Dark Web
சாதாரண பொதுமக்கள் பயன்படுத்துகிற இணையத்தின் மறுபக்கம் தான் டார்க் வெப். எவ்வளவு திறன் வாய்ந்த காவல்துறையாலும் கூட கண்டறியமுடியாத பல சட்டவிரோத செயல்கள் டார்க் வெப் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன.
பெரும்பான்மையான இணைய குற்றங்கள் அனைத்தும் நடைபெறுகின்ற இடமாக டார்க் வெப் [Dark Web] இருக்கிறது. திருடப்படும் கிரெடிட் கார்டுகளின் தகவல்கள், நெட்பிளிக்ஸ் கணக்குகளின் தகவல்கள், திருடப்படும் பாஸ்வேர்டுகள், சட்டவிரோத ஆயுதங்கள் போன்றவற்றை காவல்துறையின் கண்ணில் படாமல் விற்கவும் வாங்கவும் பயன்படுத்துகிற இடம் தான் டார்க் வெப்.
இவ்வளவு திருட்டுத்தனமான விசயங்கள் அனைத்தும் நடைபெற்றாலும் கூட காவல்துறையில் இவர்கள் சிக்குவதில்லை என்பதனால் டார்க் வெப் குறித்து தெரிந்துகொள்ள பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். இந்தக்கட்டுரையில் டார்க் வெப் குறித்த பல்வேறு தகவல்கள் இருக்கின்றன.
டார்க் வெப் [Dark Web] என்றால் என்ன?
ஒவ்வொருமுறை இணைய குற்றங்கள் [Online Scams] நடைபெறும் போதும் டார்க் வெப் [Dark Web] என்ற வார்த்தை அடிபடுகிறது. டார்க் வெப் என்பது கள்ளச்சந்தை போலவே இணையத்தின் கருப்பு பக்கம். டார்க் வெப்பில் பரவலாக்கப்பட்ட [decentralized] இணையதளங்கள் அனைத்தும் யார் பயன்படுத்துகிறார்கள் என்பதனை அறிந்துகொள்ள முடியாதபடி கணக்கற்ற சர்வர்களின் மூலமாக தகவல்களை பரிமாறவும் மேலும் ஒவ்வொருமுறையும் தகவல் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்படவும் செய்திடும். இதன் காரணமாக யார் என்ன செய்கிறார்கள் என்பதனை கண்டறியவே முடியாது.
சாதாரண பொதுமக்கள் தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கும் இணையத்தில் அவர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விசயத்தையும் அரசாலோ அல்லது கண்காணிப்பு தொழில்நுட்பம் கொண்டவர்களாலோ கணிகாணிக்க முடியும். இப்படி யாராலும் கண்காணிக்க முடியாதபடி இணையத்தில் செயல்படவேண்டும் என நினைக்கிறவர்கள் பயன்படுத்துவது தான் டார்க் வெப். டார்க் வெப் குறித்து தேடும் போது ஒரு ஆச்சர்யமான தகவல் ஒன்று கிடைத்தது. அது டார்க் வெப்பிற்கு கருத்துருவாக்கம் மற்றும் அடித்தளமிட்டவர்கள் அமெரிக்க கடற்படை ஆராய்ச்சியாளர்கள் என்பது தான். அவர்கள் தற்போது இருக்கும் இணையம் பாதுகாப்பற்றது என்பதை அப்போதே உணர்ந்திருந்தது தான் இதனை நோக்கிச்செல்ல காரணம்.
டார்க் வெப்பில் என்ன நடக்கும்?
டார்க் வெப் என்றால் 100% குற்றவாளிகளால் தான் அது பயன்படுத்தப்படுகிறது என்பது இல்லை. மாறாக, தங்களது ஆன்லைன் நடவடிக்கைளை யாரும் கண்காணிப்பதில் விருப்பம் இல்லாதவர்களும் கூட டார்க் வெப்பை பயன்படுத்துவார்கள். அதுபோலவே சில சமயங்களில் ரிப்போர்ட்டர்கள் கூட ரகசியமாக தகவல்களை பரிமாறிக்கொள்ள டார்க் வெப்பை பயன்படுத்திய நிகழ்வுகளும் உண்டு. ஆனால் பெருவாரியாக டார்க் வெப்பை பயன்படுத்துகிறவர்கள் அரசின் கண்காணிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் தான்.
