Monday, May 20, 2024
HomeTech Articlesஅமெரிக்காவின் "ஏரியா 51" மர்ம தேசமாக மாறியது எப்படி?

அமெரிக்காவின் “ஏரியா 51” மர்ம தேசமாக மாறியது எப்படி?


உண்மை என நிரூபணம் செய்யப்படாத விசயங்கள் பற்றிய விவாதங்கள், யூகங்கள் [conspiracy theories] பொதுவெளியில் மிகுந்த விருப்பத்தோடு பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருவது வாடிக்கையான விசயமாக மாறியுள்ளது. பல்வேறு விசயங்கள் குறித்த சதி கோட்பாடுகள் இங்கே இருந்தாலும் கூட அமெரிக்காவில் இருக்கும் ஏரியா 51 பற்றிய சதி கோட்பாடு தான் மிகவும் பிரபல்யமான கோட்பாடு. ஏன்?

அமெரிக்காவில் இருக்கும் ஏரியா 51 என்ற பகுதி குறித்த சதி கோட்பாடு என்பது இங்கே பிரபல்யமான சதி கோட்பாடுகளில் ஒன்று. அதற்கு முக்கியக் காரணம், ஏரியா 51 என்ற பகுதியில் ஏலியன்கள் வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அமெரிக்கா பிடித்து வைத்துள்ள ஏலியன்களை இங்கு வைத்து தான் ஆராய்ச்சிகள் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சிலரோ அமெரிக்க விஞ்ஞானிகள் ஏலியன்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏரியா 51 பற்றிய சதி கோட்பாடுகள் மிகவும் பரவலாக பேசப்பட்டதற்கு ஒருவகையில் அமெரிக்க அரசும் ஒரு காரணம் எனலாம். ஏனெனில் Area 51 குறித்து வெளியாகும் செய்திகளுக்கு எந்தவித மறுப்பும் விளக்கமும் அமெரிக்கா தந்ததே இல்லை. 1955 இல் உருவாக்கப்பட்ட இந்தப்பகுதி இருப்பதையே 2003 க்குப் பிறகு தான் அமெரிக்கா ஆதாரபூர்வமாக ஒப்புக்கொண்டது என்றால் பாருங்கள்.

எப்படி உருவானது இந்த Area 51?

அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு பனிப்போர் உச்சத்தில் இருந்தது. இதனால் ஒரு நாடு இன்னொரு நாட்டை உளவு பார்க்க அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி வந்தது. அப்படி அமெரிக்கா சோவியத் யூனியனை உளவு பார்ப்பதற்காக சிறிய ரக விமானங்களை பயன்படுத்தியது. ஆனால் அந்த விமானங்களை கண்டறிந்து சுட்டு வீழ்த்தியது சோவியத் யூனியன். அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஐசனோவர் 1954 ஆம் ஆண்டு ரகசியமாக விமானங்களை தயாரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து வித்தியாசமான மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த விமானங்களை உருவாக்க ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ரகசிய பகுதி வேண்டுமென நினைத்து அதற்கான தேடுதல் பணியை துவங்கியது அமெரிக்க உளவுத்துறை. இதனை அடுத்து கண்டுபிடிக்கப்பட்டது தான் நாம் தற்போது ஏரியா 51 என்று அழைக்கும் பகுதி.

உலகின் மிகப்பெரிய பலம் வாய்ந்த விமானப்படையாகக் கருதப்படும் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி நிலமாக, நோவேடா பாலைவனத்தின் வறண்ட பெருநிலத்தில் பரந்து விரிந்திருக்கிறது இந்த மர்ம தேசம். எந்தவொரு சாதாரண மனிதராலும் உள்ளே நுழைந்துவிட முடியாத அளவிற்கு பாதுகாப்புடன் இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கே அமெரிக்காவின் ராணுவம் பல்வேறு ரகசிய ஆய்வுகளை நடத்தி வருகிறது என்பது உண்மை என்றாலும் கூட என்னென்ன ஆய்வுகள் என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது.

1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த ஆராய்ச்சித் தளத்தில் முதல்முறையாக U-2 என்கிற உளவு விமானம் தான் முதலில் உருவாக்கப்பட்டது. இங்கே 1500 பேர் பணியாற்றுவதாகவும் சாலை மார்க்கமாக செல்வதற்கு வழி ஏதும் இல்லாத காரணத்தினால் விமானங்கள் மூலமாகத்தான் இங்கே வேலை செய்கிறவர்கள் சென்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல இங்கே காவல் பணியில் இருக்கிறவர்கள் பற்றிய தகவல்களும் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட அமெரிக்க அரசு மறுத்து வருகிறது.

ஏலியன்ஸ் இருப்பது உண்மைதானா? ஏலியன்ஸ்களை கண்டறிவதில் என்ன சிக்கல்?

Read Here

ஏலியன்ஸ்

ஏலியன்ஸ் இருக்கிறார்கள் : இஸ்ரேலிய ஜெனரல் அதிரடி பேட்டி

Read Here

Area 51 பற்றிய சுவாரஷ்யமான சதி கோட்பாடுகள் என்னென்ன?

Area 51 இல் ரகசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்பு 1955 ஆம் ஆண்டு வாக்கில் U-2 என்கிற உளவு பார்க்கும் விமானம் பறக்கவிடப்பட்டு சோதிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டங்களில் ஒரு விமானம் என்பது சராசரியாக 10,000 அடி முதல் 20,000 அடி வரைக்கும் பறக்கும். ஆனால் இவர்கள் சோதித்த உளவு விமானம் என்பது சுமார் 60,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. இந்த விமானங்கள் மேலே பறக்கவிடப்பட்டு சோதிக்கப்படும் போது அது சிலரது கண்களில் தென்பட்டது. இவ்வளவு உயரத்தில் விமானம் பறக்க வாய்ப்பில்லை என நினைத்த பலரும் இதனை ஏலியன் விமானங்களாக இருக்கலாம் என நினைத்து பேச ஆரம்பித்தார்கள். இப்படி பொதுவெளிகளில் பேசப்படும் ஏலியன் விமானங்கள் தங்களுடைய உளவு விமானங்கள் தான் என்பது அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு தெரிந்திருந்தாலும் கூட அதனை வெளிப்படையாக மக்களுக்கு சொல்வதற்கு அதற்கு விருப்பமில்லை. ஏனென்றால் இது ஒரு ரகசியத்திட்டம்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புத்துறை F-117A, A-12, TACIT BLUE போன்ற பல்வேறு ரகசிய திட்டங்களை அங்கே வெற்றிகரமாக நடத்தியது. இதனைத்தாண்டியும் கூட பல்வேறு ஆய்வுகள் அங்கே நடந்தேறின.

2013 ஆம் ஆண்டு CIA வின் பல்வேறு ரகசிய ஆவணங்கள் சட்டப்படி வெளியானபோது தான் ஏரியா 51 என்ற இடம் இருப்பதை அமெரிக்கா அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டது. ஆனால் இன்னமும் அங்கே எந்த மாதிரியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருக்கிறது.

ஏரியா 51 ஐ நேரடியாக பார்ப்பதற்கு நடைபெற்ற முயற்சி

ஏலியன்ஸ்

சமூகவலைதளங்களில் ஏரியா 51 குறித்த விவாதங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. அவர்களுக்கு ஊக்கம் தருவது போல ஏரியா 51 ஐ மையப்படுத்திய காட்சிகளும் ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றன. இது ஏரியா 51 குறித்த சதி கோட்பாடுகளுக்கு நம்பகத்தன்மையை மக்களிடத்தில் பெற்றுத்தந்தன. 2019 ஆம் ஆண்டு வழக்கம் போல இணையத்தில் பேசிக்கொண்ட கருத்துக்களில் சில ட்ரெண்ட் ஆயின. அதிலே முக்கியமாக பரவியது ஏரியா 51 பகுதியை முற்றுகை இடுவோம் என்ற கருத்துக்கள் தான். “Storm Area 51”, “They Can’t Stop All of Us”, “Raid Area 51” போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆயின.

பலரும் நேரடியாக ஏரியா 51 பகுதியை முற்றுகையிட ஆதரவு தெரிவித்தார்கள். தாங்களும் கலந்துகொள்வதாக தெரிவித்தார்கள். இதனை கவனித்த அமெரிக்க காவல்துறை விழித்துக்கொண்டது. யாரேனும் ஏரியா 51 பகுதியை முற்றுகை இட்டால் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தது. இதனை அடுத்து யாரெல்லாம் ஏரியா 51 ஐ முற்றுகை இடுவோம் என கருத்துக்களை முதலில் பதிவிட்டார்களோ அவர்களே போக வேண்டாம் என்ற கோரிக்கைகளை வைத்தார்கள். இறுதியில் வெறும் 200 பேர் மட்டுமே குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதாக சொல்கிறார்கள்.

ஒவ்வொரு நாடும் இதை செய்கின்றன

அமெரிக்கா மட்டும் தான் ரகசியமாக இப்படிப்பட்ட இடத்தை வைத்திருக்கிறது என பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இதுபோன்ற ரகசிய இடங்களை ஆய்வுகள் நடத்துவதற்காக வைத்திருக்கின்றன. ஆனால் இதிலே ஏரியா 51 பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம், ஏலியன்கள் அங்கே வைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன என்பது தான்.

இவர்களே கூட தாங்கள் தயாரிக்கும் ரகசிய விமானங்கள் குறித்த தகவல்கள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஏலியன்கள் என்ற கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கலாம். போர் என்பது நடைபெற்றால் தான் ஒவ்வொரு நாடும் ரகசியமாக செய்துள்ள காரியங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். அதுவரைக்கும் அவர்கள் அணி வகுப்பில் காட்டுவதும் வெளிப்படையாக பயன்படுத்துவதும் சிறிய பங்காகவே இருக்கும்.

ஏரியா 51 இல் என்ன தான் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? 




Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular