பழுதாகிப்போன கிரைண்டர்களில் இருந்து எடுக்கப்படும் மோட்டார், உடைந்த தொலைக்காட்சி உள்ளிட்ட சாமான்களில் இருந்து எடுக்கப்படும் ரிஸிஸ்டர், சிப் உள்ளிட்டவற்றிக்கொண்டும் சில பொருள்களை வெளியில் வாங்கியும் கிட்டத்தட்ட 600 ட்ரோன்களை உருவாக்கியிருக்கிறார் – பிரதாப்
2019 ஆம் ஆண்டு வடக்கு கர்நாடகாவின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்பட்டுப்போனது. யாரும் செல்ல முடியாமல் தனிமைபட்டுப்போன பகுதிகளுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருள்களை இவர் தானே உருவாக்கிய ட்ரோன் மூலமாக கொண்டு சேர்த்தார். ஹிப்பராகி தடுப்பணை பகுதியில் இருந்து ஜன்வாடா பகுதிக்கு பொருள்களை கொண்டு செல்வதற்கு தனது ட்ரோன்களை பயன்படுத்த முயற்சி செய்திடும் போது அந்தப்பகுதி மக்கள் இவரது ட்ரோன்கள் சேர வேண்டிய பகுதிக்கு சரியாக போய் சேருமா பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மிகச்சரியாக அங்கே ட்ரோன்கள் சென்று சேரவே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டாடினர்.
அத்தகைய கைதட்டல்கள் வாங்கும் போது பிரதாப்க்கு 22 வயது தான். கர்நாடகாவின் மாண்ட்யா மாவட்டத்தை சார்ந்த பிரதாப் மைசூரில் இருக்கும் ஜேஎஸ்எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் [JSS College of Arts, Science and Commerce] BSc படித்து வருகிறார்.
இந்தியாவில் இருக்கக்கூடிய இளம் அறிவியலாளர் அல்லது ட்ரோன் சயின்டிஸ்ட் என அறியப்படுகிற பிரதாப் தன்னுடைய 14 ஆம் வயதிலேயே ட்ரோன் செய்திடும் பணியில் ஈடுபடத்துவங்கினார். 16 ஆம் வயதில் பறக்கக்கூடியதும் சில சில போட்டோக்களை எடுக்கக்கூடியதுமான ட்ரோன்களை செய்து வைத்திருந்தார். உங்களுக்கு ட்ரோன்கள் மீது பெரிய ஆர்வம் ஏற்பட காரணம் என்ன என்ற கேள்விக்கு “வானத்தில் மிக மிக உயரத்தில் கூரிய கண்களுடன் மிக துல்லியமாக பறக்கின்ற பருந்தைப்பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அந்தப்பறவை தான் நான் ட்ரோன்கள் உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது. நான் இத்தகைய நிலையை அடைவதற்கு மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களும் மிக முக்கியக்காரணம்.” என்று கூறினார்.
ஆரம்பத்தில் பறக்கக்கூடியதும் சில போட்டோக்களை எடுக்கக்கூடியதுமான ட்ரோன்களை மட்டுமே செய்யப்பழகிய நான் ட்ரோன்கள் சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு உலகின் சிறந்த ட்ரோன்களை உருவாக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறேன். தற்சமயம் குறைந்தது 600 ட்ரோன்களையாவது நான் செய்து முடித்திருப்பேன் என்று கூறும் பிரதாப் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் என்பதும் பல சமயங்களில் கற்றுக்கொள்வதற்கு கூட வாய்ப்பு கிடைக்காமல் போராடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதாப் உருவாக்கிய ட்ரோன்களை காட்சிப்படுத்துவதற்காக 87 நாடுகளில் இருந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஜெர்மனியில் நடந்த சர்வதேச ட்ரோன் கண்காட்சியில் பிரதாப்க்கு ஆல்பர்ட் ஐன்ஸடீன் புதுமையான சிந்தனைக்கான தங்கப்பதக்கம் [Albert Einstein Innovation Gold Medal] வழங்கப்பட்டது.
அதுபோலவே பல்வேறு சர்வதேச நிகழ்வுகளிலும் பங்கேற்று தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறார் பிரதாப். ஸ்கில்ஸ் இந்தியா நிகழ்வில் இவரது ட்ரோன்களுக்கு 2 ஆம் இடம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனவுக்காக கடுமையாக போராடிய பிரதாப்
சிறிய வயதில் ட்ரோன்கள் மீது கொண்ட பற்றால் அதனை எப்படியேனும் உருவாக்கிவிட வேண்டும் என்ற பேரார்வம் பிரதாப்புக்கு இருந்தது. ஆனால் ட்ரோன்கள் குறித்து படிப்பதற்கோ அல்லது அதனை உருவாக்குவதற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கோ வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை பிரதாப். நீங்கள் ட்ரோன்களை செய்வதற்கான பொருள்களை எப்படி வாங்கினீர்கள், எப்படி இந்த சாதனையை நிகழ்த்தினீர்கள் என்ற கேள்விக்கு “நான் எனது ட்ரோன்களை உருவாக்குவதற்கு பெரும்பாலும் தேவையில்லாதது என ஒதுக்கிப்போடும் எலக்ட்ரானிக் பொருள்களில் இருந்து எடுக்கப்படும் பொருள்களைத்தான் பயன்படுத்துவேன். உதாரணத்திற்கு, பழுதான கிரைண்டர்களில் இருந்து எடுக்கப்படும் மோட்டார்களையும் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் இருந்து பெறப்படும் சிப், ரிஸிஸ்டர் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்துவேன். அதனையும் தாண்டி தேவைப்படும் பொருள்களைத்தான் கடைகளில் இருந்து வாங்குவேன்.
