Saturday, May 11, 2024
HomeUncategorizedசொந்தமாக கம்பெனி ஆரம்பிக்க போறிங்களா? கவனிக்க வேண்டிய 4 விசயங்கள் 

சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்க போறிங்களா? கவனிக்க வேண்டிய 4 விசயங்கள் 

கோடிக்கணக்கான பேர் வாழ்நாள் முழுவதுமாக வேலை செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். அதிலே சில ஆயிரம் பேர்தான் துணிந்து சொந்தமாக கம்பெனி [ஸ்டார்ட்அப்] துவங்க தைரியமாக வருகிறார்கள். அவர்களிலும் சில நூறு பேரால் மட்டுமே வெற்றிகரமாக அந்த நிறுவனத்தை கொண்டு செல்ல முடிகிறது. இங்கே நாம் பார்க்க இருப்பது, வெற்றிகரமாக சொந்த நிறுவனங்களை நடத்தும் நபர்கள் புதிதாக கம்பெனி ஆரம்பிக்கும் போது செய்தது என்ன, மற்றவர்கள் செய்திட தவறியது என்ன என்பதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம். 

உங்களுக்கு புதிதாக கம்பெனி துவங்கும் ஆசை இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு தேவையானதாக இருக்கும்.

உள்ளே….

  • அடிப்படை பொருளாதார தேவைகளை செய்து கொள்ளுங்கள்
  • எதார்த்தமான திட்டமிடலை செய்திடுங்கள்
  • எதிர்பாராததை எதிர்பாருங்கள்
  • Deadline முக்கியம்

1. அடிப்படை பொருளாதார தேவைகளை செய்து கொள்ளுங்கள்

பலர் புதிதாக நிறுவனம் ஆரம்பிக்கும் போது செய்திடத்தவறும் மிக முக்கியமான விசயம் “எப்போதும் போல வாழ்க்கையை நகர்த்துவதற்கான பொருளாதார ஏற்பாடுகளை செய்திடாமல் புதிய நிறுவனத்தை துவங்குவது தான்”. 

நீங்கள் புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க நினைத்தால் அது உடனடியாக வெற்றிபெறும் என நீங்கள் நம்ப முடியாது. நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அந்த கால இடைவெளிக்கு நீங்கள் உங்களது குடும்பத்தை வழக்கம் போல நடத்துவதற்கான பொருளாதார வசதிகளை செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 

உதாரணத்திற்கு, உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்களது கல்விக்கு தேவையான பணத்தை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டியது அவசியம். நிறுவனத்தில் இருந்து வரும் வருமானத்தில் இருந்து அதனை பார்த்துக்கொள்ளலாம் என நீங்கள் நினைக்கக்கூடாது. ஒருவேளை நீங்கள் நினைத்தது மாதிரி எதுவும் நடக்கவில்லை எனில் நீங்கள் பொருளாதார சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். உங்களது வாழ்க்கையை எப்போதும் போல அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நடத்துவதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்பதை கணக்கிடுங்கள். அதனை தயார் செய்துவிட்டு நீங்கள் புதிய நிறுவனம் துவங்கும் முயற்சியில் ஈடுபட்டால் கவலையே இல்லாமல் தொழிலில் கவனம் செலுத்தலாம். சில ஆண்டுகள் கவலை இல்லாமல் காத்திருக்கவும் கூட செய்யலாம்.

2. எதார்த்தமான திட்டமிடலை செய்திடுங்கள்

புதிதாக ஒரு நிறுவனம் துவங்கப்போகிறோம் என்றால் அதற்கு சரியான திட்டமிடல் என்பது அவசியம். குறிப்பாக, எவ்வளவு பணம் முதலீடு செய்திடப்போகிறோம் என்பதில் சரியான திட்டமிடல் என்பது மிக மிக முக்கியம். முதலீட்டை கணக்கிடும் போது, நீங்கள் X அளவு பணம் தேவைப்படும் என நினைத்தால் குறைந்தது 2X அளவாவது நீங்கள் முதலீடு செய்திட வேண்டி இருக்கும் என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள். 

ஆகவே, சரியான பிசினஸ் பிளான், சரியான முதலீட்டு பிளான் என்பது புதிதாக தொழில் துவங்குவோருக்கு மிகவும் அவசியமான விசயங்கள்.

3. எதிர்பாராததை எதிர்பாருங்கள்

புதிதாக தொழில் துவங்கி அதிலே நஷ்டம் ஏற்பட்டு முடங்கிப்போனவர்களிடம் “என்ன பிரச்சனை?” என கேட்டுப்பாருங்கள். நான் நினைத்தது போல நடக்கவில்லை என்றே பலரும் சொல்லுவார்கள். ஆனால், தொழிலில் அப்படித்தான் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டால் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொழிலை நடத்தலாம். 

இப்போதைய சூழலில் நீங்கள் ஒரு தொழில் துவங்கப்போகிறீர்கள் எனில் “கோவிட் போன்றதொரு பிரச்சனை வந்தால் என்னவாகும், அதற்கு எப்படி தயாராக வேண்டும்’ என்பனவற்றை யோசித்து முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதைப்போலவே, நீங்கள் நடத்தும் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் விசயங்கள் திடீரென மாறினால் அதனை எப்படி கையாள வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள். அப்படி நீங்கள் இருந்தால் எப்படிப்பட்ட பிரச்சனையையும் எளிதாகக் கடந்து தொழிலை கொண்டு செல்ல முடியும்.

4. Deadline முக்கியம்

எல்லோரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் தான் புதிதாக தொழில் துவங்குகிறார்கள். ஆனால், அனைத்தையும் சரியாக செய்தும் கூட வெற்றிபெற முடியாத பல தொழில்கள் இருக்கின்றன. இந்த எதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, புதிதாக தொழில் துவங்குவோர் ஒரு கேள்விக்கு பதிலை வைத்திருக்க வேண்டும். “எத்தனை ஆண்டுகள் முயற்சிக்கப் போகிறோம்?” என்பது தான் அது. 

நான் இந்த புதிய தொழிலை மூன்று ஆண்டுகள் செய்வேன். ஒருவேளை நான் நினைத்த வெற்றியை பெற முடியவில்லை எனில் நான் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்குவேன் என்ற தெளிவோடு இருக்க வேண்டும். எத்தனை சவால்கள் வந்தாலும் எத்தனை தோல்விகள் வந்தாலும் நினைத்ததை செய்தே தீருவேன், நான் அந்த தொழிலை செய்தே தீருவேன் என்பதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில் அது சரிப்படாது. 

நம்பிக்கை இருந்தால் வெற்றி பெற இன்னும் சில ஆண்டுகள் காத்திருப்பு வேண்டும் என்றால் நீங்கள் காத்திருக்கலாம். ஆனால், வெற்றிபெறாது என தெரிந்த பின்னரும் அதிலேயே சிக்கிக்கொண்டு இருப்பது உங்களது நேரம், பணம் அனைத்தையும் வீணாகிவிடும். 

இந்தப்பதிவில் புதிதாக தொழில் துவங்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய நான்கு முக்கியமான விசயங்களை பற்றி பார்த்தோம். இது பயனுள்ள பதிவாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

ஸ்டார்ட்அப் வெற்றிக்கதைகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular