Covid 19 vaccine
ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா ஆகியவை “அறிவுசார் சொத்துப் போரில்” ஈடுபடுவதாக உலகளாவிய இணைய பாதுகாப்பு நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உலகையே முடக்கிப்போட்டிருக்கும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடும் கடுமையாக முயற்சி செய்துவருகின்றன. பல்வேறு நாடுகள் சோதனையின் உச்சத்தை அடைந்துவிட்டோம் எனக்கூறினாலும் கூட இன்னமும் கொரோனவிற்கான மருந்து வெளிவரவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாக இருக்கிறது. பணம் சம்பாதிக்க முடியும் என்ற நோக்கத்தையும் தாண்டி கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து வெளியிட்டால் தங்கள் நாட்டிற்கு மாபெரும் கவுரவமாக இருக்கும் என பல்வேறு நாடுகள் கருதுகின்றன.
அந்தப்பெருமையை பெறுவதற்காக சில நாடுகள் ஹேக்கர்களின் உதவியை நாடியுள்ளதாகவும், ஹேக்கர்கள் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் கணினிகளை ஹேக் செய்து தகவல்களை திருட முயற்சி நடப்பதாகவும் உலகளாவிய இணைய பாதுகாப்பு நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நாடுகள் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா ஆகியவையே.
கடந்த வாரம், மைக்ரோசாப்ட் நிறுவனம் – ரஷ்யா மற்றும் வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கனடா, பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருந்து நிறுவனங்கள் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியாளர்களை சைபர் அட்டாக் மூலம் குறிவைத்ததாக குற்றம் சாட்டிருந்தது.
“இவை ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான விரைவான முயற்சிகளைப் பயன்படுத்தி மக்களின் கணக்குகளில் நுழைவதை நோக்கமாகக் கொண்ட தாக்குதல்கள்” என்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒரு பதிவில் கூறியது. COVID-19 தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருடும் நோக்கத்துடன் சீனா, அமெரிக்க நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்களை நடத்தியதாகவும் அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இப்படி ஹேக் செய்திட முயற்சி செய்பவர்களுக்கு அந்த நாடுகளின் அரசாங்கங்களே உதவி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. பெய்ஜிங்கில் இருக்கும் அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். மேலும் பல நாடுகளுக்கு முன்னோடியாக மருந்து கண்டுபிடிப்பில் நாங்கள் சென்றுகொண்டிருக்கும் போது இதுபோன்ற ஹேக்கிங் வேலையில் ஈடுபட எங்களுக்கு அவசியமில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.