சிறிய சிறிய கேள்விகளில் இருந்து தான் ஒரு விஞ்ஞானி உருவாகிறார்.
பல சிறுவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. இதற்கான பதில் எளிமையானதாக இருந்தாலும் நிறையபேருக்கு நினைவில் இருப்பதில்லை. ஆகவே தான் இந்தப்பதிவில் அதற்கான பதிலை பார்க்கப்போகிறோம்.
ஆமாம், வானம் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது? சிகப்பு, பச்சை, மஞ்சள் என எத்தனையோ நிறங்கள் இருக்கின்றனவே?
பூமியை சுற்றிலும் வளிமண்டலம் [atmosphere] இருக்கிறது. அந்த வளிமண்டலத்தில் இருக்கும் காற்றில் அதிக பட்சமாக ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் இருக்கும். இதுதவிர பிற துகள்களும் இருக்கும். சூரியனில் இருந்து வரும் சூரிய ஒளியில் அனைத்து விதமான நிறங்களும் இருக்கவே செய்யும். அதனை நாம் வானவில் தோன்றும் நேரங்களில் பார்க்கலாம். அப்படி வரும் ஒவ்வொரு நிற ஒளிக்கும் அலை நீளத்தில் [wavelength] மாறுபாடு இருக்கும். உதாரணத்திற்கு, சிகப்பு நிற ஒளிக்கு அதிக அலைநீளமும் நீல நிற ஒளிக்கு குறைவான அலைநீளமும் இருக்கும்.
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது அதிக அலைநீளமுள்ள ஒளி அனைத்தும் ஊடுருவி பூமியை வந்தடைந்து விடும். ஆனால் குறைவான அலைநீளம் உள்ள நீல நிற ஒளி அங்கிருக்கும் காற்று மூலக்கூறுகளில் பட்டு சிதறடிக்கப்படும். அப்படி தொடர்ச்சியாக நீல நிற ஒளி சிதறடிக்கப்படுவதனால் தான் வானம் நீல நிறமாக காட்சி அளிக்கிறது.
கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்ற சிறிய கேள்வியில் தான் சர் சிவி ராமன் என்ற விஞ்ஞானி உருவானார். அவரைப்பற்றி படிக்க இங்கே கிளிக் செய்து படியுங்கள்.