நமது வாழ்க்கையில் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணம் தான் இருக்கின்றன . ஆனால் நமக்கு அத்தனை நிகழ்வுகளும் நியாபகம் இருப்பதில்லை . 5 ஆம் வகுப்பில் ஆசிரியரிடம் பாராட்டு வாங்கியது , பக்கத்து வீட்டு நண்பனிடம் சண்டை போட்டது , உலக கோப்பையை இந்திய அணி வாங்கிய தருணம் , மகள் பிறந்த செய்தியை நர்ஸ் சொல்லிய நிகழ்வு போன்ற சிறப்பான , நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும் என விரும்பிய நிகழ்வுகள் மட்டும் எவ்வளவு நாட்களானாலும் நினைவிலே இருக்கின்றன .
மூளை நினைவுகளை சேமித்து வைக்கும் அது அனைவரும் அறிந்ததே . தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகளில் சில முக்கியமான நிகழ்வுகளை மட்டும் மூளை நினைவில் வைத்திருக்க வேண்டுமானால் அதனை பிரித்து எடுக்க வேண்டுமல்லவா ? ஒரு திரைப்படத்தில் காமெடி சீனை மட்டும் கட் செய்ததைப்போல என எண்ணிக்கொள்ளுங்கள் . இதனை செய்வதற்கு வீடியோ எடிட்டர் மென்பொருள்கள் இருக்கின்றன . ஆனால் மூளை எப்படி இந்த எடிட்டர் வேலையை செய்கின்றது ?
நமது மூளையில் இருக்கக்கூடிய ஹிப்போகேம்பஸ் (hippocampus) எனும் பாகம்தான் இந்த ஆச்சர்யமான எடிட்டர் வேலையை செய்கின்ற பாகம் என்பதனை கண்டறிந்துள்ளனர் அறிவியலாளர்கள்.
முதலில் நடக்கும் தொடர் நிகழ்வுகளை எப்படி சினிமாவில் வரக்கூடிய சீன்களை போல கட் செய்துகொள்கிறது , பிறகு எப்படி முக்கியமானவற்றை மட்டும் சேமித்துவைக்கிறது என்பதே பிரதானமான கேள்விகளாக இருந்துள்ளன .
Aya Ben-Yakov and Rik Henson என்ற இரண்டு நரம்பியலாளர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்கள் . இவர்களின் ஆய்வினுடைய முக்கிய நோக்கம் , மூளை எப்படி தொடர்ச்சியான நிகழ்வினை ஒவ்வொரு பகுதியாக பிரிக்கிறது என்பதுதான் . இதற்காக நீளமான வீடியோ ஒன்று பார்வையாளர்களுக்கு காட்டப்பட்டது . அதோடு சேர்த்து ஒரு சீன் முடிவடையும் போதும் இன்னொரு சீன் தொடங்கும் போதும் குறிப்பெடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்கள் . ஆச்சர்யமாக பெரும்பாலானவர்கள் கொடுத்த தரவுகள் ஒத்துப்போய் இருக்கின்றன .
இதனால் ஆச்சர்யமடைந்தவர்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் மூளையில் இருக்கக்கூடிய ஹிப்போகேம்பஸ் என்னும் பாகம் தான் எடிட்டர் வேலையை செய்வதாக கண்டறிந்துள்ளனர் .
இன்னும் எத்தனையோ வியப்புகள் மனிதனுக்குள்ளே அடங்கியிருக்கின்றன ….பார்ப்போம் .
TECH TAMILAN