Warp Drive In Tamil
வார்ப் டிரைவின் முதல் அறிவியல் கோட்பாடு 1994 இல் தோன்றியது, இயற்பியலாளர் மிகுவல் அல்குபியர் [Miguel Alcubierre] ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டைப் பயன்படுத்தி இயற்பியல் விதிகளின் எல்லைக்குள் ஒளியை விட வேகமாக பயணிக்க அனுமதிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கினார். தொழில்நுட்ப ரீதியாக, விண்வெளி கப்பலானது ஒளியை விட வேகமாக பயணிக்காது.
ஐன்ஸடீன் அவர்களின் E = mc2 கோட்பாட்டின்படி ஒளியைவிடவும் வேகமாக பயணிக்கும் ஒரு விண்வெளிக் கப்பலை உருவாக்க முடியாது, காரணம் அதற்கு மிகப்பெரிய ஆற்றல் மூலம் தேவைப்படும் என்பதோடு அதில் பல்வேறு சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. ஆனாலும், ஒளியை விடவும் வேகமாக பயணிக்க முடியும் என்பதற்கான மாற்று யோசனைகளை தொடர்ச்சியாக விண்வெளி ஆய்வாளர்கள் வைத்துக்கொண்டே வருகிறார்கள். அவை அனைத்தும் இன்றைய அளவில் வெறும் கருதுகோள்கள் என்று வைத்துக்கொண்டாலும் எதிர்காலத்தில் அவை சாத்தியப்பட வாய்ப்பே இல்லை என்று மறுத்துவிடவும் முடியாது. காரணம், இந்த பிரபஞ்சம் பற்றி அறியாத பல ரகசியங்கள் இருக்கவே செய்கின்றன என்பதனால் தான். இந்தப்பதிவில் ஒளியை விடவும் வேகமாக பயணிக்க சாத்தியமான வார்ப் டிரைவ் [Warp Drive] குறித்து விரிவாக பேசலாம்.
பூமிக்கு அருகில் இருக்கும் நட்சத்திர மண்டலம் என்பது ப்ராக்ஸிமா சென்டாரி [Proxima Centauri]. இது பூமியில் இருந்து 4.25 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. ஒளியானது அதன் வேகத்தில் ஒரு ஆண்டு பயணித்தால் எவ்வளவு தூரம் பயணிக்குமோ அது ஒரு ஒளி ஆண்டு என பொருள். ஒருவேளை ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு விண்வெளிக்கப்பல் நம்மிடம் இருந்தால் சுமார் நான்கரை ஆண்டுகளில் அங்கே சென்றுவிட முடியும். ஆனால், மனிதன் இதுவரைக்கும் உருவாக்கியதில் அதிவேகமாக பயணிக்கும் திறனுடைய Parker Solar Probe இன் அதிகபட்ச வேகமே 450,000 mph. இந்த வேகத்தில் பயணித்தால் கூட சென்டாரி நட்சத்திர மண்டலத்திற்கு சென்று சேர 6,633 ஆண்டுகள் ஆகும். இத்தனை ஆண்டுகள் பயணம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆகவே தான் ஒளியின் வேகத்தில் செல்லக்கூடிய விண்வெளி பயணத்தை வடிமைப்பதில் விஞ்ஞானிகள் பல்வேறு கருத்துக்களை முன்மொழிந்து வருகிறார்கள்.
அப்படி விஞ்ஞானிகளால் முன்மொழியப்படும் கருதுகோள்களை அடிப்படையாக வைத்து பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் வந்துள்ளன. இதற்கு சிறந்ததொரு உதாரணம், ஸ்டார் டிரக் திரைப்படம். அதேபோல, வார்ம் ஹோலை பயன்படுத்தி கிரகம் விட்டு கிரகம் பயணிக்கும் மாயையை தோர் செய்துகொண்டே இருப்பார். ஆனால் இவையெல்லாம் இதுவரைக்கும் சாத்தியப்படாத வெறும் எழுத்தளவில் உள்ள மாற்று யோசனைகள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
Warp Drives
வார்ப் டிரைவின் முதல் அறிவியல் கோட்பாடு 1994 இல் தோன்றியது, இயற்பியலாளர் மிகுவல் அல்குபியர் [Miguel Alcubierre] ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டைப் பயன்படுத்தி இயற்பியல் விதிகளின் எல்லைக்குள் ஒளியை விட வேகமாக பயணிக்க அனுமதிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கினார். தொழில்நுட்ப ரீதியாக, விண்வெளி கப்பலானது ஒளியை விட வேகமாக பயணிக்காது. ஆனால் ஒளியை விட வேகமாக பயணிக்கும். அடிப்படை அறிவியல் விதியை மீறாத இந்த புதிய கோட்பாடு இதனால் தான் முக்கியத்துவம் பெறுகிறது.
ஸ்டார் ட்ரெக்கின் வானியல் இயற்பியலாளரும் அறிவியல் ஆலோசகருமான டாக்டர் எரின் மெக்டொனால்ட் இதுபற்றி கூறும் போது “ஒரு விண்வெளி கப்பலை ஒளியின் வேகத்தில் இயக்க முடியாது என்று தான் இருக்கிறது. ஆனால் விண்வெளி நேரமே [space-time] அந்த வேகத்தில் பயணிக்க முடியாது என்று எங்கும் சொல்லப்படவில்லை” என்று கூறுகிறார். உதாரணத்திற்கு, இந்த பிரபஞ்சம் அனைத்தும் ஒரு தட்டையான விண்வெளி நேரத்தில் [space-time] தான் நகர்ந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு பொருளும் அதன் நிறைக்கு ஏற்றவாறு அதோடு பிணைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு ரயில் தான் விண்வெளி நேரம் [space-time] என வைத்துக்கொள்வோம். ரயிலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு கார் ஆனது இயங்காவிட்டாலும் கூட அது ரயிலின் வேகத்தில் தான் பயணிக்கும் அல்லாவா. அதுபோலவே, விண்வெளி நேரத்தில் நமது விண்வெளி கப்பலுக்கு முன்புறத்தில் ஒரு குமிழியை உருவாக்கினால் நமது விண்வெளி கப்பலால் ஒளியை விடவும் வேகமாக பயணிக்க முடியும் என்பது தான் இந்த அறிவியல் முன்மொழிவின் அர்த்தம்.
ஆனால் அப்படி ஒரு குமிழியை செயற்கையாக உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்கிறார்கள். அதற்கு சூரியனின் ஆற்றலை விடவும் மிகப்பெரிய ஆற்றல் தேவைப்படுமாம். அதேபோல, எதிர்மறை ஆற்றலும் தேவைப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதைப் பற்றி சிந்திக்க ஒரு வழி எதிர்மறை நிறை கொண்ட ஒரு துகளை கருத்தில் கொள்வது. இந்த துகள்கள் ஈர்ப்பு விசைக்கு நேர்மாறான துகள்களுக்கு நேர்மாறாக வினைபுரியும். ஒரு கிரகம் அல்லது நட்சத்திரத்தை நோக்கி இழுக்கப்படுவதற்குப் பதிலாக, அவை தூக்கி எறியப்படும். பூமியை நோக்கி ஈர்க்கப்படாமல் எதிர்க்கப்படும்.
வார்ப் டிரைவில் சாத்தியப்படாத பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக ஜோஸ் நடாரியோ என்கிற கணிதவியல் வல்லுநர் விவரிக்கிறார். எதிர்மறை ஆற்றல் என்பது நாம் தற்போது உருவாக்கக்கூடிய ஒன்றல்ல. ஆற்றல் எப்படி எதிர்மறையாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார். மேலும் இதில் இருக்கும் முக்கியமானதொரு சிக்கலையும் அவர் விவரிக்கிறார். ஒலியின் வேகத்தில் ஒரு அதிவேக விமானம் பயணிக்கிறது என்றால் அது நம்மை கடந்து போன பிறகு தான் அதன் சத்தம் நம்மை வந்தடையும். அதுபோலவே தான், ஒளியின் வேகத்தில் நம்முடைய விண்வெளி கப்பல் பயணித்தால் அதற்கு முன்பாக ஒரு செய்தியை அனுப்பி அங்கே குமிழியை ஏற்படுத்துவது முடியாது என்கிறார்.
இன்னும் இதுசார்ந்து இயங்கக்கூடிய வல்லுனர்களும் ஒளியின் வேகத்தை விடவும் அதிவேகத்தில் பயணிக்கும் ஒரு விண்வெளி கப்பலை அடுத்த ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குள் கூட உருவாக்க முடியாது என்கிறார்கள்.
அனைத்து சவால்களையும் கடந்து ஒரு விண்வெளி கப்பல் ஒளியை விடவும் வேகமாக பயணிக்கும் காலம் வந்தால் நமக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அப்போது நாம் ஏலியன்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.