கொரோனா வைரஸ் பாதித்தவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக “பிளாஸ்மா சிகிச்சை” செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனுமதிக்கப்பட்ட சில மருத்துவமனைகள் இந்த சோதனையில் இறங்கி இருக்கின்றன.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடக்கின்ற உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. கோவிட் 19 [கொரோனா வைரஸ்] ஐ ஒழிப்பதற்கான தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் ஆராய்ச்சிகளும் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் பாதித்தவர்களை “பிளாஸ்மா தெரபி” மூலமாக சிகிச்சை அளித்து அவர்களை மீட்டெடுப்பது துரிதமான நடவெடிக்கையாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்படுகிறது. தற்போது இந்தியாவின் உயரிய மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ கவுன்சில் [Indian Council of Medical Research (ICMR)] இந்த முயற்சியில் அக்கறை செலுத்த துவங்கி இருக்கிறது. இதற்காக 21 மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது
தற்போது அடிக்கடி உச்சரிக்கும் பெயராக “பிளாஸ்மா சிகிச்சை [Plasma Therapy]” மாறி இருக்கிறது. ஆகவே தான் இது குறித்த எளிமையான புரிதலை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தப்பதிவு. நீங்களும் படியுங்கள் உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
நமது ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா என்பது நிறமற்ற திரவம் ஆகும். இதனுடைய பணி குருதி அணுக்களை உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்வதே. இந்த திரவம் தான் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் ஹார்மோன்ஸ், ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் தாதுக்களை கொண்டு செல்கிறது. 90% நீரால் ஆன பிளாஸ்மா ரத்தத்தில் 55% இருக்கும். பிளாஸ்மாவின் முக்கிய பணிகளில் சில, ரத்த அழுத்தத்தை பராமரிப்பது மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளுக்கும் புரதத்தை கொண்டு சேர்ப்பது தான்.
பிளாஸ்மா தெரபி/சிகிச்சை என்றால் என்ன?
நமது உடல் மிகவும் ஆச்சர்யமானவை.தினந்தோறும் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான வைரஸ்களால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறோம். நாம் முதல்முறையாக தாக்கப்படும்போது தான் அதனால் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். பின்னர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி [Antibodies] உண்டாகி நாம் குணமாகி விடுவோம்.அப்போது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த அணுக்களில் இந்த வைரஸை இப்படித்தான் எதிர்க்க வேண்டும் என்ற செய்தி சேமிக்கப்பட்டுவிடும். மீண்டும் அதே வைரஸ் நம்மை தாக்கும் போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக உண்டாகி நாம் பாதிக்கப்படுவதற்கு முன்னதாகவே உடல் அந்த வைரஸை எதிர்த்து போராடிவிடும்.
இதே முறைதான் தற்போது கொரோனா வைரஸ்க்கான பிளாஸ்மா சிகிச்சை முறையிலும் பின்பற்றப்பட இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்து அதிலிருந்து மீண்டவரின் ரத்தத்தில் இருக்கும் அணுக்களுக்கு கொரோனா வைரஸை எப்படி எதிர்த்து போராடுவது என்று தெரியும் அந்த செய்தி அந்த அணுக்களில் சேமிக்கப்பட்டு இருக்கும். அதை கொரோனா வைரஸ் பாதித்தவரின் உடலுக்குள் செலுத்தும்போது செலுத்தப்படும் ரத்த அணுக்கள் கொரோனா வைரஸ் தொடர்பை அறியும் போது அதே நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். இதன்மூலமாக நோய் பாதித்தவரை எளிமையாக மீட்க முடியும் என்கிறது மருத்துவ உலகம்.
பிளாஸ்மா சிகிச்சை எப்படி செய்யப்படும்?
இதற்காக தகுந்த கொடையாளர் தெரிவு செய்யப்படுவார். அவர் 18 முதல் 60 வயதுடையவராக இருக்க வேண்டும், 50 கிலோவுக்கு மேல் எடை கொண்டவராக இருக்க வேண்டும், பரவக்கூடிய நோய் இல்லாதவராக இருக்க வேண்டும் 6 மாதங்களுக்கு உள்ளாக டாட்டூ போட்டிருக்க கூடாது, ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும் போன்ற பல்வேறு வரையறைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பூர்த்தி செய்யக்கூடிய ஒருவரைத்தான் தெரிவு செய்து அவரிடமிருந்து பிளாஸ்மா பிரித்து எடுக்கப்படும்.
கொடையாளரிடமிருந்து எப்போதும் போல ரத்தம் பிரித்து எடுக்கப்படும். பின்னர் அந்த ரத்தம் ஒரு கருவிக்குள் செலுத்தப்பட்டு ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா பிரித்து எடுக்கப்படும். மீதமிருக்கும் ரத்த சிவப்பணுக்கள் உட்பட அனைத்தும் ஒரு சிறப்பியல்பு கொண்ட திரவம் கலக்கப்பட்டு மீண்டும் கொடையாளரின் உடலுக்கு உள்ளேயே செலுத்தப்படும். பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்மா திரவம் 8 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில் 18 டிகிரி வெப்பநிலையில் வைத்து சேமிக்கலாம். ஆனால் நேரம் ஆக ஆக அதன் வீரியம் குறையும் என கூறப்படுகிறது.
டெல்லியில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை
தற்போது பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை கொரோனாவிற்கு எதிராக நல்ல பயனை அளிப்பதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் பேசும்போது “பிளாஸ்மா தெரபி சிகிச்சையை சோதனை அடிப்படையில் அளிக்க மத்திய அரசு எங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. லோக் நாயக் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நோயாளிகளை அங்கு அனுமதித்துக் கண்காணித்து வருகிறோம்.
ஐசியூவில் மிகவும் மோசமான உடல் நிலையுடன் இருந்த ஒரு நோயாளி பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பிளாஸ்மா தெரபியின் ஆரம்பகட்ட பலன்கள் நல்ல நிலையில் உள்ளன. கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 1,100-க்கும் மேற்பட்ட நபர்களை, பிளாஸ்மா தானம் செய்யுமாறு தொடர்பு கொண்டுள்ளோம். இவர்களில், பெரும்பாலானோர் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக பிளாஸ்மாவை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்” என்றார்.
தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளுக்கு அனுமதி
ஆரம்பத்தில் பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்யாத இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது சில மருத்துவமனைகளில் இதனை சோதனை முயற்சியாக மேற்கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி நாடு முழுமைக்கும் 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 4 மருத்துவமனைகளும் அடங்கும். அதன்படி பின்வரும் நான்கு மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ள துவங்கலாம்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை
மதுரை அரசு மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவமனை
வேலூர் சிஎம்சி மருத்துவமனை
முயற்சி வெற்றியடைந்தால் ……..
இந்த முயற்சி நல்ல பலனை அளித்தால் நோய் எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை மீட்க முடியும். மேலும் கொரோனா வைரஸ் மட்டுமில்லாது இனி வரக்கூடிய புதிய நோய்களுக்கும் இதே சிகிச்சை முறையை பின்பற்றிகூட சிகிச்சை மேற்கொள்ள இயலும்.
இதுபோன்ற பதிவுகளை நீங்கள் தவறாமல் படிக்க வேண்டும் என விரும்பினால் எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடரலாம் அல்லது வாட்ஸ்ஆப் லிங்கை கிளிக் செய்து உங்களது வாட்ஸ்ஆப்பிலேயே செய்திகளை பெறலாம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.