Suicide Pod
ஸ்விட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் suicide pod குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படியொரு தற்கொலை மெசினை ஏன் உருவாக்க வேண்டும்? இது எப்படி வேலை செய்கிறது? என்பதை அறிந்துகொள்வோமா?
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு ஸ்விட்சர்லாந்து நாட்டில் அனுமதி உண்டு. அப்படி தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு மருத்துவர்கள் அவர்களது மனநிலையை சோதித்து ஒப்புதல் கொடுப்பார்கள். பின்னர் அவர்களுக்கு திரவ சோடியம் பெண்டோபார்பிட்டல் என்ற மருந்து செலுத்தப்படும். மருந்தை உட்கொண்ட பிறகு, ஆழ்ந்த கோமா நிலைக்குச் செல்வதற்கு முன், இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் நபர் தூங்கிவிடுவார், அதைத் தொடர்ந்து மரணம் ஏற்படுகிறது.
இப்போது உள்ள சூழ்நிலையில் ஒருவரின் தற்கொலை விவகாரத்தில் மருத்துவர்களின் பங்கு என்பது இருக்கிறது. ஆனால் மருத்துவர்களின் பங்களிப்பை நீக்கிவிட்டு சுயமாக தங்களின் மனநிலை பற்றி சோதிக்கவும் முடிவெடுக்கவும் உருவாக்கப்பட்டது தான் இந்த தற்கொலை மெஷின் என்கிறார்கள் இதனை உருவாக்கிய Exit International என்கிற அமைப்பை சேர்ந்தவர்கள்.
இந்த அமைப்பு தெரிவித்துள்ள தகவல்படி கடந்த 2020 இல் மட்டும் 1300 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
இந்த மெஷின் எப்படி வேலை செய்கிறது?
நீங்கள் படத்தில் காண்பது போல ஒருவர் படுத்துக்கொள்ளும் விதத்தில் தான் இந்த suicide pod வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 3டி மெஷினில் தான் உருவாக்கி இருக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ள விரும்பும் ஒருவர் இதற்குள் சென்று படுக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு திரையில் காண்பிக்கப்படும் சில கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். அதேபோல, தாங்கள் யாருக்கேனும் செய்திகளை விட்டுச்செல்ல வேண்டும் என விரும்பினால் அதனை வீடியோ ரெகார்ட் செய்திடும் வசதியும் உண்டு. முழுவதுமாக உடலையே அசைக்க முடியாதவர்கள் கூட இந்த மெசினை கண் சிமிட்டல் மூலமாக ஆன் செய்திட முடியுமாம். அனைத்தும் முடிந்த பிறகு தற்கொலைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
இந்த வேலை ஆரம்பித்த அடுத்த 30 வினாடிகளுக்குள் நைட்ரஜன் அளவு அதிகரிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டு அந்த நபர் மயக்கமடைந்து விடுவார். அடுத்த அடுத்த நிமிடங்களில் ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை போன்ற காரணங்களால் குறிப்பிட்ட அந்த நபர் இறந்துவிடுவார். தான் இறந்தது கூட அந்த நபருக்கு தெரியாது. எந்தவித வலியும் இன்றி, தூக்கிப்போடுதல் போன்ற எதுவுமே இல்லாமல் இறந்துவிடுவார்.
இந்த மெஷின் விற்பனைக்கு வருமா என்ற கேள்விக்கு “இது கடைகளில் விற்பனைக்கு வராது. இதுவேண்டுமென நினைக்கிறவர்கள் எங்களுடைய 3டி பார்முலாவை டவுன்லோட் செய்து உருவாக்கிக்கொள்ள முடியும்” என தெரிவித்து உள்ளார்கள்.
இந்தியாவில் இப்படிப்பட்ட மெஷின்களுக்கு அனுமதி கிடையாது. இந்தியாவில் ஒருவர் தற்கொலைக்கு முயல்வது என்பது சட்டப்படி குற்றம்.
மரணத்தை இயல்பாக்கும் இதுபோன்ற மெஷின்கள் ஆபத்தானவை என்பதை நாம் மறுக்க முடியாது.