், இவரது இணையதளத்தின் மூலமாக தகவல்களை பெற்றவர்கள் பெரும் நன்மை அடைந்திருந்தார்கள். அவர்களில் நிறையபேர் நன்றி சொல்லி ஜாக் மா விற்கு மின்னஞ்சல்களை அனுப்பி வந்தனர். பிறருக்கு நாம் நன்மை செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்திடும்போது நாமும் நிச்சயமாக வளர்வோம் என ஜாக் மா கூறுவார். அது உண்மையாக மாறியும் போனது. 

ஆரம்ப காலத்தில் அலிபாபா, சீனாவில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் சந்திக்கிற பிரச்சனைகளை சரிசெய்திட உதவுகிற நிறுவனமாக தனது பயணத்தை துவங்கியது, பின்னர் உலக அளவில் இதன் நீட்சி அதிகரித்தது. தற்போது அலிபாபா பல்வேறு கிளை நிறுவனங்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

ஜாக் மா சொல்லும் ரகசியம்

பில் கேட்ஸ் , வாரன் பப்பெட், மார் ஷூக்கர்பெர்க் , லாரி பேஜ் என பலரும் சாதித்ததற்கு மிகப்பெரிய காரணம் என்ன தெரியுமா? அவர்கள் காலத்தை குறை கூறாமல் பிறர் சந்தித்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். இளைஞர்களுக்கு செய்தியாக ஜாக் மா சொல்வது என்னவென்றால் நீங்கள் மிகச்சிறந்த தொழில்நுட்பம் இருக்கின்ற நூற்றாண்டில் வாழும் வாய்ப்பை பெற்று இருக்கிறீர்கள். இளைமை பருவமும் கூடவே இருக்கிறது. குறை கூறாதீர்கள், குறை கூறினால் உங்களது பார்வைக்கு வாய்ப்புகள் தெரியாமல் போய்விடும். ஆகவே வாய்ப்புகளை தேடுங்கள், அதில் உங்களது கவனத்தை செலுத்துங்கள். இன்றைய தலைமுறைக்கு மாலை பொழுதில் நல்ல யோசனைகள் தோன்றுகின்றன.

அலிபாபா நிறுவனர் ஜாக் மா வெற்றிக்கதை

ஆனால் அதிகாலை எழுந்தவுடன் அனைத்தையும் மறந்துவிட்டு எப்போதும் போல வேலைக்கு செல்ல துவங்கிவிடுகிறார்கள். இதுதான் பிரச்சனை. ஒரு சிறந்த தொழில்முனைவோராக உருவாவதற்கு பிறர் சிந்திப்பதற்கு முன்னதாக நீங்கள் சிந்திக்க வேண்டும். பிறர் எழுவதற்கு முன்னதாக நீங்கள் எழ வேண்டும். மற்றவர்களை காட்டிலும் தைரியம் மிக்கவராக நீங்கள் இருக்க வேண்டும். யார் நம்புகிறார்கள் என்பது முக்கியமில்லை. உங்களது நண்பர்கள், முதலீட்டாளர்கள், நண்பர்கள் எவர் நம்பாவிட்டாலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தொடர்ந்து போராடுங்கள். உங்களுக்குள் ஓர் குரல் கேட்கும் அந்த குரலுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். தோல்வி அடையுங்கள் ஆனால் மீண்டும் எழுந்து விடுங்கள். இவை தான் ஜாக் மா தற்கால இளைஞர்களுக்கு கூறிக்கொள்ளும் செய்தி.

பில்கேட்ஸை வென்ற ஜாக் மா

அனைவருக்கும் போல பில்கேட்ஸ் தான் ஜாக் மா அவர்களுக்கும் நாயகன். பில்கேட்ஸ் அவர்கள் செய்த தொழில்நுட்ப சாதனைகளைப்போல தன்னால் செய்திட முடியாது என அடக்கமாக சொல்லும் ஜாக் மா ஒரு விசயத்தில் தான் அவரை வென்று விட்டதாக கூறுகிறார். வேறொன்றுமில்லை, பில்கேட்ஸ் தனது 58 வயதில் தான் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு அறக்கட்டளை ஒன்றினை நிறுவி பொதுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆனால் ஜாக் மா தனது 55 ஆம் வயதிலேயே தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தனது ஆசிரியர் பணிக்கே திரும்பிவிட்டார். இதில் தான் பில்கேட்ஸ் அவர்களை தான் முந்திவிட்டதாக ஜாக் மா கூறுகிறார். 

மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் வெற்றிக்கதை

ஆசிரியர் பணி தான் எனக்கு மிகவும் பிடித்தமான பணி, நான் மீண்டும் ஆசிரியர் பணிக்கு செல்லவிருக்கிறேன். இது எனக்கு முடிவு அல்ல, துவக்கம் தான் – ஜாக் மா.

Read this also : பில்கேட்ஸ் பில்லியனர் ஆனது எப்படி?

TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular