Oneplus Success Story – பிரீமியம் மொபைல் போன்களின் விற்பனையில் ஆப்பிள், சாம்சங் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களை வீழ்த்தியிருக்கிறது ஒன்பிளஸ் மொபைல். வெறும் 5 பேரைக்கொண்டு துவங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்பிளஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 24, 2014 ஆம் நாள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மொபைல் ஒன்பிளஸ் 1 வெளியானபோது இன்னொரு சீன மொபைல் வெளியாகி இருக்கிறது என்றுதான் பலர் நினைத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால் மொபைல் சந்தையையே புரட்டிப்போட்டது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் போன்கள் என்பதுதான் அதன்பிறகு நடந்தவை. இதற்கு மிக முக்கியகாரணம், மிகச்சிறந்த வடிவமைப்பு, கேமரா தொழில்நுட்பம், செயல்படும் திறன் போன்ற மக்கள் எதிர்பார்க்கும் விசயங்களில் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததனால் தான். வெற்றிகரமான இந்நிறுவனத்தை துவங்கியவர்கள் இருவர் – ஒருவர் பீட் லாவ் மற்றொருவர் கார்ல் பெய்.
எப்படி இந்த இருவர் ஒன்பிளஸ் என்ற மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கினார்கள் என்பதனைதான் “ஒன்பிளஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை” என்ற கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
ஒன்பிளஸ் ஓர் அறிமுகம் | Oneplus Introduction
2015 ஆம் ஆண்டு மொபைல் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடைபெற்றது. அதுவரைக்கும் பிரீமியம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்திழுத்துக்கொண்டிருந்த மிகப்பெரிய ஜாம்பவான்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் இந்த இரண்டு நிறுவனங்களையும் முந்திக்கொண்டு இரண்டு வயது மொபைல் நிறுவனம் ஒன்று வெற்றிநடை போட்டுகொண்டு போனது. இந்தியாவில் முதல் இடத்தையும் உலகின் பல்வேறு பகுதிகளில் விரும்பத்தகுந்த மொபைல் போன் நிறுவனமாகவும் ஒன்பிளஸ் வளர்ந்தது.
ஒன்பிளஸ் உருவாக காரணம்
2013 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் துவங்கப்பட்டபோது வெறும் 5 பணியாளர்கள் தான் அதில் இருந்தனர். ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகத்தான் அது துவங்கப்பட்டது. அப்போது நடக்கும் கலந்துரையாடல்களில் பங்கேற்கும் பெரும்பாலானவர்கள் ஆன்ட்ராய்டு நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்துகிற மொபைல் போன்களோ ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போனாக இருக்கும். ஏன் இவர்கள் தாங்கள் பணியாற்றுகின்ற நிறுவனத்தின் மொபைல் போன்களைக்கூட விரும்புவதில்லை என ஆராய்ந்தபோது அதற்கு காரணம் இருந்தது.
மக்களை ஈர்க்காத வடிவமைப்பு, செயல்திறன் குறைவு, சாப்ட்வேர் குறைபாடு போன்ற பிரதான காரணங்களால் தான் மக்கள் அதனை பயன்படுத்தவில்லை. இதைத்தான் ஒன்பிளஸ் தனக்கான சவாலாக எடுத்துக்கொண்டது. இவை அனைத்தையும் சரிசெய்து ஒரு நல்ல மொபைல் போனை வழங்கினால் விலை சற்று அதிகமாக இருந்தால் கூட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என துவங்கப்பட்டது தான் ஒன்பிளஸ்.
கவனிக்க வேண்டியது : நீங்கள் எந்த துறையில் செயல்பட்டாலும் கூட சிறந்த ஒரு பொருளை வழங்கினால் மக்கள் உங்களுக்கான வரவேற்பை தயங்காமல் கொடுப்பார்கள்.
ஒன்பிளஸ் நிறுவனத்தை துவங்கியவர்கள்
2013 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் என்ற சீன மொபைல் நிறுவனம் பிறந்தது. அதனை உருவாக்கியவர்கள் இருவர் ஒருவர் பீட் லாவ் [Pete Lau] மற்றும் கார்ல் பெய் [Carl Pei]. தற்போதைக்கு ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பீட் லாவ் இதற்கு முன்பு ஒப்போ எனும் இன்னொரு மொபைல் நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவி வகித்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
ஒப்போ நிறுவனத்தில் ஹார்டுவேர் என்ஜினியராக பணியை துவங்கி பின்னர் பல்வேறு பணிகளை அடைந்து இறுதியாக அந்நிறுவனத்தை விட்டு வெளியே வரும்போது துணைத்தலைவராக இருந்தார். இப்படிப்பட்ட உயர்ந்த பணியில் இருந்தாலும் கூட பீட் லாவ் [Pete Lau] மற்றும் கார்ல் பெய் [Carl Pei] ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய கனவு ஒன்று இருந்தது.
அவர்கள் இருவரும் அதிக விலை மொபைல் போன்களில் கூட குறைபாடுகள் இருக்கின்றன என இருவரும் கருதினார்கள். அவற்றை நீக்கி ஒரு புது மொபைல் நிறுவனத்தை துவங்க வேண்டும் என இருவரும் விரும்பி துவங்கியது தான் ஒன்பிளஸ்.
விற்பனையில் புது முறையை கையாண்ட ஒன்பிளஸ்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மொபைல் போன் ஒன்பிளஸ் 1 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் மற்ற மொபைல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதைப்போல அல்லாமல் புது முறையில் தங்களது மொபைல் போனை விற்பனைக்கு கொண்டுவர பீட் லாவ் [Pete Lau] மற்றும் கார்ல் பெய் [Carl Pei] விரும்பினார்கள். அதுதான் “Invite” முறையிலான விற்பனை. இந்த புதிய முறை ஒருவித எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் ஒன்பிளஸ் 1 மொபைலுக்கு பெற்றுத்தந்தது. பீட் லாவ் [Pete Lau] மற்றும் கார்ல் பெய் [Carl Pei] இருவரும் எதிர்பார்த்தைக்காட்டிலும் அதிக வரவேற்பை பெற்றது ஒன்பிளஸ் 1 மொபைல். இதன் காரணமாக 2014 இன் இறுதியில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மொபைல் போன்கள் உலகம் முழுமைக்கும் விற்பனையாகின.
பிரச்சனைகளைக் கடந்து அசுர வளர்ச்சி அடைந்த ஒன்பிளஸ்
மற்ற நிறுவனங்களைப்போலவே ஒன்பிளஸ் நிறுவனமும் இந்திய மார்க்கெட்டில் சில ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கவே செய்தது. இந்தியாவில் ஒன்பிளஸ் மொபைல் போன்களை விற்பனை செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதற்கு காரணம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்குதான்.
அதில் சைனோஜென் மோட் [cyanogen mod] இயங்குதளத்தை கொண்டிருக்கும் மொபைல் போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய உரிமம் எங்களுக்குத்தான் இருக்கிறது என்றது மைக்ரோமேக்ஸ். ஆனால் ஒன்பிளஸ் நிறுவனமோ, இந்தியாவிற்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்களுக்கு அது பொருந்தாது என சொல்லியது. டிசம்பர் 24, 2014 அன்று விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.
ஒன்பிளஸ் நிறுவனமோ தனக்கென ஆக்சிஜன் [Oxygen OS] எனும் புதிய இயங்குதளத்தை வடிவமைத்துக்கொண்டது. ஒன்பிளஸ் நிறுவனம் வெற்றி பெற ஆக்சிஜன் இயங்குதளமும் ஒரு காரணம் தான்.
தொடரும் வெற்றி
தொடர்ச்சியாக ஒன்பிளஸ் நிறுவனம் பல்வேறு மொபைல் போன்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. மற்ற ஸ்மார்ட் போன்கள் 10 ஆயிரம் 15 ஆயிரம் என்ற விலையில் இருந்தாலும் கூட 30 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைல் போன்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள்.
அதற்கு காரணம், மிகச்சிறந்த வடிவமைப்பு, சிறந்த இயங்குதளம், நீடித்த திறன் என பொதுவாக பயனாளர்கள் எதிர்பார்க்கும் விசயங்களை ஒன்பிளஸ் பூர்த்தி செய்திருப்பதால் தான். ஒன்பிளஸ் மொபைல் போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் கேட்டுப்பார்த்தால் இந்த வார்த்தைகளை நிச்சயம் சொல்வார்கள்.
மொபைல் துறையில் சாதனை படைத்த ஒன்பிளஸ் நிறுவனம் இன்று ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. அதுவும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்க ஒன்பிளஸ் வச்சுருக்கீங்களா? என்ன மாடல்? எப்படி இருக்கு உங்க மொபைல் செயல்பாடு? கமெண்டில் பதிவிடுங்கள். இந்தப்பதிவை பிறருக்கும் பகிருங்கள்.
TECH TAMILAN
Comment