Saturday, May 11, 2024
Home7 Mattersவங்கி லாக்கரில் உள்ள பொருள் தொலைந்தால் யார் பொறுப்பு? வங்கி லாக்கர் நடைமுறை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள பொருள் தொலைந்தால் யார் பொறுப்பு? வங்கி லாக்கர் நடைமுறை என்ன?

நகை உள்ளிட்ட அதிக மதிப்புடைய பொருள்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு பெரும்பான்மையான வங்கிகள் வங்கி லாக்கர் (Bank Locker) வசதியினை வழங்குகின்றன. இதற்காக கட்டணமாக குறிப்பிட்ட தொகையை வங்கிகள் வாடிக்கையாளரிடம் இருந்து வசூல் செய்துகொள்ளும். ஒருவேளை வங்கி லாக்கர் திருடு போனாலோ அல்லது அதில் உள்ள பொருள்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ வங்கி பொறுப்பாகுமா? இந்தக்கேள்வி பலருக்கும் உண்டு. இந்தப்பதிவில் வங்கி லாக்கர் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது.

உள்ளே :

வங்கி லாக்கர் : எப்படி பெறுவது?

வங்கி லாக்கர் : கட்டணம் எவ்வளவு?

வங்கி லாக்கர் : நடைமுறை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள பொருள் தொலைந்தால் யார் பொறுப்பு?

வங்கி லாக்கர் மோசடி தடுப்பு ஏற்பாடுகள்

வங்கி லாக்கர் : எப்படி பெறுவது?

வங்கி லாக்கர் உங்களுக்கு எந்த வங்கியில் வேண்டுமோ அந்த வங்கியில் கணக்கு இருந்தால் போதுமானது. வங்கி லாக்கருக்கு அதிகப்படியான தேவை இருக்கிறது. ஆகவே, உங்கள் வங்கியில் லாக்கர் காலியாக இருக்கிறதா என அறிந்து கொள்ளுங்கள். வங்கி லாக்கர் காலியாக இருந்தால் நீங்கள் வங்கியை அணுகலாம். வங்கி மற்றும் உங்களுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு உங்களிடம் வங்கி லாக்கர் சாவி ஒப்படைக்கப்படும்.

வங்கி லாக்கர் : கட்டணம் எவ்வளவு?

வங்கி லாக்கருக்கான கட்டணம் வங்கி, அமைந்துள்ள இடம், லாக்கரின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும். வங்கி லாக்கர் கட்டணம் குறைந்தது ரூ 500 துவங்கி ரூ 3000 வரைக்கும் இருக்கும். முக்கியமான நகரங்களில் உள்ள வங்கிகளில் சிறிய அளவிலான லாக்கர் ரூ 2000, நடுத்தர அளவிலான லாக்கர் ரூ 4000 மற்றும் பெரிய லாக்கர் ரூ 8000 வரைக்கும் இருக்கும். இதுவே, நகரத்தை தவிர்த்த இடங்களில் உள்ள வங்கிகளில் சிறிய அளவிலான லாக்கர் ரூ 1500, நடுத்தர அளவிலான லாக்கர் ரூ 3000 மற்றும் பெரிய லாக்கர் ரூ 6000 வரைக்கும் இருக்கும்.

வங்கி லாக்கர் : நடைமுறை என்ன?

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு லாக்கரை வைத்துக்கொள்ள முடியும். ஒருவேளை முதன்மையான நபர் இறக்கும் பட்சத்தில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட நபர் (nominee) சரியான ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் லாக்கரை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார். nominee யை நியமிக்கவில்லை எனில் சட்டப்பூர்வ வாரிசு என்ற சான்றிதழை சமர்பிப்பவர் லாக்கரை திறக்க அனுமதிக்கப்படுவார். 

வங்கியில் இருக்கும் ஒவ்வொரு லாக்கருக்கும் இரண்டு சாவிகள் இருக்கும். ஒன்று லாக்கர் உரிமையாளரிடமும் இன்னொன்று வங்கியிடமும் இருக்கும். ஒருவேளை வங்கி லாக்கரை தொலைந்துவிட்டால் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்திவிட்டு மீண்டும் சாவியை பெற்றுக்கொள்ளலாம்.

வங்கி லாக்கரில் உள்ள பொருள் தொலைந்தால் யார் பொறுப்பு?

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி லாக்கர் தொடர்பிலான விதிகளை மாற்றி அமைத்தது. அது ஜனவரி 2022 முதல் நடைமுறைக்கு வந்தது. வங்கியில் லாக்கர் என்ற ஒரு விசயம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கமே மதிப்பு மிகுந்த பொருள்களை பாதுகாப்பாக வைப்பதற்காகத்தான். வங்கிகளில் உள்ள லாக்கர் திருடு போகும் அவலம் பல இடங்களில் நடைபெறுவதை காண முடிகிறது. அப்படி, வங்கி லாக்கரில் உள்ள பொருள்கள் திருடுபோனால் அதற்கு வங்கிகள் பொறுப்பு அல்ல என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், வங்கி லாக்கரில் உள்ள பொருள்கள் சேதம் அடைந்தாலோ அல்லது திருடு போனாலோ வங்கிகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள முடியாது எனவும் தெளிவுபட இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகள் தெளிவாக கூறுகிறது. 

உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கினை, பொகாரோ ஸ்டீல் சிட்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்து இருந்தது. கோபால் பிரசாத் மஹந்தி என்கிற 80 வயது நபர் தனது சேமிப்பு அனைத்தையும் வங்கி லாக்கரில் சேமித்து வைத்து உள்ளார். ஆனால் 2017 ஆம் ஆண்டு இந்த வங்கியில் நடைபெற்ற திருட்டில் வங்கி லாக்கரில் உள்ள அனைத்தும் திருடு போனது. வங்கியானது தனக்கும் இதற்கும் பொறுப்பில்லை என ஒதுங்கிக்கொண்டபோது நுகர்வோர் தீர்ப்பாயம் வாடிக்கையாளருக்கு 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு போட்டது. ஆனால், வங்கி லாக்கரில் என்ன இருக்கிறது? அது எவ்வளவு மதிப்பிலானது என்பதெல்லாம் வங்கிக்கு தெரியாது. அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி நஷ்ட ஈடு கொடுக்க முடியும் என தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வங்கி. 

வழக்கினை விசாரித்த நீதிமன்றம், வங்கியினை நம்பியே வங்கி லாக்கரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படி நம்பி வாடகைக்கு லாக்கரை எடுத்தவர்களை வங்கிகள் தட்டிக்கழிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது. மேலும், வாடிக்கையாளருக்கு 30 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு போட்டது. இதனை அடுத்து வங்கி லாக்கர் உள்ள வங்கிகள் கொண்டிருக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 

100 மடங்கு இழப்பீடு செலுத்த வேண்டும்

ரிசர்வ் வங்கி வெளியிட்ட விதியின்படி, லாக்கரில் இருந்து எதுவும் திருடப்பட்டால், வங்கி இழப்பீட்டு இழப்பாக வாடிக்கையாளருக்கு 100 மடங்கு செலுத்த வேண்டும். வங்கி லாக்கர்களில் திருட்டு நடப்பதாக எழுந்த புகாரே இந்த விதியை பிறப்பித்ததற்கு காரணம்.

லாக்கர் விவரங்களை வெளியிட வேண்டும் 

வங்கி லாக்கர் விசயத்தில் வங்கிகள் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை அடுத்து, காலி லாக்கர் விவரங்கள், லாக்கரின் காத்திருப்பு பட்டியல் எண்ணையும் காட்ட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

வங்கி லாக்கர் மோசடி தடுப்பு ஏற்பாடுகள்

சிசிடிவி காட்சிகள் கட்டாயம்

லாக்கர் அறைக்கு வருபவர்களையும், செல்வோரையும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பதை கட்டாயமாக்க வேண்டும். மேலும், சிசிடிவி காட்சிகளின் தரவுகள் ஆறு மாதங்களுக்கு சேமிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு குறைபாடு அல்லது திருட்டு நடந்தால், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரிக்க முடியும்.

SMS வசதியை ஏற்படுத்த வேண்டும் 

வங்கி லாக்கரை பயன்படுத்த ஒருவர் வங்கிக்கு வரும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரியப்படுத்த வேண்டும். 

அனைத்து பாதுகாப்புகளையும் கடந்து வங்கி லாக்கரில் உள்ள பொருள்கள் திருடுபோனால் வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேடிக்கொள்ள பயனாளருக்கு முழு உரிமையும் உண்டு என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular