இவர்களுடைய கருவி வெறும் ரூ 10,000 தயாரிக்கக்கூடியது. அதிகப்படியாக தயாரிக்கும் போது இன்னும் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு நோயாளிக்கு மூச்சு பிரச்சனையை சரி செய்திட உதவும் அடிப்படை விசயங்களை கொண்டதாக இந்த வெண்டிலேட்டர் இருக்கும்.
கோவிட் 19 அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடுமையான உடல்நலக்குறைவை சந்திக்கும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக்கருவி [வெண்டிலேட்டர்] அவசியமான ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்திய அரசு இரண்டு விதங்களில் மருத்துவ உபகரணங்களை சேகரிப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி, உள்நாட்டிலேயே முடிந்த அளவு மருத்துவ உபகரணங்களை தயாரிப்பது மற்றும் நாட்டிற்கு வெளியே இருந்த்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வது என்ற வழிமுறைகளை இந்தியா பின்பற்றி வருகிறது.
அதற்காக இந்தியாவில் கார் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களைக்கூட தற்காலிகமாக வெண்டிலேட்டர் தயாரிக்கும் பணியில் ஈடுபடுமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதை பின்பற்றி மஹேந்திரா உள்ளிட்ட கார் நிறுவனங்கள் வெண்டிலேட்டர் தயாரிப்பு பணியில் ஈடுபடுகின்றன. தற்போது ஐஐடி மாணவர் குழு உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருள்களைக்கொண்டு மிகக்குறைந்த விலையில் தயாரிக்கக்கூடிய வெண்டிலேட்டர் கருவி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய வெண்டிலேட்டர் கருவிக்கு ருத்தார் வெண்டிலேட்டர் [Ruhdaar ventilator] என்றும் பெயர் வைத்துள்ளனர்.
இதுவரைக்கும் அறியப்பட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான 80% பேருக்கு சாதாரண நோய் பாதிப்பு மட்டுமே இருக்கும், 15 % பேருக்கு சற்று அதிகமாக நோய் தாக்குதல் பாதிப்பு இருக்கும் இவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும், மீதமுள்ள 5% பேருக்கு தான் நோய் பாதிப்பு கடுமையாக இருக்கும். இவர்களுக்கு தான் செயற்கை சுவாசம் வழங்கக்கூடிய வெண்டிலேட்டர் கருவிகள் தேவைப்படும்.
ருத்தார் வெண்டிலேட்டர் [Ruhdaar ventilator] உருவாக்கிய குழுவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அடங்கி இருக்கிறார்கள். ஐஐடி மும்பை, NIT ஸ்ரீநகர், இஸ்லாமிக் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அவந்திபுரா ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்று இருந்தார்கள். இவர்களுடைய முக்கிய நோக்கம், உள்நாட்டில் கிடைக்கும் பொருள்களைக்கொண்டு விலை குறைவான தரமான வெண்டிலேட்டர் கருவிகளை உருவாக்குவது தான்.
இந்த குழுவை தலைமை தாங்கி செல்பவரான சுல்கர்னைன் [Zulqarnain] ஐஐடி மும்பையில் Industrial Design Centre பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பினால் கல்லூரிகள் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊரான காஷ்மீருக்கு செல்கிறார். அங்கு கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் பற்றாக்குறை நிலவுவதாகவும் வெறும் 97 வெண்டிலெட்டர்கள் தான் இருக்கின்றன எனவும் செய்திகள் வெளியாகியது. இது அந்தப்பகுதி மக்களை பெரும் வருத்தத்திலும் பயத்திலும் ஆழ்த்தியதை உணர்ந்தார் சுல்கர்னைன்.
பின்னர் IUST இல் பயிலும் தனது நண்பர்களான சாஹிப், ஆசிப் ஷா, சங்கர் நேவி ஆகியோரை கூட்டு சேர்த்துக்கொண்டு வெண்டிலேட்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடத்துவங்கினார்கள். தங்களுக்கு உள்நாட்டிலேயே கிடைக்கும் பொருள்களைக்கொண்டு வெண்டிலேட்டர் தயாரிக்க முயற்சி செய்தோம் என குறிப்பிடும் சுல்கர்னைன், தங்களுக்கு தேவையான பொருள்கள் கிடைப்பதில் சில சிக்கல்களும் இருந்தது என குறிப்பிடுகிறார். அதையும் தாண்டி தற்போது ரூ 10,000 மதிப்பிலான வெண்டிலேட்டர் கருவியை உருவாக்கும் புரோட்டோடைப்பை உருவாக்கி வைத்திருக்கும் இவர்கள் அதை மருத்துவ சோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
தற்போது சில மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வசதிகள் கொண்ட வெண்டிலேட்டர் கருவியானது லட்சக்கணக்கில் மதிப்புடையதாக இருக்கின்ற பட்சத்தில் இவர்களுடைய கருவி வெறும் ரூ 10,000 செலவில் தயாரிக்கக்கூடியது. அதிகப்படியாக தயாரிக்கும் போது இன்னும் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு நோயாளிக்கு மூச்சு பிரச்சனையை சரி செய்திட உதவும் அடிப்படை விசயங்களை கொண்டதாக இந்த வெண்டிலேட்டர் இருக்கும். சோதனைகளில் வெற்றி பெற்று இதற்கு அனுமதி கிடைத்தால் பெரும் அளவில் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறுமனே விடுமுறையில் ஓய்வெடுக்காமல் தங்களுடைய மக்களுக்காக முயற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.