உலகம் முழுமைக்கும் பயணம் மேற்கொள்கிறவர்கள் தங்கும் “ஹோட்டல் அறைகள்” பிசினஸில் கொடிகட்டி பறக்கும் ஓர் இந்திய நிறுவனம் தான் ஓயோ [OYO]. இந்தியாவைச் சேர்ந்த ரிதேஷ் அகர்வால் என்கிற இளைஞரால் 2013 ஆம் ஆண்டு ஒரு சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக துவங்கப்பட்டது தான் இந்த ஓயோ நிறுவனம். இன்று உலக அளவில் மிகப்பெரிய ஸ்தாபனமாக வளர்ந்து நிற்கிறது. மிகக்குறைவான விலையில் அறைகள் கிடைப்பது மட்டுமின்றி Relationship Mode போன்ற பல வசதிகளையும் கொண்டுள்ளது ஓயோ.
இந்தப்பதிவில் OYO நிறுவனத்தின் வெற்றிப்பயணம் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதோடு, அந்நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள அதே சமயம் பெரும் விமர்சனத்தையும் பெற்ற Relationship Mode என்கிற வசதி குறித்தும் பார்க்கலாம்.
OYO Rooms நிறுவனத்தின் ஆரம்ப காலம்
2013 ஆம் ஆண்டுவாக்கில் ரிதேஷ் அகர்வால் என்ற 19 வயது இளைஞரால் உருவானது தான் OYO நிறுவனம். இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் எளிமையான நோக்கமே, இந்தியாவில் பயணிக்கும் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும்படியான வாடகையில் தரமான மற்றும் வசதியான தங்கும் அறைகளை வழங்குவது தான்.
ஓயோ நிறுவனத்தின் பிசினஸ் மாடல் மிகவும் எளிமையானது. அதன்படி, OYO நிறுவனம் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் ஹோட்டல்களை குத்தகைக்கு எடுப்பார்கள். பிறகு அந்த ஹோட்டலை புதுப்பித்து மேம்படுத்தி OYO Rooms என பெயரிடுவார்கள். பிறகு அதனை பயணம் மேற்கொள்கிறவர்களுக்கு வாடகைக்கு விடுவார்கள்.
கேட்பதற்கு இது மிகவும் எளிமையான பிசினஸ் மாடல் என தோன்றலாம். ஆனால், இதிலேயும் பல சவால்களை OYO நிறுவனம் சந்திக்க வேண்டி இருந்தது. பல இடங்களில் அவர்களுக்கு குத்தகைக்கு கிடைத்த ஹோட்டல்கள் அனைத்தும் மோசமான நிலையிலேயே இருந்தன. அவற்றை புதுப்பிக்க ஓயோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் செலவு செய்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த சவால்களை வெற்றிகரமாக கையாண்டார் ரிதேஷ் அகர்வால். ஓயோவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு அவர் தனது பிசினெஸ் மாடலை மாற்றவும் செய்தார். புக்கிங் செய்வது முதல் ஹோட்டல் அறைகள் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவது வரைக்கும் ஒரு சுமூகமான நிலையை வாடிக்கையாளர்களுக்கு தருவது என்ற ஓயோவின் நிலைப்பாட்டில் ரிதேஷ் அகர்வால் கண்டிப்போடு இருந்தார். இதன் அடிப்படையில், பல இடங்களில் குத்தகைக்கு ஹோட்டல்களை கைப்பற்றவதற்கு பதிலாக சொந்தமாக விலைக்கே வாங்க ஆரம்பித்தது ஓயோ நிறுவனம். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.
மேலும், வாடிக்கையாளர்கள் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்வதற்கும், தங்களது அனுபவங்களை பதிவிடுவதற்கும் பிரத்யேகமாக OYO Rooms என்கிற மொபைல் ஆப், இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓயோவின் அசுர வளர்ச்சி
OYO இந்தியாவில் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அசுர வளர்ச்சி அடைந்தது. அந்நிறுவனத்திற்கு ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே 8500 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இந்தியாவில் இருந்தன. இந்த நிறுவனத்தின் சூப்பரான பிசினஸ் பிளான் காரணமாக மூலை முடுக்குகளில் எல்லாம் OYO நிறுவனத்தின் ஹோட்டல்கள் இருந்தன. வெறும் ஹோட்டல் அறைகள் மட்டுமல்லாமல் வீடுகளைக்கூட முக்கிய நகரங்களில் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வழங்கியது.
2016 ஆம் ஆண்டு இந்நிறுவனம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றது. இந்த முதலீடு இந்நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைய பெரிய அளவில் உதவியது. 2018 ஆம் ஆண்டு இந்நிறுவனம் சீனாவின் Didi Chuxing என்ற நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் இந்நிறுவனம் சீன மார்க்கெட்டில் நுழைய உதவியது. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் அதிக ஹோட்டல் [sixth-largest hotel chain in the world] கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் ஆறாம் இடத்திற்கு முன்னேறியது.
உலக அளவில் விரிவடைந்த OYO நிறுவனம்
இந்தியாவில் அடைந்த வெற்றியைத்தொடர்ந்து உலக அளவில் தனது பிசினஸை விரிவுபடுத்தியது ஓயோ நிறுவனம். அதன்படி, 2018 ஆம் ஆண்டு நேபால் நாட்டில் தனது முதல் அயல்நாட்டு கிளையை துவங்கியது ஓயோ. அதற்கடுத்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவு படுத்தியது.
வெளிநாடுகளில் தனது கிளைகளை திறக்கும் போது பல பிரச்சனைகளை சந்தித்தது ஓயோ நிறுவனம். குறிப்பாக, அந்தந்த நாடுகளின் விதிகளுக்கு ஏற்ப தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை மாற்ற வேண்டிய சூழல் இந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டது. ஆனாலும் கூட இந்த நிறுவனம் அனைத்தையும் சமாளித்து வெற்றிகரமாக பயணத்தை தொடர்ந்தது.
இப்போது 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை திறந்துள்ளது ஓயோ நிறுவனம்.
திருமணம் ஆகாதவர்களுக்கும் அறைகள் தரும் OYO [Relationship Mode]
ஓயோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு உக்திகளை பயன்படுத்தி வருகிறது. அதன்படி, அந்நிறுவனம் புதிதாக Relationship Mode என்கிற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது ஒருபுறம் வரவேற்பையும் மறுபுறம் விமர்சனத்தையும் பெற்றது. OYO வின் Relationship Mode குறித்து இங்கே பார்க்கலாம்.
நமது ஊர்களில் உள்ள ஹோட்டல் அறைக்கு ஒரு ஆணும் பெண்ணும் சென்றால் அவர்களுக்கு திருமணம் ஆகி உள்ளதா என்பதை பார்த்து தான் ஹோட்டலில் அறை வழங்குவார்கள். தாலி உள்ளிட்ட திருமணம் நடந்ததற்கான அடையாளங்கள் இல்லையெனில் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கேட்டே விடுவார்கள். இதனால், திருமணம் ஆகாதவர்கள் அறை எடுத்து தங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே Relationship Mode என்கிற வசதியை ஓயா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஓயோ ஆப் அல்லது இணையதளத்திற்கு சென்று Relationship Mode என பில்டர் செய்தால் திருமணம் ஆகாதவர்களை அனுமதிக்கும் ஹோட்டல்களின் விவரங்களை பார்க்க முடியும்.
ஆனால், இந்த Relationship Mode ஆல் சில இடங்களில் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது ஓயோ நிறுவனம்.
OYO – வெற்றிகரமான நிறுவனம்
தனக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் தங்குவதற்கு ஹோட்டல் அறைகளை எடுப்பதில் துவங்கி, அவர்கள் அறைகளை காலி செய்து வெளியே செல்வது வரைக்கும் அதிக சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை ரிதேஷ் அகர்வால் உணர்ந்துகொண்டார். அந்த அனுபவத்தில் இருந்து ஹோட்டல் அறை விசயத்தில் ஒரு சௌகரியமான சூழலை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக OYO என்கிற நிறுவனத்தை துவங்க 19 வயதில் திட்டமிட்டார். விரைவாகவே அந்நிறுவனத்தை துவங்கியும் விட்டார். ஒரு நல்ல ஐடியா கொண்ட பிசினஸ்க்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வல்லமை உண்டு. ஆகவே, ஓயோ பல முதலீட்டாளர்களை ஈர்த்தது. விரைவாகவே வளர்ந்தது. இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.