ஜப்பானில் “இளம் அறிவியலாளருக்கான விருது”, பிரான்ஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தங்கப்பதக்கம் போன்றவற்றை வாங்கியிருக்கும் பிரதாப் அடிப்படையில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ஒருமுறை பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு கம்பெனியின் அழைப்பின் பேரில் விமானத்தில் பயணம் செய்திடும் வாய்ப்பினை பெற்றேன். அப்போது நான் பிசினெஸ் கிளாஸ் வகுப்பில் பயணித்தேன். அதனை பார்த்து பலர் அதிர்ச்சியும் தவறாகவும் கூட எண்ணியிருக்கலாம் என நினைவு கூறும் பிரதாப் எனக்கு விருதுகளில் கிடைக்கும் பெரும்பான்மையான பணத்தை அடுத்த ட்ரோன்கள் செய்வதற்கு பயன்படுத்துவதாக கூறுகிறார். எனது குடும்பத்தின் நிலை சற்று உயர்வதற்கும் தற்போது நான் ட்ரோன்கள் செய்வதற்கும் பிரான்சில் சம்பாதித்த பணமே உதவிகரமாக இருக்கிறது.
உங்களின் ட்ரோன்கள் எப்படி மக்களுக்கு உதவியிருக்கின்றன?
ஆப்பிரிக்காவில் பெரும்பாலான மக்கள் இன்றும் சாலை போக்குவரத்து வசதியில்லாத இடங்களில் தான் வசித்து வருகிறார்கள். அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வசிக்கும் அவர்களுக்கு மிகவும் கொடிய கறுப்பு மாம்பா [black mamba] பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த பாம்பு கடிப்பதனால் மட்டும் 22,000 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இறந்துபோவதாக கூறப்படுகிறது. நான் சூடானில் ட்ரோன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போது 8 வயது சிறுமியை இந்த பாம்பு கடித்துவிட்டதாக செய்தி கிடைத்தது.
இந்தப்பாம்பு கடித்தால் அடுத்த 15 நிமிடங்களில் உயிர் போய்விடும். நான் எனது ட்ரோன் மூலமாக பாம்பு கடிக்கான மருந்தை குறித்த நேரத்தில் கொண்டு சேர்த்தேன். ஆமாம், கூகுள் மேப்பில் கூட புலப்படாத அந்தப்பகுதி நான் இருக்கும் இடத்தில் இருந்து சாலை மார்க்கமாக செல்ல வேண்டுமெனில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகலாம். ஆனால் ஒரு மணி நேரத்தில் 280 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்ட எனது ட்ரோன் மூலமாக வெறும் 8 நிமிடம் 30 நொடிகளில் கொண்டு சேர்த்தேன்.
பிழைத்துக்கொண்ட அந்த சிறுமியும் அவரது அம்மாவும் என்னை சூடானில் வந்து சந்தித்தார்கள். அந்தத்தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது என்கிறார் பிரதாப்.
இதுமட்டுமல்ல கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த தருணங்களில் நீர் சூழ்ந்த பகுதிகளுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருள்களை கொண்டு செல்வதில் இவரது ட்ரோன்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.
ரத்தம் கொண்டு செல்வது, தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை மிக விரைவாக கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளில் ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்து உரைகளை ஐஐடி மும்பையில் நிகழ்த்தியிருக்கிறார். ஆரம்பத்தில் இவரது உரைகளை கேட்க நான்கு ஐந்து பேர் மட்டுமே வர துவங்கினர். கலந்துகொண்டவர்கள் இவரது உரை பற்றி பிறரிடம் எடுத்துச்சொல்ல பிறகு அரங்கமே நிரம்பி வழிந்தது என நினைவு கூறுகிறார்.
உங்களின் எதிர்கால லட்சியம் என்ன?
நம் நாட்டில் போதிய கல்வித்தகுதி இன்றி திறமையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் கல்லூரியில் பெற்ற சான்றிதழ்கள் இல்லை என்றாலும் கூட அவர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களைக்கண்டறிந்து ட்ரோன்கள் மட்டுமல்ல தேசத்திற்க்கு பயன்படும் பிற சாதனங்களையும் உருவாக்குவதற்கு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்குவதே தனது லட்சியம் என்று ஆர்வத்தோடு கூறுகிறார் ட்ரோன் பிரதாப்.
உண்மைதான், நம் நாட்டில் கல்வித்தகுதி இல்லாமல் திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிந்து ஊக்குவித்தால் அவர்கள் சாதிப்பார்கள். நாட்டிற்கும் நல்ல பலன் கிடைக்கும்.
வாழ்த்துக்கள் பிரதாப், நீங்களும் கமெண்டில் இவரை வாழ்த்தலாமே!
Read More : ஜெப் பெசோஸ் வெற்றிக்கதை