இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான தங்கம் இந்த உலகில் தற்போது இருக்கிறது. இதில் 50% திற்கும் அதிகமான தங்கம் நகை வடிவிலேயே இருக்கிறது. அடுத்து 17% தங்கமானது வங்கிகளின் கையிருப்பில் இருக்கிறது.
முதலீடு செய்ய நினைப்பவர்களின் முதல் பார்வையே தங்கத்தில் தான் இருக்கிறது. தங்கத்தை வாங்க இப்போது ஏராளமான வழிகள் இருக்கின்றன. நகைகளாகவோ, காயின்களாகவோ, கட்டிகளாகவோ, முதலீட்டு பத்திரங்களாகவோ வாங்க முடியும். இப்படி பல வாய்ப்புகள் இருப்பதனால் தங்கம் வாங்க சிறந்ததொரு வாய்ப்பு எது என்பதனை அறிந்துகொள்ள என்னைப்போலவே பலரும் ஆர்வமாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
அப்படி தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள் என்ன, தங்கத்தை நகைகளாக வாங்குவது லாபகரமான முதலீடா என்பவை குறித்து தான் இந்தப்பதிவில் விரிவாக பார்க்க இருக்கிறோம். நிச்சயமாக இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாக இருக்கும் என நம்புகிறேன்.
Personal Finance குறித்து மேலும் பல பயனுள்ள கட்டுரைகள் இங்கே உள்ளன. நீங்கள் படித்து பயன்பெறலாம்.
தங்கம் ஏன் வாங்க வேண்டும்?
வெவ்வேறு காரணங்களுக்காக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தின் சொத்தாக தங்கம் கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களிலும் திருமண நிகழ்வுகளின் போது தங்க பரிவர்த்தனையும் நடக்கிறது. இது வெறுமனே அழகுக்காக இல்லாமல் எதிர்காலத்திய பொருளாதார பாதுகாப்பிற்காகவே வழங்கப்படுகிறது.
ஆனால் இன்னமுமே பலருக்கு தங்கத்தில் ஏன் முதலீடு செய்திட வேண்டும் என்கிற காரணம் சரிவர தெரிவது இல்லை. அவர்களுக்கான முதலில் தங்கத்தில் முதலீடு செய்வதன் பலன்களை பார்த்துவிடலாம்.
1. மதிப்பு கூடும்
தங்கம் ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்பட மிக முக்கியமான காரணம், அதன் மதிப்பு காலைப்பொழுதில் நாம் கணிக்க முடியாத வகையில் உயரும் என நிரூபிக்கப்பட்டதால் தான். எந்தவொரு சிக்கலான நிலையிலும் மற்ற சொத்துக்களைப் போல தங்கத்தின் மதிப்பு குறைவதே இல்லை. உதாரணத்திற்கு, போர் சூழல் நிலவும் நேரங்களில் தங்கத்தின் விலை கூடவே செய்யும். ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
2. பணவீக்கத்திற்கு எதிரான சொத்து
நீங்கள் வங்கியில் பணத்தை போட்டு வைத்தால் அதன் மூலமாக கிடைக்கக்கூடிய வட்டி என்பது பணவீக்கத்தை விடவும் குறைவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் தங்கத்தில் முதலீடு செய்திடும் போது அதிகமான மதிப்பினை பெறலாம்.
3. அவசர தேவை
பெரும்பாலும் இந்தியாவில் நடுத்தர குடும்பங்கள் தான் அதிகம். அவர்களுக்கு அவசர தேவைகள் ஏற்படும் போது உடனடியாக அடமானம் வைத்தோ அல்லது விற்றோ பணத்தை பெறுவதற்கு தங்கம் மட்டுமே சிறந்த வாய்ப்பாக உள்ளது. தங்கம் இருந்தால் மிகவும் துரிதமாக உங்களுக்கு வேண்டிய நேரத்தில் பணமாக மாற்ற முடியும்.
4. முதலீடு செய்வது எளிது
நீங்கள் பங்கு சந்தையில் ஈடுபட மிகப்பெரிய அறிவு தேவை. ஆனால், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மிகப்பெரிய அறிவெல்லாம் தேவை இல்லை. நீங்கள் அதிலே முதலீடு செய்வது என்பது மிகவும் எளிதானது. உங்கள் ஊரில் உள்ள ஒரு கடைக்கு சென்றே தங்கத்தில் முதலீடு செய்ய முடியும்.
என்னென்ன முறைகளில் தங்கத்தை வாங்கலாம்?
பல்வேறு முறைகளில் நீங்கள் தங்கத்தை வாங்க முடியும். தேவைக்கு ஏற்பவே நீங்கள் எந்த முறையில் செய்தால் பலன் அதிகமாக இருக்கும் என்பதை கூற முடியும்.
தங்க நகைகள் அல்லது காயின்கள்
நாம் மேலே சொன்னது போல உலகில் இருக்கக்கூடிய தங்கத்தில் பாதி அளவு தங்கம் நகைகளாகவே இருக்கிறது. நீங்களும் தங்கத்தை நகைகளாக வாங்கலாம். ஆனால், அணிந்து கொள்ளவோ அல்லது திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காகவோ தங்கத்தை நகைகளாக வாங்கலாம். ஆனால், எதிர்கால முதலீடு என்ற நோக்கத்தில் வரும்போது நகைகளாக வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், நீங்கள் தங்கத்தை நகையாக வாங்கும்போது செய்கூலி சேதாரம் என பல கட்டணங்களை போட்டு தான் விற்பனை செய்வார்கள்.
நான் எதிர்காலத்திற்காக முதலீடு செய்கிறேன் என வரும்போது காயின்களாக வாங்கலாம். நீங்கள் தங்க நகை வாங்கும் கடைகளிலேயே கூட இப்படி வாங்கலாம். 0.5 கிராம் முதல் 50 கிராம் வரைக்கும் தங்க காயின்கள் சந்தையில் கிடைக்கின்றன.
Gold ETFs
Gold ETFs என்பதன் ஆங்கில விரிவாக்கம் Gold Exchange Traded Funds. பங்கு சந்தையில் பங்குகளை வாங்குவதைப்போல நிறுவனங்கள் அளிக்கும் ETF ஐ வாங்கலாம். இது தங்கத்தின் மதிப்பிற்கு நிகராக ஏறும் இறங்கும். மிக மிக குறைந்த விலைக்கே இந்த பங்குகளை வாங்க முடியும். இந்த முறையில் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு Demat கணக்கு தேவை.
Sovereign Gold Bonds (SGB)
தங்கத்தை நேரடியாக வாங்காமல் தங்க பத்திரம் மூலமாக வாங்குவது தான் Sovereign Gold Bonds (SGB). ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இதற்கான வாய்ப்பு வழங்கப்படும். குறிப்பிட்ட ஒரு வார காலத்திற்குள் பத்திரத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு எப்போது உங்களுக்கு பணம் தேவையோ அப்போது நீங்கள் இந்த பத்திரத்தை கொடுத்துவிட்டு அப்போதைய தங்கத்தின் மதிற்பிற்கு நிகரான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
சேதாரம், செய்கூலி என நகைகளில் வீணாக்காமல் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
Digital gold
தற்போது டிஜிட்டல் வடிவத்தில் தங்கம் வாங்க முடியும். உதாரணத்திற்கு, Phonepe, GooglePay போன்ற ஆப்களில் எவ்வளவு பணத்திற்கு வேண்டுமானாலும் தங்கத்தை டிஜிட்டல் முறையில் வாங்க முடியும். இவை MMTC – PAMP உடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த வசதியை மக்களுக்கு வழங்குகின்றன.
Gold Investment : தங்கம் வாங்க சிறந்த வழி என்ன?
Type of Gold Investment | Key Risks |
Physical Gold | திருடு போகலாம், தரத்தில் குறைபாடு இருக்கலாம், மீண்டும் விற்கும் போது விலை குறையலாம். |
Digital Gold | சரியான மேற்பார்வை எதுவும் இல்லாமல் இருக்கிறது. |
Gold ETFs | தங்கத்தின் விலைக்கு ஏற்றவாறு ஏற்ற இறக்கங்கள் இருக்கும். |
Gold Mutual Funds | மார்க்கெட்டின் நிலையை பொறுத்து ஏற்ற இறக்கங்கள் இருக்கும். |
Sovereign Gold Bonds | ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வங்கியால் வழங்கப்படுகிறது. |
ஒவ்வொரு முறையிலும் சில நன்மைகள் மற்றும் சவால்கள் இருக்கவே செய்யும். நாம் மேலே சொன்னது போல, அணிவதற்கும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் அல்லாமல் முதலீடு காரணங்களுக்காக தங்கம் வாங்க நினைத்தால் காயின் வடிவில் தங்கம் வாங்குங்கள். ஆனால், தங்கத்தை பாதுகாப்பது இப்போது சிரமமான காரியமாக இருக்கிறது. ஆகவே, பத்திரமாக [Sovereign Gold Bonds] நீங்கள் வாங்கும் போது திருட்டு பயம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. Demat Account மூலமாகத்தான் பரிவர்த்தனை நடக்கும் என்பதனால் திருட்டு பயம் தேவை இல்லை. செய்கூலி, சேதாரம் என எந்தவித பிரச்சனையும் இருக்காது.
எந்தமுறையில் தங்கம் வாங்க வேண்டும் என்பதை விட, தங்கம் வாங்குவது மிகச்சிறந்த முதலீடு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாக நிச்சயமாக தங்கம் இருக்கும்.
Personal Finance குறித்து மேலும் பல பயனுள்ள கட்டுரைகள் இங்கே உள்ளன. நீங்கள் படித்து பயன்பெறலாம்.