Friday, May 10, 2024
HomeCryptocurrencyBlockchain என்றால் என்ன? | Blockchain Explained in Tamil

Blockchain என்றால் என்ன? | Blockchain Explained in Tamil

Blockchain Technology Explained In Tamil

தற்போது மிகப்பரவலாக Blockchain தொழில்நுட்பம் பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சியில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் Blockchain தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

Blockchain என்றால் என்ன? | Blockchain Explained in Tamil

ஆன்லைன் பரிவர்த்தனை, பங்குச்சந்தை மற்றும் கிரிப்டோகரன்சி போன்றவை குறித்த அறிமுகம் உள்ளவர்களுக்கு Blockchain என்ற வார்த்தை ஏற்கனவே அறிமுகம் ஆகியிருக்கும். Blockchain பற்றிய அறிமுகம் உங்களுக்கு இல்லையென்றாலும் கவலை இல்லை. இந்தப்பதிவை படித்து முடித்த பிறகு உங்களுக்கு Blockchain பற்றி முழுமையாக தெரிந்துவிடும். தற்போது மிகப்பரவலாக Blockchain தொழில்நுட்பம் பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சியில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் Blockchain தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

Blockchain என்றால் என்ன?

Blockchain என்பதற்கு ஆங்கிலத்தில் இவ்வாறாக விளக்கம்கொடுக்கப்படுகிறது “blockchain is a distributed, decentralized, public ledger”. அதாவது பிளாக்செயின் என்பது பல்வேறு இடங்களில் பராமரிக்கப்படுகின்ற பரிவர்த்தனை கணக்குப்புத்தகம் என பொருள். உதாரணத்திற்கு நாம் வங்கிகளில் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனை குறித்த தகவல்கள் அனைத்தும் வங்கியின் சர்வரில் (ஒரே இடம்) சேமிக்கப்பட்டு இருக்கும். ஆனால் blockchain தொழில்நுட்பத்தில் பல்வேறு இடங்களில் ஒரேவிதமான தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு பரிவர்த்தனை நடக்கும் போது அது குறித்த விவரம் “block” ஆக அனுப்பப்படும். அந்த block இல் இருக்கும் தகவல்களை என்கிரிப்ட் செய்து ஒவ்வொரு பெட்டிக்கும் “hash” என்ற ஒரு அடையான எண்ணை கொடுப்பார்கள். ஒவ்வொரு பெட்டியும் தனித்துவமான hash ஐ கொண்டிருக்கும். இரண்டாவது block இல் முதல் block இன் hash பதிவிடப்பட்டு இருக்கும். இப்படித்தான் ஒவ்வொரு பெட்டிக்கும் இருக்கும். இப்படி பல block ஒன்றோடு ஒன்று செயின் போல இணைந்து இருப்பதனால் தான் இதனை Blockchain என அழைக்கிறோம்.

பிட்காயின் தொழில்நுட்பத்தில் Blockchain தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

முன்னனி கிரிப்டோகரன்சியான பிட்காயின் இல் Blockchain தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டைப் பொறுத்தவரையில் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கக்கூடிய பணத்தை உருவாக்குவது RBI என்கிற இந்திய அரசின் அமைப்பு , இதனைப்போலவே பல நாடுகளில் அந்த நாடுகளை சேர்ந்த அமைப்புகள் தங்கள் நாட்டுக்கென பணத்தை உருவாக்கிக்கொள்கின்றன . அதனை பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் போது வங்கி என்கிற மூன்றாம் நபரின் உதவியோடு மட்டுமே செய்ய முடியும்.

 

நாம் பண பரிமாற்றம் செய்திட வங்கியை பயன்படுத்துகிறோம். வங்கியில் நமக்காக ஒரு கணக்கு துவங்கப்படுகிறது. அந்தக் கணக்கில் நாம் எவ்வளவு பணம் செலுத்துகிறோம், எடுக்கிறோம் என்பது போன்ற தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும். ஏதேனும் பொருளை வாங்கவேண்டும் என்றால் வங்கி அட்டையை பயன்படுத்தி வாங்குவோம். அந்த வங்கி பொருளை விற்பவருக்கு நமது கணக்கில் இருந்து பணத்தை வழங்கும் . வங்கி அப்படி ஒரு இடமே  பிட்காயின் விசயத்தில் இல்லை. பிறகு எங்கே தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும்? எப்படி பண பரிமாற்றம் நடக்கும்?

இந்த கேள்விகளுக்கான பதில் தான் Blockchain தொழில்நுட்பம். பிட்காயின் தகவல் அனைத்தும் ஏதோ ஒரு சர்வரில் சேமிக்கப்பட்டு இருக்காது . மாறாக பிட்காயின் வைத்திருக்கக்கூடிய அனைவரது கணக்குகளிலும் மொத்த தகவலும் சேமிக்கப்பட்டு இருக்கும் . அதாவது வங்கி நமது விவரங்களை சேமித்து வைத்திருப்பதற்கு பதிலாக நாம் ஒவ்வொருவருமே அனைவரது தகவலையும் சேமித்து வைத்திருப்பதை போன்றது. ஒவ்வொரு முறை யாரேனும் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் அது குறித்த தகவல் அனைத்தும் Blockchain நெட்ஒர்க்கில் இணைந்து இருக்கக்கூடிய அனைத்து சர்வர்களுக்கும் அனுப்பப்படும்.

இதனால் என்ன பயன் என கேட்கலாம். வங்கி போன்றதொரு எந்த அமைப்பும் நம்மை கண்காணிக்காது. அதனைவிட ஏதாவது ஒரு கணினியில் உள்ள தகவல்களை யாராவது ஹேக் செய்துவிட்டாலும் கூட பிற கணினிகளில் இருக்கும் தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். ஆக Blockchain தொழில்நுட்பம் என்பது பல்வேறு இடங்களில் ஒரேவிதமான தகவல்களை சேமித்து வைக்கும் முறை என்பதை புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் Blockchain ஐ பயன்படுத்தும் விதம் வெவ்வேறாக இருக்கலாம்.

Blockchain தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?

Blockchain தொழில்நுட்பம் மூன்றுவிதமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. அதன்படி

1. hash

2. proof of work

3. distributed network

1. hash 

உதாரணத்திற்கு பிட்காயின் SHA-256 எனும் ஹாஷ் கிரிப்டோ முறையை பயன்படுத்துகிறது. ஒரு பண பரிவர்த்தனை நடக்கும் போது அந்த விவரங்களை உள்ளடக்கிய ஒரு பிளாக் உருவாகும். அதற்குள் இருக்கும் தகவல்கள் வெவ்வேறு அளவிலானவையாக இருக்கும். அவற்றை SHA-256 எனும் கிரிப்டோ முறையில் வேறு ஒரு அடையாள எண்ணாக மாற்றி விடுவார்கள். ஒருவேளை ஹேக்கர்கள் ப்ளாக்கில் உள்ள தகவல்களை மாற்றினால் அந்த பிளாக்கின் ஹாஷ் எண்ணும் மாறிவிடும். அப்படி மாறினால், அந்த ப்ளாக்கிற்கு அடுத்தபடியாக இருக்கின்ற பிளாக் இல் ஏற்கனவே இருக்கும் பிளாக் எண்ணுடன் ஒத்துப்போகாது. ஆகவே இங்கு ஏதோ தவறு நடந்திருக்கிறது என கண்டறியப்பட்டுவிடும்.

BitCoin Explained in Tamil

2. proof of work

தற்போது இருக்கக்கூடிய சூப்பர் கம்பியூட்டரின் உதவியுடன் மிக விரைவாக பல பிளாக் களை திறந்து தகவல்களை மாற்றி பிறகு அதற்கேற்றவாறு ஒருங்கிணைத்துவிட முடியும். அப்படி ஒருவேளை நடந்தால் அதனை தடுப்பதற்காகவே இரண்டாவது பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, நீங்கள் ஒரு block இல் மாற்றம் செய்திட வேண்டுமெனில் proof of work எனும் பகுதியை கடந்து செல்ல வேண்டும். proof of work என்பது மிகவும் கடினமான puzzle ஒன்றிற்கு விடை கண்டுபிடிப்பது தான். இதனை நீங்கள் செய்திட வேண்டும் எனில் மிகவும் அதிக திறன் வாய்ந்த கணினிகள் அவசியம். அப்படியே இருந்தாலும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது ஆகும். ஒரு blockchain இல் லட்சக்கணக்கான block இருக்கும் என்பதால் இதுவும் கடினம்.

3. distributed network

இதையும் கடந்து விட்டார்கள் ஹேக்கர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கடுத்ததாக distributed network என்ற மூன்றாம் கட்ட பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. இதன்படி, blockchain இல் இருக்கும் அத்தனை பேரிடமும் ஒரே மாதிரியான பல தகவல்களின் பிரதி இருக்கும். ஒருவேளை ஹேக்கர் ஒரு கணினியில் இருக்கும் தரவுகளை மட்டும் மாற்றினாலும் கூட, புதிய பிளாக் உருவாகும் போது அனைத்து சர்வர்களுக்கும் அனுப்பப்படும் அல்லவா. அப்போது மற்ற கணினிகள் குறிப்பிட்ட அந்த பிளாக் போலியானது என்பதனை கண்டறிந்து நிராகரித்து விடும். அதாவது ஒரு நெட்ஒர்க்கில் இருக்கும் 51% கணினிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே புதிய block அனுமதிக்கப்படும். ஹேக்கர்கள் ஹேக் செய்திட வேண்டும் எனில் 51% கணினியை ஹேக் செய்திட வேண்டும். இதுவும் சாத்தியமற்ற ஒன்று.

TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular