Earth Rotation
யார் இவ்வளவு பெரிய பூமியை சுற்றி விட்டிருப்பார்கள். ஒருவேளை அந்த சக்தியைத்தான் கடவுள் என்கிறோமா? அல்லது இதற்கு பின்னால் அறிவியல் காரணம் ஏதேனும் இருக்குமா? நிச்சயமாக இருக்கிறது.
நாம் அனைவருமே பள்ளியில் படித்திருப்போம், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறதென்று. ஆனால் ஒரு விசை இல்லாமல் இயக்கம் நடைபெறாது, அப்படியானால் யார் பூமியை சுழற்றி விட்டது? பூமி மட்டுமல்லாது பிற கோள்களும் அதன் துணைக்கோள்களும் மாறுபட்ட வேகத்தில் சுற்றி வருகின்றனவே எப்படி? இப்படி உங்களது குழந்தையோ சிறுவர்களோ கேட்டால் என்ன செய்வது? இதற்கான அறிவியல் பூர்வமான காரணத்தை தான் இங்கே பார்க்க இருக்கிறோம். கவலைபடாதீர்கள் தலை சுற்றாது.
சூரிய குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கோளும் மாறுபட்ட வேகத்தில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கின்ற புதன் கோளானது சூரியனை சுற்றிவர 59 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அதற்கடுத்து இருக்கின்ற வெள்ளியானது 243 நாட்களை எடுத்துக்கொள்கிறது. மூன்றாவது நாம் இருக்கின்ற பூமியோ சூரியனை சுற்றிவருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இப்படி ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு வேகத்தில் சூரியனை சுற்றிவருகின்றன.
பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரத்தை தற்போது எடுத்துக்கொள்கிறது. ஆனால் போகப்போக இந்த நேரம் கூடப்போகிறது என்பதுதான் அறிவியல் எதார்த்தம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாகவோ அல்லது 26 மணி நேரமாகவோ கூட மாறலாம். அதாவது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் வேகம் குறைந்துகொண்டே வருவதனால் இது நடக்கலாம்.
சரி எதற்க்காக அனைத்துக்கொள்களும் சுற்றுகின்றன? நாம் பாடப்புத்தகத்தில் படித்தது போலவே அனைத்து கோள்களும் தூசு மற்றும் காற்று இரண்டும் ஒருங்கிணைந்ததனால் உருவானவை தான். கிட்டத்தட்ட 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தூசு மற்றும் காற்று இவை ஒருங்கிணைந்து மிகப்பெரிய தட்டு போன்ற வடிவத்தில் உருவானது. அந்த சமதள தட்டுப்போன்ற அமைப்பு வேகமாக சுற்ற சுற்ற அதன் நடுவில் சூரியன் உருவானது. மீதமுள்ள அமைப்புகள் இணைந்து கோள்களாக உருவெடுத்தன, இவை ஒரு நொடியில் நடந்தவை அல்ல. இப்படி உருவான காலகட்டத்தில் இப்போது இருப்பது போல சூரிய குடும்பம் அமைதியனாதாக இருக்கவில்லை. எண்ணற்ற சிறு சிறு துண்டுகளும் பெரிய பாறைகளும் தூசுகளுமாகத்தான் இருந்தன. காலப்போக்கில் அவை ஒன்றின் மீது மோதி விழுந்தன அல்லது பெரிய கோள்களால் ஈர்க்கப்பட்டு ஒன்றிணைந்தன.
இப்படி இயக்கத்தில் இருந்த ஒரு அமைப்பில் இருந்து பூமி போன்ற கோள்கள் உருவானதால் தான் இன்னமும் அதே இயக்கத்தோடு இருக்கின்றன. புற விசைகள் பெரிதாக செயல்படாதபோது அந்த இயக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பூமி உருவான காலகட்டத்தில் இப்போது இருப்பதை விடவும் பூமி மிக வேகமாக சுழன்று இருக்க வேண்டும். அப்போது ஒருநாள் என்பது வெறும் 6 மணி நேரமாகத்தான் இருந்திருக்கும். நிலவானது பூமிக்கு மிக அருகில் உருவானபடியால் பூமி சுற்றும் போது பூமிக்கும் நிலவுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு விசை மோதல்களால் தான் கடலில் அலை எழுகிறது. அப்படி உராய்வு ஏற்படும்போது பூமியின் சுழலும் வேகம் குறைகிறது. எந்த அளவிற்கு அது இருக்கும் எனில் அடுத்த நூறாண்டுகளுக்கு பிறகு தன்னைத்தானே பூமி சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மில்லி செகண்ட்ஸ் கூடுதலாக இருக்கும்.
கவலைப்படவேண்டாம் மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் ஏற்படுவதை நம்மால் காண இயலாது. அதற்குள் நாம் போக வேண்டிய இடத்திற்கு போய்விடுவோம்.
உங்களுக்கு வேறு எதுவும் கேள்விகள் இருக்கின்றனவா!
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.