Asteroid in Tamil
2009 இல் கண்டறியப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியை 2022 வாக்கில் பூமியை தாக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். சுமார் 780 மீட்டர் அகலமுடைய சிறுகோளும் அதனை சுற்றிவரும் 160 மீட்டர் அகலமுடைய நிலவும் பூமியை தாக்கினால் பூமியில் 230 டன் டைனமைட் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் உண்டாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தப்புமா பூமி?
நாம் சிறு விசயங்களுக்காக போட்டி போட்டுகொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கையில் விஞ்ஞானிகள் ஒட்டுமொத்த பூமியையும் காப்பதற்கான வேலையில் மும்முரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பூமியில் இதற்கு முன் உயிர்வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமான டைனோசர்கள் அழிவதற்கு காரணம் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது தாக்கி அதனால் உண்டான தாக்கம் தான். அப்படியொரு நிகழ்வு பூமிக்கு நடந்தால் மனித இனம் உட்பட ஒட்டுமொத்த உயிரினங்களுமே பூமியில் இருந்து காணாமல் போக வாய்ப்பிருப்பதை விஞ்ஞானிகள் அறிந்துள்ளார்கள். ஆகவே தான் அவர்கள் பூமியை நோக்கிவரும் சிறு கோள்கள், விண்கற்கள் ஆகியவைகளின் பாதைகளை ஒவ்வொரு நொடியும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்கள். வாருங்கள் ஆஸ்டெராய்டு குறித்து விரிவாக காண்போம்.
ஆஸ்டிராய்டு என்றால் என்ன?
சூரியனை பூமி,செவ்வாய், புதன் உள்ளிட்ட கிரகங்கள் மட்டும் சுற்றிவரவில்லை. சிறுகோள்கள் மற்றும் பாறைப்பொருள்களும் கூட சூரியனை சுற்றிவருகின்றன. இவையே ஆஸ்டிராய்டு என அழைக்கப்படுகின்றன.
நமது சூரிய மண்டலத்தில் ஏராளமான ஆஸ்டிராய்டுகள் இருக்கின்றன. ஆனால் அதிகபட்சமான ஆஸ்டிராய்டு செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தான் சூரியனை சுற்றி வருகின்றன.
இந்த ஆஸ்டிராய்டுகள் அல்லது சிறுகோள்கள் எங்கிருந்து வந்தன?
சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெல்ல மெல்ல உருவாக ஆரம்பித்தது தான் நமது சூரிய மண்டலம். ஆரம்பத்தில் வாயு மற்றும் தூசிகளாக இருந்தவை தான் பின்னாளில் இணைவுற்று சூரியனாகவும் கோள்களாகவும் மாறின. அதிகப்படியான தூசு மற்றும் வாயு இணைந்து சூரியனாகவும் எஞ்சியவை ஆங்காங்கே கோள்களாகவும் மாறின. இவை இரண்டிலும் இணையாத தூசு மற்றும் வாயு இரண்டும் இணைந்து சிறு சிறு கோள்களாக, பாறைகளாக எஞ்சிவிட்டன. இவற்றால் இனிமேல் எந்தவொரு கிரகத்தோடும் இணைய முடியாது. ஆனால் இவை கோள்களின் மீது அல்லது இன்னொரு சிறு கோளின் மீது மோதலாம்.
அனைத்து ஆஸ்டிராய்டுகளும் ஒரே மாதிரியானவையா?
சூரிய மண்டலத்தில் ஒவ்வொரு கோளும் கூட தனித்துவம் மிக்கவை தான். சூரியனில் இருந்து வேறுபட்ட தொலைவுகளில் ஆஸ்டிராய்டுகள் உருவான காரணத்தால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். பூமி, புதன், செவ்வாய் உள்ளிட்ட பெரிய கோள்களை போன்று கோள வடிவில் கூட அவை இருக்காது. ஒழுங்கற்ற வடிவத்தில் வெவ்வேறு வடிவம் கொண்டதாக ஆஸ்டிராய்டுகள் இருக்கும். அதே போல ஒவ்வொன்றும் வெவ்வேறான உலோகங்களால் ஆனதாக இருக்கும்.
ஆஸ்டிராய்டுகள் பூமிக்கு ஆபத்தை உண்டாக்குமா?
பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே 25,000 சிறுகோள்கள் அல்லது விண்கற்கள் சுற்றிவருகின்றன. இவற்றின் சுற்றுவட்டப்பாதையை ஆராய்ந்து இவற்றால் எப்போதாவது பூமிக்கு ஆபத்து வருமா என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். அப்படி பூமிக்கு அருகே 0.05 AU தொலைவிலோ அல்லது 140 மீட்டருக்கும் அதிகமான அகலத்தையுமோ ஒரு விண்கல் கொண்டிருந்தால் அவற்றை அபாயகரமான பொருள்கள் [potentially hazardous] என வகைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
1 AU என்பது ஒரு 1 வானியல் அலகுகள். அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தூரம் 1 AU என அழைக்கப்படும். 1 AU என்பது 150 மில்லியன் கிலோமீட்டர்கள்.
இவற்றில் இதுவரைக்கும் 900 பொருள்கள் 1 கிலோமீட்டர் அகலம் உடையவை, இவை பூமியை தாக்கினால் பூமியில் பேரழிவு உண்டாகலாம். இதில் இருந்து பூமியை காப்பதற்கு தான் விஞ்ஞானிகள் திட்டங்களை தீட்டிவருகிறார்கள். Asteroid Impact and Deflection Assessment என்பது சிறுகோள் தாக்கம் மற்றும் விலகல் மதிப்பீடு ஆகும்.
டிடிமோஸ் [Didymos] ஆஸ்டிராய்டு பூமியை தாக்கும் என்கிறார்களே?
உண்மை தான், டிடிமோஸ் [Didymos] என்பது பூமியை நெருங்கி வரும் இரண்டு பொருள்கள். இவை தற்போது வரும் வேகத்தை பாதையை கணித்தால் மே 6,2022 வாக்கில் பூமியில் மோதலாம் என கணித்து இருக்கிறார்கள். டிடிமோஸ் [Didymos] இன் முதலாவது சிறுகோள் 780 மீட்டர் விட்டமுடையது. இதனை நிலா போன்று 160 மீட்டர் விட்டமுடைய இன்னொரு பொருள் சுற்றிவருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா [NASA] மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் [European Space Agency] ஆகியவைகளின் முதலாவது குறிக்கோள் இந்த இரண்டு ஆஸ்டிராய்டுகள் தான். இதில் வெற்றியடைந்தால் எதிர்காலத்தில் வரப்போகும் ஆஸ்டிராய்டுகளை எளிதாக தாக்கி அளிக்க ஏதுவாக இருக்கும்.
நாசாவின் கோள்கள் பாதுகாப்பு அதிகாரி லிண்ட்லி ஜான்சன் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிக்கையில், “ஒரு கொலையாளி சிறுகோளை நிறுத்துவதற்கான முதல் படி அதைக் கண்டுபிடிப்பதாகும். அங்கே ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் உள்ளன, மேலும் காலப்போக்கில் நாம் உன்னிப்பாக கவனித்து கண்காணிக்க வேண்டியவற்றை பிரிக்க விரும்புகிறோம். ”
நாசாவின் பட்டியலில் இதுவரை 2,078 அபாயகரமான விண்கற்கள் இருப்பதாக ஜான்சன் வெளிப்படுத்தினார். அக்டோபர் 2022 இல், டிடிமோஸ் எனப்படும் சிறுகோள் பூமிக்கு நெருக்கமாக வரும்.
DART திட்டத்தால் பூமி பாதுகாக்கப்படுமா?
நாசா 2018 வாக்கில் Double Asteroid Redirection Test [DART] திட்டத்தை துவங்கியது. 2021 ஜூலையில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலமாக 2022 இல் நொடிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் டிடிமோஸ் ஆஸ்டிராய்டை மோதுவதற்கு எண்ணியிருக்கிறார்கள். டிடிமோஸ் ஆஸ்டிராய்டை தவிர்த்து அதனை சுற்றிவரும் பொருள் [சந்திரன்] கூட பூமியில் மோதினால் ஒரு நகரத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் வல்லமையை கொண்டிருக்கிறது. ஆகவே நாசாவின் தற்போதைய திட்டத்தில் சந்திரனை மோதுவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு குளிர்சாதனப்பெட்டியின் அளவுள்ள DART மணிக்கு நொடிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் மோதும். அப்படி மோத செல்லும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் கேமரா மூலமாக வெடிப்பின் தாக்கம் கண்காணிக்கப்படும். இந்த மோதல் சந்திரனின் 12 மணி நேர சுற்றுப்பாதையை ஏழு நிமிடங்கள் வரை குறைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு நட்சத்திரம் எப்படி அழிகிறது?
Read Here
ஏன் கடிகாரம் 10:10 இல் வைக்கப்படுகின்றன?
Read Here
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.