48,000 பேர் பணிபுரியும் பேஸ்புக் நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் முழுவதும் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட இருக்கிறார்கள் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக உலகமே முடங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையில் அதனை எதிர்த்து செயலாற்றிட பல்வேறு நிறுவனங்கள் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்த துவங்கி இருக்கின்றன. அதன் ஒருபகுதி தான் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது. கொரோனா சீனாவில் பரவ துவங்கிய உடனேயே பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் வீட்டிலிருந்தே பணியாளர்களை வேலை செய்திட போதுமான ஏற்பாடுகளை செய்யத்துவங்கின. தற்போது சூழ்நிலை மாறிவரும் சூழலில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த கொரோனா பிரச்சனை முடிவடைந்தாலும் கூட குறிப்பிட்ட அளவு பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றிட அனுமதிக்கும் முடிவுக்கு வந்திருக்கின்றன.
ஏற்கனவே ட்விட்டர் இதுபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதேபோல Coinbase, Shopify, Google உள்ளிட்ட நிறுவனங்களும் கூட இந்த ஆண்டு இறுதி வரைக்கும் அதற்கு பிறகும் கூட வீட்டிலிருந்தே வேலை செய்ய குறிப்பிட்ட பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பாக பேசி இருந்தன. தற்போது பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் பெரும்பான்மையான ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றிட இந்த ஆண்டு இறுதியை வரைக்கும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கொரோனா பிரச்சனை நீடித்தால் மேலும் அது நீட்டிக்கப்படும் என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார்.
தற்போது அவர் அதிரடி அறிவிப்பாக தங்களது பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இனிவரும் 10 ஆண்டுகளுக்குள் வீட்டிலிருந்தே வேலை செய்திட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்து இருக்கிறார். புதிதாக வேலைக்கு எடுக்கப்போகிறவர்களுக்கும் இந்த வாய்ப்புகள் அளிக்கப்படும். அதேபோலவே ஏற்கனவே பணியாற்றுகிறவர்கள் இதற்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு சில முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என்றபடியால் படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்திட அனுமதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்து இருக்கிறார்.
அலுவலகத்திற்க்கு அருகிலேயே பணியாளர்கள் தங்க வேண்டும் என்பதற்காக பேஸ்புக் குறிப்பிட்ட அளவு பணத்தை தங்களது பணியாளர்களுக்கு கொடுத்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறதே என்ற கேள்விக்கு “ஆமாம், இரண்டு விசயங்கள் தற்போது நடந்து இருக்கின்றன. நாங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு போதுமான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஆகிய தொழில்நுட்பங்களையும் இதற்காக பயன்படுத்தி வருகிறோம். இதனால் தொலைவில் இருக்கும் ஒரு பணியாளரால் அதிக அளவில் செயலாற்றிட முடியும்.
அதேபோல இந்த கொரோனா பிரச்சனை காரணமாக வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதில் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நல்ல பலன்கள் ஏற்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. உடனடியாக அனைத்து பணியாளர்களுக்கும் அந்த வாய்ப்பினை வழங்காமல் நல்ல அனுபவம் வாய்ந்த, ஏற்கனவே சிறப்பாக பணியாற்றியதற்கான சான்றுகளை பெற்று இருந்த, வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கும் டீமில் ஒருவர் இருந்து அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டால் அவர் முழுநேரமும் வீட்டிலிருந்தே பணியாற்றிட அனுமதிக்கப்படுவார். இதன் முடிவுகள் ஆராயப்பட்டு பிறருக்கும் அந்த வாய்ப்புகள் திறந்து விடப்படும் என தெரிவித்து இருக்கிறார் மார்க்.
இப்படி பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றிட அனுமதி அளித்தால் திட்டமிடப்பட்ட பணிகளை முடிக்க முடியுமா என்ற கேள்விக்கு “இது ஒரு அனுமானம் தான், மேலும் நாங்கள் ஏற்கனவே இருக்கும் பணியாளர்களிடம் நடத்திய ஆய்வில் 20% பேர் வீட்டிலிருந்தே பணியாற்றிட அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 20% பேர் பகுதி அளவில் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களையும் இணைத்து 40% என பார்த்தால் கூட தற்சமயம் இவர்கள் அனைவரையும் அனுமதிக்கப்போவது இல்லையே. மேலும் அவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றிட தகுதி வாய்ந்த அணியில் குறிப்பிட்ட தகுதியுடன் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே தான் இதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரிவித்தேன்.
இதை மேலும் விரைவுபடுத்த புதிதாக பணிக்கு எடுக்கும் போது வீட்டிலிருந்தே வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களை அதிகமாக எடுக்கவும் முடிவு செய்திருக்கிறோம் என்றார் மார்க்.
கொரோனா பிரச்சனை தீர்ந்த பிறகு நீங்கள் அலுவலகம் சென்று பணியாற்றுவதை விரும்புவீர்களா அல்லது தற்போது போல வீட்டிலிருந்தே பணியாற்றிட விரும்புவீர்களா என்ற கேள்விக்கு – நான் பல மனிதர்களை சந்திக்க விரும்புகிறேன், தொழில் சம்பந்தமாக பலரை சந்திக்க வேண்டி இருக்கிறது. அவர்களை எல்லாம் நான் சந்திக்க விரும்பினாலும் கூட தற்சமயம் அது முடியாது. ஆகவே தான் வீட்டிலிருந்தே நான் செயல்பட வேண்டி இருக்கிறது. நான் எப்போதும் எனது பணியாளர்களுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். எனது நிலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த சூழல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என தெரிவித்து இருக்கிறார் மார்க்.
Read this post also : வீட்டிலிருந்தே வேலை – பயனுள்ளதா? பயனற்றதா?
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.