Thursday, November 21, 2024
HomeTech Articlesஏலியன்ஸ் இருப்பது இருப்பது உண்மையா? | UFO In Tamil | Aliens In Tamil

ஏலியன்ஸ் இருப்பது இருப்பது உண்மையா? | UFO In Tamil | Aliens In Tamil

அவ்வப்போது ஏலியன்ஸ் வாகனம் UFO பறப்பது போன்ற வீடியோக்களும் அமெரிக்கா ஏலியன்ஸ்களை பிடித்து வைத்திருக்கிறது போன்ற செய்திகளும் அடிக்கடி வந்தவண்ணம் இருக்கிறது. இன்று அறிவியலாளர்களிடம் இருக்கின்ற ஆகச்சிறந்த கேள்விகளில் ஒன்று “பூமிக்கு வெளியே வேறொரு இடத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா?” என்பதுதான். இதற்காக பல்வேறு நாடுகளும் தனியார் அமைப்புகளும் மிகப்பெரிய தொகையை செலவு செய்கின்றன. ஆனாலும் திரைப்படங்களில் மட்டுமே நம்மால் ஏலியன்களையும் வேற்றுகிரகங்களையும் காண முடிகிறது.

விண்ணை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்

உண்மையில், பூமியைத்தாண்டி விண்வெளியின் ஏதோ ஒரு இடத்தில் நம்மைபோன்றதொரு உயிரினம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? இதுவரை முடியவில்லையே ஏன்? அதிலிருக்கும் சவால்கள் என்னவென்பது குறித்துதான் இந்தக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

ஏலியன்ஸ் இருக்க வாய்ப்பு இருக்கிறதா?

1995 ஆம் ஆண்டு மைக்கேல் மேயர் [Michel Mayor] மற்றும் டிடியர் யூலோஸ் [Didier Queloz] இருவரும் பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனை சுற்றிவருவதைப்போலவே வேறொரு கோள் இன்னொரு நட்சத்திரத்தை சுற்றிவருவதை கண்டறிந்தனர். இதற்காக இவர்களுக்கு இயற்பியல் துறையில் 2019 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இருந்த கல்லொன்றில் பாக்டீரியா இருந்ததாக கூறப்பட்டது. இந்த கூற்றுகளுக்கு பின்னர் தான் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடலில் வேகம் எடுக்க துவங்கியது.

ஏலியன்ஸ்

 

இதனை ஊக்கப்படுத்தும் விதமான கண்டுபிடிப்பை நாசாவின் கெப்ளர் விண்கலம் நிகழ்த்தியது. அது 2700 புற கிரங்கங்களை கண்டறிந்து கூறியது. ஆனால் இந்த விண்வெளி நாம் நினைப்பதைவிடவும் மிகப்பெரியது.  நமது சூரிய மண்டலம் என்பது விண்வெளியில் இருக்கும் பில்லியன் நட்சத்திர மண்டலங்களில் ஒன்றுதான். நம்மைப்போலவே ஒரு நட்சத்திரத்தை பல கோள்கள் சுற்றிவருவதைப்போன்ற அமைப்புகளும் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது ஏன் இங்கிருப்பதை போன்றதொரு சூழல் அங்கும் இருந்திருக்கக்கூடாது? ஏன் நம்மை போன்ற அல்லது நம்மை விடவும் அறிவுத்திறன் வாய்ந்த உயிரினம் ஒன்று இருக்கக்கூடாது என்பதே ஏலியன்ஸ் இருக்கலாம் என நம்பப்பட காரணம்.

பூமிக்கு வெளியே ஏலியன்ஸ் எங்கே இருக்கலாம் என்ற கேள்விக்கு பதில் கூறும் விதமான பார்முலா ஒன்றினை 1961 இல் பிரான்சிஸ் ட்ராக்கே கூறினார். ஆனால் அதுவொரு சிக்கலான பார்முலாவாக இருந்தது. அந்த பார்முலாவிற்கு தேவையான புள்ளிவிவரங்களை சேகரிப்பதே மிகவும் சவாலான காரியம். அதாவது, குறிப்பிட்ட நேரத்தில் புதிய கிரகங்கள் எத்தனை உருவாகின்றன, அவற்றில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்ட கிரகங்கள் எத்தனை, நாம் கண்டறிவதற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை கொண்டுள்ள உயிரினங்கள் எத்தனை கிரகங்களில் இருக்கலாம், நம்மை தொடர்புகொள்ள அவர்களில் எத்தனைபேருக்கு விருப்பம் இருக்கிறது என நீண்டுகொண்டே போனது அந்தப்பட்டியல். இவற்றிக்கு நாம் எந்த அளவிற்கு துல்லியமாக பதில் கூறுகிறோமோ அந்த அளவிற்கு துல்லியமாக பதிலை பெறலாம் என கூறினார். இதிலிருந்து கிடைக்கும் தகவல் சரியானதாக இருக்கிறதோ இல்லையோ அறிவியலாளர்கள் மத்தியில் ஒருவித ஆர்வத்தை இவரது கோட்பாடு தூண்டியது.

ஏலியன்ஸ்களை கண்டறிவதில் என்ன சிக்கல் இருக்கிறது?

ஏலியன்ஸ்களை கண்டறிவதில் என்ன சிக்கல் இருக்கிறது?

“செய்வாய் கிரகத்தில் உயிர்களை கண்டறியும் அளவிற்கு இந்த உலகம் இன்னும் தயாராகவில்லை”  – இந்த வார்த்தைகளை கூறியவர் நாசாவின் மிக மூத்த விஞ்ஞானி ஜிம் கிரீன் [Jim Green]. அவர் இப்படி கூறியதற்கு மிகமுக்கியக்காரணம், நாம் வெளியுலகில் இருக்கின்ற உயிரினங்களை கண்டறிவதற்கு இன்னும் மிகச்சிறப்பான தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடையவேண்டும் என்பது தான். அதற்க்கு நாம் எடுக்கின்ற சிறு சிறு முயற்சிகள் தான், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்புவது, மிகப்பெரிய தொலைநோக்கிகளை உருவாக்குவது போன்றவை அனைத்துமே.

ஏலியன்ஸ் இல்லாமலே கூட இருக்கலாம்

ஏலியன்ஸ்

ஏலியன்ஸ் இருக்கலாம் என மனிதன் நம்புவதற்கு மிகமுக்கியக்காரணம் ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட மூலக்கூறுகள், வெப்பநிலை, சூழல் இவை இருந்தால் நிச்சயமாக காலப்போக்கில் உயிரினம் தோன்றும் என்பது அறிவியல். அப்படிதான் பூமியிலும் உயிரினம் தோன்றின, பரிணாம வளர்ச்சியினால் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் உருவாகின. வளிமண்டலத்தில் நமது சூரிய மண்டலத்தைப்போலவே பில்லியன் கணக்கில் நட்சத்திர மண்டலங்கள் இருக்கின்றன. ஆகவே அவற்றில் சில மில்லியன் நட்சத்திர குழுமத்திலாவது பூமியைப்போன்று ஒரு நட்சத்திரத்தை கோள்கள் சுற்றிவர வாய்ப்புண்டு. அதைப்போலவே சில ஆயிரக்கணக்கிலான கிரகங்களிலாவது நம்மைபோன்றதொரு சூழல்கள் அமையப்பெற்று உயிரினங்கள் வாழ வாய்ப்பிருக்கிறது என்பது நம்புவதற்கு மிக முக்கியக்காரணம்.

ஆனால் அப்படியொரு சூழல் கொண்ட கோள் உருவாகாமல் கூட இருக்கலாம் அல்லவா. அப்படியானால் ஏலியன்ஸ் என்ற ஒன்று இல்லாமல் கூட இருக்கலாம்.

ஏன் நம்மைப்போன்றே அறிவார்ந்த உயிரினமாக இருக்கவேண்டும்

விண்ணை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்

பூமி போன்றதொரு சூழலுடன் கோள்கள் இருக்கின்றன என்றே வைத்துக்கொள்வோம். ஏன் மனிதன் போன்றதொரு “தேடல்” கொண்ட அறிவார்ந்த உயிரினம் உருவாகியிருக்க வேண்டும்? இதே பூமியில் இருக்கக்கூடிய மனிதன் தவிர்த்து எண்ண முடியாத உயிரினங்கள் இருக்கின்றனவே அவற்றைபோன்று இருந்திருந்தால் அவை எப்படி ரேடியோ அலைகளை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்ய முயற்சி செய்யும், நம்மை தேடி பயணம் மேற்கொண்டிருக்கும், நாம் அனுப்புகின்ற ஒலி அலைகளை கேட்டு நமக்கு பதில் அளிக்கும். இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறதல்லவா

நமக்கு முன்னரே கூட அழிந்திருக்கலாம்

நியூ ஹாரிஸான் [New Horizons]

அண்டவெளியில் இருக்கக்கூடிய சில நட்சத்திர மண்டலங்கள் 11.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கின்றன. நமது நட்சத்திர மண்டலமோ வெறும் 4.5 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே பழமையானவை. ஆகவே இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட விபத்துகளினால் கூட நம்மைபோன்றதொரு அறிவார்ந்த இனம் இருந்திருந்தாலும் அழிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் இன்னொரு சூட்சமமும் இருக்கிறது. மனிதன் ஆண்டுகள் ஆக ஆகத்தான் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்துகொண்டிருக்கிறான். அப்படிப்பார்த்தால் நமக்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே நம்மைபோன்றதொரு அறிவார்ந்த விலங்கினம் உருவாகி இருந்தால் தற்போது நம்மைவிட பலமடங்கு முன்னேறிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொண்டு இருக்கும். ஆகவே தான் விண்வெளியில் இருந்து வரக்கூடிய இரைச்சல்களில் ஒழிந்திருக்கும் செய்திகளை நம்மால் பிரித்து புரிந்துகொள்ள இயலவில்லை எனவும் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

தொழில்நுட்ப சவால்கள் என்ன?

விண்ணை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்

நாம் தற்போது தான் மிகப்பெரிய தொலைநோக்கியை வடிவமைப்பதில் முன்னேற்றம் அடைந்துவருகிறோம். அந்தவகையில் ஹப்பிள் தொலைநோக்கியானது விண்வெளி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுத்தது. அதற்கடுத்து பல்வேறு தொலைநோக்கிகள் தற்போது களத்தில் இறங்க இருக்கின்றன. ஆகவே இன்னும் சிறப்பான துல்லியனமான விண்வெளி குறித்த தகவல்களை நாம் பெறப்போகிறோம். ஆனால் அந்தக்கருவிகளை வைத்துக்கொண்டு நாம் இங்கிருந்து தான் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். அப்படி கிடைக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு சில கணிப்புகளை நடத்திட முடியும். ஆனால் உண்மையை சொல்லவேண்டுமானால் நாசாவின் மூத்த விஞ்ஞானி  ஜிம் கிரீன் [Jim Green] சொல்வதைப்போல செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு கூட நாம் இன்னும் தொழில்நுட்ப அளவில் தயாராகவில்லை என்பதே உண்மை.

நம்மிடம் தற்போது இருக்கக்கூடிய விண்வெளி வாகனங்களை வைத்துக்கொண்டு மிகவும் குறைந்த வேகத்திலேயே பயணிக்க முடியும். அப்படி இருக்கும் போது பல நூறு அல்லது ஆயிரம் ஒளி ஆண்டுகள் தாண்டி இருக்கும் கிரகங்களுக்கு சென்று எப்படி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். ஒளி ஒரு ஆண்டு எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ அவ்வளவு தூரம் தான் ஒரு ஒளி ஆண்டு. மனிதர்கள் வடிவமைத்ததிலேயே அதிகபட்ச வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது நியூ ஹாரிஸான் [New Horizons] தான். ஒருமணி நேரத்தில் 58,500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வல்லது நியூ ஹாரிஸான் செயற்கைகோள். அந்த வேகத்தில் பயணம் செய்தால் கூட ஒரு ஒளி ஆண்டு தூரத்தை கடப்பதற்கு 20,000 ஆண்டுகள் ஆகும்.

இத்தனை சவால்களையும் ஒரே நேரத்தில் நம்மால் கடந்து செல்ல முடியாது, படிப்படியாகத்தான் நாம் செல்லவேண்டி இருக்கிறது. நிச்சயம் ஒருநாள் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை மனித இனம் அடையும். அன்று நம்மைப்போன்ற ஏலியன்ஸ் இந்த பேரண்டத்தில் இருக்கின்றனவா என தெரிந்துவிடும். அப்போது நாம் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.

 

 மனித இனத்தின் முயற்சி தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular