ஒருவேளை இந்த ஆய்வு வெற்றிகரமாக ஒவ்வொரு நாட்டிலும் நடந்தால் கொசுக்கள் பெருமளவில் ஒழிக்கப்பட்டுவிடும் என நம்பப்படுகிறது. ஆனால் இயற்கைக்கு மாறான வகையில் கொசுக்களை கட்டுப்படுத்துவது எந்தவகையான தாக்கத்தை சுற்றுசூழலில் ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மில்லியன் கணக்கான கொசுக்கள் [OX5034 Aedes aegypti] அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் பறக்கவிடப்பட்டன. Oxitec எனும் பயோடெக் கம்பெனியானது கொசுக்களில் ஆய்வுகளை நடத்தி, ஆண் கொசுக்களின் மரபணுவில் மாற்றம் செய்தது. இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களோடு உறவில் ஈடுபட்டால் உருவாகக்கூடிய புதிய கொசுக்களில் ஆண் கொசு மட்டுமே உயிரோடு இருக்க முடியும், பெண் கொசுவானது பிறந்த சில நாட்களிலேயே தானாக இறந்துவிடும்.
அதேபோல, புதிதாக பிறந்த ஆண் கொசுவிற்குள்ளும் இந்த மரபணு மாற்றம் நடப்பதால் அந்த கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டாலும் இதே போன்றதொரு நிலை தான் ஏற்படும். இதனால், மனிதர்களை கடிக்கும் பெண் கொசுக்களை எளிதில் ஒழித்துவிட முடியும் என்பது விஞ்ஞானிகளின் திட்டம்.
மனிதர்களை தாக்கும் பெரும்பான்மையான நோய்கள் கொசுக்களின் மூலமாகவே பரவுகின்றன. குறிப்பாக, பெண் கொசுக்கள் தான் மனிதர்களை கடிக்கும் என்பதனால் தான் பெண் கொசுக்களை ஒழிக்கும் வகையில் இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டம் நீடித்தால் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு இனப்பெருக்கம் செய்திட பெண் கொசுக்களே இல்லாமல் போகலாம்.
இயற்கைக்கு மாற்றாக நடக்கும் இந்த ஆய்வுக்கு எதிர்ப்புக்குரல் எழாமல் இல்லை. ஆனாலும், இந்த ஆண்டு மீண்டும் சில இடங்களில் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் வெளியில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.