இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் மிகச்சிறிய அளவில் கூட இந்த பிசினஸை துவங்கி செய்திட முடியும்.
IIT பட்டதாரிகளான நீரஜ் ஜெயின், ஸ்ரேயா மிஸ்ரா மற்றும் புனே பல்கலைக்கழக பட்டதாரி நிகில் நஹர் ஆகிய மூவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் தான் SolarSquare என்கிற ஸ்டார்அப் நிறுவனம். வீடுகளுக்கு சூரிய மின் தகடுகளை [Solar Panels] பொருத்தும் வேலையை இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் செய்துவருகிறது. இந்தியாவின் 16 நகரங்களில் [8 மாநிலங்களில்] இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றிக்கதையை நம் இணையதளத்தில் பதிவிட சில காரணங்கள் இருக்கின்றன. ஒரு நிறுவனம் துவங்கும் போது எதிர்கால திட்டமிடல் எவ்வளவு அவசியம் என்பதையும் தகுந்த நபர்களை நிறுவனத்தில் இணைத்துக்கொள்வதன் முக்கியம் என்னவென்பதையும் இந்த நிறுவனத்தின் வெற்றிக்கதையில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
மேலும் பல வெற்றிக்கதைகளை இங்கே படிக்கலாம்
Solar Energy Business India
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுமைக்குமே சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரிக்கும் சூரிய மின்தகடு பொருத்தும் நிறுவனங்களுக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. கார்பன் உமிழ்வால் நமது சுற்றுசூழல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிவரும் சூழலில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமுமே சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அதிகமாக ஊக்குவிக்கின்றன. அதேபோல, உயர்ந்துவரும் மின்சார கட்டணத்தை குறைக்கும் ஒரு உக்தியாகவும் இதனை மக்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனால், வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சூரிய மின்தகடுகள் பொருத்தும் வேலையை செய்திட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பிஸினஸின் அளவு மிகப்பெரியது என்பதனால் புதிய நிறுவனங்கள் மற்றும் சிறிய சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கூட இந்தத் தொழிலில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன.
அப்படி, இதற்கான வாய்ப்பை உணர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் SolarSquare நிறுவனம். சிறப்பாக சேவையினை வழங்குகின்ற நிறுவனங்கள் சந்தையில் நீடித்து நிற்கும் என்பதற்கு இந்த நிறுவனம் மிகச்சிறந்த உதாரணம்.
SolarSquare ஸ்டார்ட்அப்பின் வெற்றிக்கதை
தொழில்முனைவோர்களான நீரஜ் ஜெயின் மற்றும் நிகில் நஹர் ஆகிய இருவர் தான் SolarSquare என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 2015 முதல் நடத்தி வந்தார்கள். அந்த காலகட்டத்தில் இவர்கள் பெரும் நிறுவனங்களுக்கு சூரிய மின்தகடுகள் பொருத்தும் பணியை மேற்கொண்டு வந்தார்கள். 2020 ஆண்டு தான் இவர்கள் மிகப்பெரிய ஒரு முடிவை எடுத்தார்கள். 100 கோடி மதிப்பிலான தொழிலை நடத்தி வந்த அவர்களது நிறுவனம், இனி கம்பெனிகளுக்கு சோலார் பேனல் நிறுவும் வேலையை குறைத்துவிட்டு குடியிருப்புகளில் சோலார் பேனல் நிறுவும் பணியினை முதன்மையாக செய்வது என்பது தான் அந்த முடிவு.
ஒரு நிறுவனம் நன்றாக சென்றுகொண்டு இருக்கும் போது எதிர்காலத்தை கணித்து சவாலான முடிவை எடுத்தால் தான் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு இவர்களது முடிவு மிகச்சிறந்த உதாரணம்.
ஆனால், வீடுகளில் சோலார் பேனல் பொருத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டுமெனில் தினசரி பொதுமக்களை சந்திக்க வேண்டிய சூழல் வரும். மிகப்பெரிய தொழில் வாய்ப்பு இருக்கிறது என்றாலும் கூட மக்களுக்கு சோலார் பேனல் வைப்பதன் நன்மையைக்கூறி அவர்களை இதற்கு ஒப்புக்கொள்ள வைப்பது மிகப்பெரிய வேலை.
இதற்கு ஒரு சரியான ஆள் SolarSquare நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. நீரஜ் ஜெயினின் மனைவியான ஸ்ரேயா Flyrobe என்கிற பேஷன் சம்பத்தப்பட்ட நிறுவனத்தை நடத்தி வந்தார். மக்களிடத்தில் தொழிலை கொண்டு செல்வதில் வல்லவரான இவரை SolarSquare நிறுவனத்திற்கு கொண்டு செல்ல நீரஜ் மற்றும் நிகில் திட்டமிட்டு அவரிடம் பேசினார்கள். இவர்களது கோரிக்கையை ஏற்று Flyrobe என்கிற நிறுவனத்தை விற்றுவிட்டு SolarSquare இல் இணைந்தார் ஸ்ரேயா. இவர்தான் இப்போது மார்க்கெட்டிங் வேலையை பொறுப்போடு செய்து வருகிறார்.
சுமார் மூன்றரை ஆண்டுகளில் 10,000 திற்கும் மேற்பட்ட வீடுகளில் இவர்கள் சோலார் பேனலை நிறுவி உள்ளார்கள். 130 கோடி அளவிற்கு முதலீட்டை ஈர்த்துள்ள இவர்கள் ஆண்டு வருமானம் 200 கோடி என்பதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார்கள்.
SolarSquare வெற்றிக்கான காரணங்கள் என்ன?
இந்தியா போன்றதொரு நாட்டில் வீடுகளில் சூரிய மின்தகடு பொருத்தும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதை அறிந்து இவர்கள் தங்களது தொழில் யுக்தியை சரியான நேரத்தில் மாற்றியது மிக முக்கியமான காரணம்.
அதேபோல, இவர்கள் வெறுமனே சூரிய மின்தகடுகளை பாதிப்பதோடு அல்லாமல் அதற்கு பின்னர் அதனை பராமரிக்கும் பொறுப்பையும் இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். சூரிய மின்தகடு பொருத்தும் பல சிறிய நிறுவனங்கள் இந்தப் பொறுப்பை ஏற்பது இல்லை. பதித்ததோடு விட்டுவிட்டால் சூரிய மின்தகடுகள் பராமரிப்பு இன்றி வீணாகி விடுகிறது.
இவர்கள், வெறுமனே சூரிய மின்தகடுகளை பொருத்தும் பணியை மட்டும் மேற்கொள்வது இல்லை. மாறாக, இவர்கள் வீட்டு உரிமையாளர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அவர்களை வழிநடத்துகிறார்கள்.
இவர்கள் தங்களது அனுபவத்தின்படி, வீட்டில் பல்வேறு இடங்களில் வைப்பதற்கு ஏதுவான சூரிய மின்தகடுகளை உற்பத்தி செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் மிகவும் குறைவான நேரத்தில் சூரிய மின்தகடுகளை இவர்கள் பொறுத்திவிடுகிறார்கள்.
இவர்களது நிறுவனத்திடம் இருந்து நீங்கள் சோலார் பேனல் பொறுத்த வேண்டுமெனில் நீங்கள் இவர்களை இவர்களது இணையதளம் மூலமாகவோ வாட்ஸ்அப் எண்ணிலோ தொடர்பு கொண்டால் போதும். அவர்கள் இலவசமாக உங்களுக்கு கன்சல்டேஷன் வழங்குவார்கள்.
சோலார் பேனல் பொருத்துவது பயனுள்ள விசயமா?
சூரிய மின்தகடுகளை வீட்டில் பொருத்துவதன் மூலமாக நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதனால் நாம் இப்போது செலுத்துகின்ற மின்சார கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும். இன்னொரு விதத்தில், சுற்றுசூழலை பாதுகாக்க நம்மால் இயன்றதொரு பங்களிப்பாகவும் இது இருக்கும்.
இரண்டு அல்லது மூன்று அறை கொண்ட வீட்டிற்கு 3-kW முதல் 4-kW கொண்ட சோலார் பேனல்களை அமைத்தால் போதுமானது. ஒருவேளை, AC இருந்தால் 5-kW முதல் 6-kW திறன் கொண்ட சோலார் பேனல்கள் அவசியம்.
வீட்டின் மேற்புறத்தில் 3-kW முதல் 4-kW கொண்ட சோலார் பேனல்களை நிறுவ சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரைக்கும் செலவாகும். அதேபோல, சோலார் பேனல்கள் நிறுவ மத்திய அரசு தள்ளுபடியும் வழங்குகிறது. உதாரணத்திற்கு, 3-kW கொண்ட சோலார் பேனல் நிறுவ 2 லட்சம் செலவாகிறது எனில் PM-Surya Ghar: Muft Bijli Yojana திட்டத்தின் கீழ் 78,000 தள்ளுபடியாக பெற முடியும். ஆகவே, 1.2 லட்சத்திலேயே அதனை நிறுவி விட முடியும்.
இந்த நிறுவனம் அளிக்கும் தகவல்படி, முதல் 5 வருடங்களிலேயே மின் கட்டணம் செலுத்தாமல் தவிர்ப்பதன் மூலமாக சோலார் பேனல் அமைக்க நாம் செலவழித்த தொகையை பெற்றுவிட முடியும் எனவும் அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு இலவசமாக மின்சாரத்தை பயன்படுத்த முடியும் எனவும் கூறுகிறார்கள்.
ஆகவே, சோலார் பேனல் பொருத்துவது நன்மை பயக்கக்கூடிய விசயமாகவே இருக்கிறது.
நீங்கள் சோலார் பேனல் பொருத்தும் தொழிலில் ஈடுபடலாம்
மிகப்பெரிய நிறுவனங்கள் மிகப்பெரிய நகரங்களில் தான் சோலார் பேனல் நிறுவும் தொழிலை செய்கிறார்கள். ஆனால், உட்புற பகுதிகளிலும் சோலார் பேனல் பொருத்தவும், பராமரிக்கவும் சிறிய சிறிய நிறுவனங்களுக்கான வாய்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் கண்டிப்பாக சோலார் பேனல் பொறுத்த வேண்டும் என்று கூட அரசு உத்தரவு போடலாம். ஆகவே, இந்தத் தொழிலில் ஈடுபடுவது நல்ல தொழில் வாய்ப்பை தரலாம்.
நமது தளத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருகிறோம். இவை புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சிறந்த யோசனைகளை வழங்கும். உங்களுக்கு பிடித்து இருந்தால் இந்தப்பதிவுகளை சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ்ஆப் தளத்திலும் பகிர்ந்து உதவுங்கள்.