Saturday, May 11, 2024
HomeBiographyயார் இந்த சர் சிவி ராமன்? Raman effect in tamil

யார் இந்த சர் சிவி ராமன்? Raman effect in tamil

சர் சிவி ராமன் புகைப்படம்

Sir CV Raman

ஒளியியல் துறையில் மிகச்சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு சர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆசிய அளவில் அறிவியல் துறைக்காக முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் இவரே. இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான வாசலை திறந்து வைத்தவர் என்று பெருமையோடு கூறலாம்.


 

இந்தியாவில் இருந்து படித்தாலும் கூட ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை உங்களுக்குள் விதைத்துக்கொண்டு இருந்தால் ஒருநாள் நிச்சயமாக நோபல் பரிசு வெல்லும் அளவிற்கு மிகப்பெரிய சாதனைகளை அறிவியல் துறையில் நிகழ்த்துவிட முடியும் என 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் நிரூபித்துக்காட்டிவிட்டார் என்றால் அவர் சர்  சிவி ராமன் தான். பெற்றோர்களுக்கு அவர் சொல்லிக்கொள்ளும் ஒரே ஒரு அறிவுரை – பிள்ளைகள் எதாவது கேள்விகளை கேட்டால் அதை தவிர்த்துவிடாமல் அதற்கு பதில் கூறுங்கள் என்பதுதான். 

இன்னும் பல சாதனையாளர்களின் வெற்றி பயணங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்

சர் சிவி ராமன் இளமைப்பருவம்

சர் சிவி ராமன் புகைப்படம்

தமிழகத்தில் இருக்கும் திருச்சி மாவட்டத்தில் நவம்பர் 7, 1888 ஆம் நாள் சிவி ராமன் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் அய்யர் மற்றும் பார்வதி அம்மா. சிவி ராமன் அவர்களின் முழுப்பெயர் சந்திரசேகர வெங்கட ராமன் என்பதாகும். இவரது தந்தை திரு சந்திரசேகர் அய்யர் கணிதம் மற்றும் இயற்பியல் துறையில்  பேராசிரியராக இருந்தபடியால் இளம்வயதிலேயே அது சார்ந்த பல புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு சிவி ராமன் அவர்களுக்கு கிடைத்தது. அவரது தந்தை விசாகப்பட்டினத்தில் வேலை பார்த்தபடியால் அங்கேயே தனது பள்ளிப்படிப்பை முடித்தார் சிவி ராமன். 

பின்னர் கல்லூரி படிப்பிற்காக சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1903 ஆம் ஆண்டு ஒருநாள் வகுப்பறைக்குள் சிவி ராமன் அவர்கள் செல்வதற்கு உள்ளே இருந்த பேராசிரியர்  எலியட் [Professor Eliot] அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது ஒரு சிறு பையனாக இருந்தபடியால் நீ இந்த வகுப்பு தானா என ஆச்சர்யத்தோடு கேட்டார் எலியட். உனது பெயர் என்ன என மீண்டும் கேட்க சிவி ராமன் என பெயர் சொன்னார். இந்த பெயர் நோபல் அரங்கில் ஒலிக்கப்போகிறது என அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. 

முதல் மாணவனாக இருந்த சிவி ராமன்

இளம் வயதிலேயே அறிவியல் மீது பெரிய ஆர்வம் கொண்டவராக இருந்தார் சிவி ராமன். 1905 ஆம் ஆண்டு பிரெசிடெண்சி கல்லூரியில் BA வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்த ஒரே மாணவர் இவர் மட்டுமே. அப்போது முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கமும் வென்றார] . பிறகு அதே கல்லூரியில் முதுகலை பிரிவில் இயற்பியல் [(study of matter and energy) பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க துவங்கினார். 

 

இயல்பிலேயே கவனிக்கும் ஆற்றல் மற்றும் புத்திகூர்மை உடைய பிள்ளையாகவே சிவி ராமன் இருந்தபடியால் அவரை கேள்விகள் எப்போதும் துரத்திக்கொண்டே இருந்தன. கல்லூரியில் நடத்தப்படும் பாடங்களை தாண்டி வீட்டில் நூலகத்தில் என பல்வேறு புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார். அவர் எப்போதும் மூன்று கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்வார்  “எப்படி?” “ஏன்?” “இது உண்மையா?” என்பதுதான் இந்த மூன்று கேள்விகள். எந்தவொரு விசயத்தையும் இந்த கேள்விகளுக்குள் புகுத்தி தெளிவுபடுத்திக்கொள்வார் சிவி ராமன். 

 

ஆரம்ப காலங்களில் ஒலியியல் [sound] குறித்து அறிந்துகொள்வதில் பெரிதும் நாட்டம் காட்டினார். இவருடைய 18 ஆம் வயதிலேயே இவருடைய ஆராய்ச்சி கட்டுரை இங்கிலாந்து நாட்டின் ‘Philosophical Magazine’ இதழில் வெளியிடப்பட்டது. இன்னொரு ஆராய்ச்சி கட்டுரை நேச்சர் [Nature] இதழில் வெளியிடப்பட்டது. 

பணியும் அறிவியல் ஆர்வமும்

சிவி ராமன் அவர்களின் சகோதரர் சிஎஸ் அய்யர் இந்திய நிதித்துறையில் பணியாற்றினார். ஆகவே தானும் அதே துறையில் சேர்ந்து பணியாற்றலாம் என்று எண்ணிய சிவி ராமன் அதற்காக தேர்வு எழுத படிக்கத்துவங்கினார். தேர்வுக்கு முந்தைய நாள் தான் MA தேர்வின் ரிசல்ட் வெளியானது . அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருந்தார் சிவி ராமன். இதற்கிடையில் 1907 ஆம் ஆண்டு லோகசுந்தரி அம்மாள் அவர்களுடன் இவருக்கு திருமணம் நடந்தேறியது. 

 

மிகச்சிறப்பாக போட்டித்தேர்வை எழுதிய சிவி ராமன் அந்தத்தேர்வில் முதலிடம் பெற்று கொல்கத்தாவில் பணிக்கு சேர்ந்தார். இந்திய நிதித்துறையில் அவர் பணியாற்றினாலும் கூட கிடைக்கும் நேரங்களில் அவரது கவனம் அறிவியல் பக்கம் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது. அதற்கு ஊக்கம் தரும் நிகழ்வொன்று அப்போது நடந்தது. அவர் அலுவலகத்தில் இருந்து செல்லும் வழியில் “‘Indian Association for the Cultivation ” என்ற போர்டை பார்த்தார். அதுவொரு அறிவியல் ஆய்வுகளை செய்வதற்கான பரந்த இடம் மற்றும் பழைய அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களை கொண்டிருந்த இடம். அதன் அப்போதைய நிர்வாகியாக டாக்டர் அம்ரித்லால் இருந்தார். அவரிடம் சென்று நான் ஓய்வு நேரங்களில் இங்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளலாமா எனக்கேட்டார் சிவி ராமன். அதற்கு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார் டாக்டர் அம்ரித்லால். ஒருகட்டத்தில் தனது வீட்டையே அந்த சோதனைக்கூடத்திற்கு அருகில் மாற்றிக்கொண்டார். ஒரு கதவு மட்டும் தான் வீட்டிற்கும் அந்த சோதனைக்கூடத்திற்கும் இடைவெளியாக இருந்தது. 

 

அப்போது பர்மாவும் இந்தியாவும் ஒரே அரசாங்கம் போன்றது. ஆகவே அவர் பணி நிமித்தமாக ரங்கூனுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அப்போது அவர் அப்பா இறந்து போகவே 6 மாத விடுப்பில் இங்கு வருகிறார். இறுதிச்சடங்குகளை முடித்த அவர் பிறகு இருந்த விடுமுறைக்காலங்களை சென்னை கல்லூரியின் அறிவியல் சோதனைக்கூடங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள செலவிட்டார். பிறகு 1915 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் கல்லூரி ஒன்று திறக்கப்பட்டது. அங்கு தாரக்நாத் பலிட் [Taraknath Palit] அவர்களின் நினைவாக இயற்பியல் துறைக்கான ஒரு இருக்கை உருவாக்கப்பட்டது. அங்கு பணியில் சேர சிவி ராமன் அவர்களுக்கு வாய்ப்பு வந்தது. அவர் இதற்கு முன்பிருந்த பணி மிகவும் அதிகாரம் வாய்ந்த அதிகம் சம்பளம் பெறுகின்ற பணியாக இருந்தபோதிலும் கூட தனக்கு நெருக்கமான பேராசிரியர் பணிக்காக அவர் அதனை விட்டுக்கொடுத்தார். அறிவியல் ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள இந்த பேராசிரியர் பணி உதவும் என அவர் நினைத்திருக்கலாம்.

கடல் பயணத்தில் கண்டுபிடிப்பு

அவர் இங்கிலாந்து நாட்டிற்கு கடல் மார்க்கமாக பயணம் செய்தார். அப்போது இரவு நேரங்களில் கப்பலின் மேல்தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்துப்பார்ப்பார். அப்போது அவருக்குள் இருந்த அறிவியல் அறிஞன் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டான். கடல் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது? வானத்தின் நீல நிறம் பட்டுத்தான் கடல் நீலமாக காட்சி அளிக்கிறதா? அப்படியானால் ஏன் இரவு நேரத்தில் கூட கடல் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது? அப்போதே அவருக்கு சந்தேகம் பிறந்துவிட்டது, சூரியனில் இருந்து வரும் ஒளியினை இந்த கடல்நீரின் மூலக்கூறுகள் எதிரொலிப்பதில் இருந்துதான் நீல நிறம் தோன்றுகிறது என யோசித்தார். கல்கத்தா வந்தவுடன் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்த சிவி ராமன், ஒரு ஆய்வறிக்கை ஒன்றினை லண்டனில் இருக்கும் ராயல் சொசைட்டிக்கு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்த ஆண்டு மூலக்கூறுகள் ஒளியை எதிரொளிக்கும் குறித்த முழு கட்டுரையை வெளியிட்டார். 

ராமன் விளைவு

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.

 

இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.

 

இவருடைய ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் பலவற்றில் துவங்கின. இவரது ஆய்வறிக்கை வெளியானதற்கு பின்னர் 1800 ஆராய்ச்சிக்கட்டுரைகள் இது சம்பந்தமாக வெளியாயின, கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட வேதியியல் மூலக்கூறுகள் சோதித்துப்பார்க்கப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக ராமன் விளைவு அறிவியலாளர்கள் மத்தியில் பேசப்பட்டது. 

சிவி ராமன் பெற்ற விருதுகள்

உலகின் பல்வேறு விருதுகள் சிவி ராமன் அவர்களுக்கு கிடைத்தது. 1928 ஆம் ஆண்டில் ரோம் நகரில் இருந்த சயின்ஸ் சொசைட்டி அவருக்கு “Matteucci Medal” பட்டம் கொடுத்து கவுரப்படுத்தியது. 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால்  இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், சிவி ராமன் அவர்களுக்கு ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக மிக உயரிய விருதான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் ஆசியாவில் இருந்து அறிவியல் துறையில் சாதித்தமைக்காக நோபல் பரிசு பெறுவது அதுவே முதல்முறை. 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1957 இல் லெனின் அமைதிப்பரிசை வென்றார். இவரது ராமன் விளைவு கண்டறியப்பட்ட தினம் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. 

சிவி ராமன் அறிவுரை

சர் சிவி ராமன் புகைப்படம்

ஒரு பெற்றோர் தங்களது பிள்ளை ஒரு விஞ்ஞானியாக ஆகவேண்டும் என விரும்பினால் அதற்கான கதவை 5 வயதிலேயே திறந்துவிட வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகள் கேட்கின்ற சிறிய கேள்வி முதற்கொண்டு எவற்றையும் புறந்தள்ளாமல் அதற்கு விடை சொல்லவேண்டும் அல்லது அதை தேடித்தெரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். பள்ளி பாடபுத்தகங்களைத்தாண்டி பிற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். இவற்றை செய்தால் ஒருநாள் அந்த குழந்தை விஞ்ஞானியாக மாறி இருப்பான். இதனைத்தான் சர் சிவி ராமன் அடிக்கடி கூறுவார். 

 

படித்ததும் பிறருக்கு இந்த கட்டுரையை பகிர மறந்துவிடாதீர்கள். 

 இன்னும் பல சாதனையாளர்களின் வெற்றி பயணங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular