Magnetic North Pole
வடக்கு காந்தப்புலம் ரஷ்யாவில் இருக்கும் சைபீரியா நோக்கி எதிர்பார்த்த வேகத்தைவிடவும் கூடுதலான வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் GPS உள்ளிட்ட நேவிகேஷனை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை உடனடியாக மேம்படுத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
காந்த வட துருவம் என்றால் என்ன?
அனைவருக்கும் பரிட்சயமான பொருள் காந்தம் [Magnet]. அதேபோல காந்தத்திற்கு வட துருவம் [புலம்] [Magnetic North Pole] , தென் துருவம்[ புலம்] [Magnetic South Pole] இருப்பதும் அனைவரும் அறிந்ததே. இதேபோல தான் நமது பூமியை சுற்றிலும் காந்தப்புலம் இருக்கிறது. பூமிக்கு நடுவில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட உட்பொருள்களினால் காந்தப்புலம் உருவாகிறது. இந்த உட்பொருள் இடம்பெயரும் போது காந்தப்புலத்தின் இடத்திலும் மாற்றம் உண்டாகிறது.
பூமியின் வட துருவம் [Geographic North Pole] என்பது நிலையானது. ஆனால் காந்தப்புலத்தின் [Magnetic North Pole] வடதுருவம் மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. ஒரு திசைகாட்டியை நீங்கள் பார்க்கும் போது திசைகாட்டி முள் எந்த திசையை குறிக்கிறதோ அந்த திசை வட துருவம் என அர்த்தம்.
காந்த வட துருவம் அறியப்பட்ட 1831 முதல் 2250 கிலோமீட்டர் நகர்ந்து இருக்கிறது, பொதுவாக மெதுவாக நகரும் காந்த வட துருவம் 55 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டு இருக்கிறது.
காந்த வட துருவம் இடம்பெயர்வதை இன்னும் எளிமையாக புரிந்துகொள்வது எப்படி?
நீங்கள் A என்ற ஊருக்கு பல ஆண்டுகளாக திசைகாட்டியை பயன்படுத்தி சென்று வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். திசை காட்டி வட துருவத்தை எந்த திசையில் காட்டுகிறதோ அந்த திசையில் சென்றால் அந்த ஊர் வந்துவிடும். இப்போது வட துருவம் இடம் பெயர்த்துவிட்டது எனில் நீங்கள் திசை காட்டி காட்டுகிற வடக்கு திசையை நோக்கி சென்றால் வேறு ஒரு ஊருக்கு சென்று சேர்வீர்கள். இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா?
வட துருவம் வேகமாக இடம்பெயர்வதால் என்ன பிரச்சனை?
சாதாரண திசைகாட்டி முதல் உங்களது ஸ்மார்ட் போன் வரைக்கும் நீங்கள் எந்த திசையில் செல்கிறீர்கள் என்பதனை வடக்கு காந்தப்புலத்தை வைத்தே தெரிந்துகொள்கிறது. இப்போது நாம் திசை காட்டியை பயன்படுத்துவது இல்லை. அதற்க்கு பதிலாக GPS உள்ளிட்ட தொழில்நுட்பங்களைத்தான் பயன்படுத்துகிறோம். செயற்கைகோள்கள் உதவியோடு தான் இவை செயல்படுகின்றன. பிறகென்ன பிரச்சனை என்கிறீர்களா?
பெரும்பான்மையான மொபைல் போன்களில் மூன்று சென்சார்கள் இருக்கும் அவை நீங்கள் எந்த திசையை நோக்கி நீங்கள் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதனை அறிந்துகொள்ள உதவும். அந்த தகவலை செயற்கைக்கோளுக்கு அனுப்பி தான் உங்களுக்கான வழியை சொல்லும், நீங்கள் நேராக செல்ல வேண்டுமா அல்லது யூ டர்ன் செய்ய வேண்டுமா என்பதெல்லாம் அந்த திசையை பொறுத்தது தான். அதில் பிரச்சனை ஏற்பட்டால் உங்களுக்கு தவறான வழிகள் தான் காட்டப்படும்.
World Magnetic Model (WMM) – இன்னும் 5 ஆண்டுகளில் வட காந்த புலம் எப்படியெல்லாம் இடம்பெயரும் என்பதை முக்கூட்டியே கணித்துக்கூறும் அமைப்புதான் இது. இதோடு தொடர்பு வைத்துக்கொண்டுதான் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் துல்லியமாக திசைகளை காட்டக்கூடிய ஆப்களை வழங்குகின்றன. இந்த அமைப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்படும். 2015 ஆம் ஆண்டு கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட இந்த அமைப்பு 2020 ஆம் ஆண்டு அடுத்த அப்டேட்க்காக காத்து இருந்தது. ஆனால் வட காந்த துருவம் மிகவேகமாக நகர்ந்து வருவதனால் உடனடியாக அப்டேட் செய்யவேண்டிய சூழல் உண்டாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வடதுருவம் தென்துருவம் முழுவதும் இடமாறினால் என்னவாகும்?
வடக்கு காந்தப்புலமும் தெற்கு காந்தப்புலமும் அப்படியே இடம் மாறிப்போனால் மிகப்பெரிய பேரழிவுகள் நடைபெறும் என சிலர் பேசிக்கொள்வதனை நீங்கள் கேட்டிருக்கலாம். பேரழிவு ஏற்படாது என்றாலும் பூமிக்கு ஆபத்து இருக்கிறது. தற்போது சூரியனில் இருந்து வெளிப்படும் அபாயமான கதிர்வீச்சுக்கள் பூமியை வந்தடையாமல் தடுப்பது காந்தப்புலம் தான். துருவங்கள் இடம்பெயரும் போது அவை வலுவிழந்து போகும் என்பது அறிவியலாளர்களின் கூற்று. அப்படி காந்தப்புலம் வலுவிழந்து போனால் கதிர்வீச்சு தாக்குதலுக்கு நாம் உள்ளாகி புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகும்.
ஆனால் அப்படியொரு நிகழ்வு நாளையோ அல்லது இன்னும் 100 ஆண்டுகளிலோ நடைபெற்றுவிடாது. இதற்கு முந்தைய மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடந்திருக்கலாம் என கணித்து இருக்கிறார்கள். ஆகவே நீங்களும் நானும் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதே இது குறித்து சிந்திக்கத்துவங்கி இருப்பார்கள்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.