2019 ஆம் ஆண்டு மைக்கேல் மெக்குயர்ஸ் [Michael McGuires] மேற்கொண்ட ஆய்வில் டார்க் வெப் 2016 ஐ விட 20% மடங்கு வேகமாக நிறுவனங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக கண்டறிந்தார். டார்க் வெப்பில் கிரெடிட் கார்டு எண்கள் வாங்கலாம், போதைப்பொருள்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், திருடப்பட்ட பயனாளர்களின் பாஸ்வேர்டு , அடுத்தவர்களின் கணினியில் இருக்கக்கூடிய தகவல்களை திருடும் மென்பொருள் என அனைத்தையும் அங்கே உங்களால் வாங்க முடியும்.
$50,000 மதிப்புள்ள ஒரு வங்கி கணக்கின் பாஸ்வேர்டை நீங்கள் வெறும் $500 கொடுத்து வாங்கிவிட முடியுமென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோலவே தான் பல பேங்குகள் வழங்கக்கூடிய கிரெடிட் கார்டுகளையும் அங்கே கள்ள மார்க்கெட்டில் திருட்டுத்தனமாக குறைந்த விலைக்கு வாங்க முடியும். வாழ்நாள் முழுமைக்கும் இலவசமாக நெட்பிளிக்ஸ் கணக்கை நீங்கள் வெறும் $6 க்கு வாங்க முடியும்.
டார்க் வெப் [Dark Web] vs டீப் வெப் [Deep Web] இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பெரும்பாலானவர்கள் டார்க் வெப் [dark web] மற்றும் டீப் வெப் [Deep web] இரண்டையும் ஒன்றென கருதுகிறார்கள். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. டீப் வெப் [Deep web] என்பது நாம் பயன்படுத்துகிற இணையத்தின் ஒரு பகுதி தான். ஆனால் இணையத்தில் இருக்கும் அந்த தகவல்கள் சர்ச் என்ஜின்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அந்த தகவல்களை சர்ச் என்ஜின்களால் பெற முடியாது. உதாரணத்திற்கு, உங்களது ஜிமெயிலில் இருக்கும் மின்னஞ்சல்கள் குறித்த தகவல்களை சர்ச் என்ஜின்களில் தேடிப்பெற முடியாது, அதுபோலவே நிறுவனங்களின் கணக்குகள், பயனாளர்களின் தகவல்கள் உள்ளிட்டவற்றையும் கூட தேடுபொறியில் கிடைக்காது. இப்படி சர்ச் என்ஜின்களில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் தான் டீப் வெப் [Deep web] என அழைக்கப்படுகிறது.
டார்க் வெப் [dark web] என்பது திட்டமிட்டே மறைத்துவைக்கப்பட்ட இணையத்தின் ஒரு பகுதி. யாரேனும் அந்த தகவல்களை பயன்படுத்த வேண்டும் என்றால் சாதாரண பிரவுசர்களின் மூலமாகவோ அல்லது சர்ச் என்ஜின்கள் மூலமாகவோ பெற முடியாது. மாறாக, அதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டோர் [TOR] உள்ளிட்ட பிரவுசர்கள் உதவியோடு தான் அதற்குள் நுழைய முடியும். ஒட்டுமொத்த இணையத்தில் 5% அளவு மட்டுமே டார்க் வெப் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே தீயவர்களால் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்க் வெப்பை பயன்படுத்துவது எப்படி?
நாம் பயன்படுத்துகிற இணையத்தில் ஒரு இணையதளத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு பிரவுசரில் அந்த இணையதள முகவரியை பதிவிட்டு பயன்படுத்தலாம் அல்லது குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் பெயரை கூகுள் சர்ச் என்ஜினில் பதிவிட்டு அந்த தகவல்களை பெறலாம். ஆனால் டார்க் வெப் என்பது முற்றிலும் மாறானது. நீங்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என நினைத்தால் அதற்காகவே உருவாக்கப்பட்ட டோர் [TOR] பிரவுசர் மூலமாகத்தான் பயன்படுத்த முடியும். மிகவும் பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட டோர் [TOR] பிரவுசர் அதனை பயன்படுத்துகிறவர்களின் அடையாளத்தை முற்றிலுமாக மறைத்துவிடுகிறது.
மேலும், அதேபோல நீங்கள் எந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ அதன் முகவரி சரியாக தெரிந்தால் மட்டுமே அங்கே செல்ல முடியும். நீங்கள் டார்க் வெப்பை பயன்படுத்தும் போது உங்களைப்போலவே பிறரும் பயன்படுத்துவார்கள். ஒவ்வொருவருமே டார்க் வெப்பில் அடையாளமற்றவர்கள் என்பதனால் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
டார்க் வெப்பில் இணையதளங்கள் எப்படி இருக்கும்?
நாம் பார்க்கின்ற இணையதளங்கள் போன்றுதான் டார்க் வெப்பிலும் இணையதளங்கள் இருக்கும். ஆனால் நமது இணையதளங்கள் முடிவதைப்போல .in .com or .co என முடிவடையாமல் .onion என்றே முடிவடையும். அதுபோலவே பெரும்பான்மையான டார்க் வெப் இணையதளங்களை குறிப்பிட்ட IP முகவரியில் இருந்து இயங்குகிறவர்களால் மட்டுமே பார்க்க முடியும் என்ற அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும் இங்கே இருப்பது போன்று எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் விதத்தில் டார்க் வெப் இணையதளங்களின் இணைய முகவரிகள் இருக்காது. மாறாக, “eajwlvm3z2lcca76.onion.” இப்படித்தான் இருக்கும்.
அதுபோலவே டார்க் வெப் இணையதளங்கள் அதிக நாட்களுக்கு ஒரே முகவரியில் இயங்கும் எனவும் சொல்லிவிட முடியாது. பிறரால் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்திற்காக அடிக்கடி அதனை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் இவர்கள் சிக்கிவிடுவதும் உண்டு. அப்படி சில சமயங்களில் டார்க் வெப் இணையதளத்தை நிர்வகிப்பவர்கள் கைதான நிகழ்வுகளும் [AlphaBay] நடந்திருக்கின்றன.
டார்க் வெப் வளர்ச்சிக்கு காரணம் என்ன?
காவல்துறையின் கண்களில் இருந்து தப்பித்துக்கொண்டு தவறான செயல்களை செய்திட விரும்புகிறவர்களுக்கு டார்க் வெப் ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. பயன்படுத்துகிறவர்களின் அடையாளங்களை முற்றிலுமாக மறைத்துக்கொள்ளும் திறன் வாய்ந்த பிரவுசர்களை பயன்படுத்துவதனால் கண்டறிய முடியாது. அவர்கள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனையை ஆராய்வதன் மூலமாக அவர்களை பிடித்துவிடலாம் என்றாலோ பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சியை அவர்கள் பயன்படுத்துவதனால் அதிலும் சிக்கல் நிலவுகிறது. [கிரிப்டோகரன்சி, பிட்காயின் குறித்து படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம்]
டார்க் வெப்பில் பொருள்களை வாங்குவது என்பதும் மிகவும் ஆபத்தானது தான். உங்களுக்கு யாரிடம் இருந்து பொருள்களை வாங்குகிறோம் என்பது சுத்தமாக தெரியாது. நீங்கள் பணத்தை அனுப்பிய பிறகும் கூட அந்தப்பொருள் உங்களுக்கு வந்து சேரும் என உறுதியாக சொல்லிவிட முடியாது. உங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அவர்கள் தங்களை மறைத்துக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
டார்க் வெப் சட்டத்திற்கு புறம்பானதா?
நீங்கள் மேற்கூறியவற்றை படித்திருந்தால் டார்க் வெப் ஆபத்தான ஒன்றாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். தவறானவர்கள் டார்க் வெப்பை பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான் என்றாலும் கூட இணையம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் பல நாடுகளில் இருக்கிறவர்கள் அதனை மீறி தகவல்களை பெறுவதற்கு டோர் [tor] பெரும் உதவியாக இருந்து வருகிறது என்பதும் உண்மையே. அதுபோலவே மனித செயற்பாட்டாளர்கள் அரசு எதிரான விசயங்களை பாகிர்ந்துகொள்வதற்கும் இந்த நெட்ஒர்க் பயனுள்ளதாக இருக்கிறது. நாங்கள் தேடியவரைக்கும் நீங்கள் சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருள்களை ஆர்டர் செய்வது ஆயுதங்களை ஆர்டர் செய்வது போன்ற குற்ற செயல்களை செய்யாமல் இருந்தால் காவல்துறை உங்களை கைது செய்ய வாய்ப்பில்லை.
QR Code பண மோசடி எப்படி நடக்கிறது?| தப்பித்துக்கொள்வது எப்படி?
இதுபோன்ற பதிவுகளை பெறுவதற்கு எங்களது பேஸ்புக் பக்கத்தை பின்தொடருங்கள் அல்லது வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்திடுங்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.
.