கேரளாவில் அரைத்த தேங்காய், தேங்காய் சட்னி பவுடர், சிக்கன் கரி மசாலா, இறால் சட்னி பவுடர், சூடான பதப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் என்பவற்றை விற்பதன் மூலமாக மாதத்திற்கு ரூ 1 லட்சம் சம்பாதிக்கிறார் லட்சமி ராஜ். எப்படி இவர் இந்தத் தொழிலில் இறங்கினார்?
தொழில் துவங்குவதற்கு இரண்டு விசயங்கள் அடிப்படையான தேவையாக இருக்கிறது. முதலாவது, நல்ல யோசனை. இரண்டாவது துணிந்து அதில் இறங்குவது. இந்த இரண்டையும் செய்துதான் தற்போது வெற்றிநடை போடுகிறார் கேரளாவின் லட்சமி ராஜ். 5 ஆண்டுகள் அபுதாபியில் இருந்துவிட்டு 2016 இல் இந்தியா திரும்பினார் அஜின் – லட்சமி ராஜ் தம்பதியினர். அபுதாபியில் இருக்கும் போது உடனடியாக சமைப்பதற்கு தேவையான பேக் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள் எளிமையாக கிடைத்தன. ஆனால் கேரளா திரும்பிய இவருக்கு ‘உடனடி உணவு பொருட்கள்’ கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
குறிப்பாக, அரைத்த தேங்காய் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவியது. கேரளாவில் சமைக்கப்படும் அதிகப்படியான உணவுப்பொருள்களுக்கு தேவையாக இருப்பது அரைத்த தேங்காய். சமைக்கும் போது அரைத்த தேங்காய் தயார் செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு 30 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் ஏற்கனவே பேக் செய்யப்பட்ட அரைத்த தேங்காயை பயன்படுத்துவதனால் விரைவாக உணவை சமைத்துவிட முடியும். கேரள உணவுகளில் அதிகம் பயன்படும் அரைத்த தேங்காய்க்கு பற்றாக்குறை நிலவுகிறது. இத்தனைக்கும் கேரளாவில் எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள் தான் இருக்கின்றன. இதுதான் Easy ‘n’ Fresh என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது.

MBA பட்டதாரியான லட்சமி ராஜ் தனது கணவரிடம் ஸ்டார்ட்அப் நிறுவனம் துவங்குவது பற்றி ஆலோசனை நடத்தினார். அவரும் இது நல்ல யோசனை தானே என ஊக்கப்படுத்தினார் கணவர். நிறுவனம் லட்சமி அவர்களின் வீட்டில் துவங்கப்பட்டது. அரைத்த தேங்காயை உருவாக்கத் தேவையான இயந்திரங்களை வாங்குவதற்கு 5 லட்சம் வங்கியில் லோன் வாங்கினார். 100 கிராம் அரைத்த தேங்காய் 33 ரூபாய்க்கும் 200 கிராம் 46 ரூபாய்க்கும் விற்பனைக்கு தயார் ஆனது. இவர் தனது தயாரிப்புகளை முதலில் அருகே இருக்கும் கடைகளில் விற்பனைக்கு வைத்தார். இவர் அரைத்த தேங்காயை தேடியது போல நிறைய பேர் தேடியிருப்பார்கள் போல விற்பனை சூடு பிடித்தது.
எதிர்பார்ப்பு கூடவே இவர் 6 பணியாட்களுடன் தனியாக ஒரு உற்பத்தி ஆலையை நிறுவினார். வெறும் அரைத்த தேங்காயுடன் நில்லாமல் கூடவே தேங்காய் சட்னி பவுடர், சிக்கன் கரி மசாலா, இறால் சட்னி பவுடர், சூடான பதப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் என பல பொருள்களையும் உற்பத்தி செய்து வியாபாரத்தை அதிகப்படுத்தினார். கேரளாவைத்தாண்டி இவரது பொருள்கள் விற்பனைக்காக சென்றன. குறிப்பாக இவரது அரைத்த தேங்காய்க்கு கேரளாவைவிடவும் டெல்லியில் வரவேற்பு கூடியது. தற்போது இந்த நிறுவனத்தின் மூலமாக மாதம் 1 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் லட்சுமி. வருகிற லாபத்தையும் நிறுவனத்தில் புதிய பொருள்கள் தயாரிப்பதற்கு முதலீடாக போடுவதாக தெரிவிக்கிறார் லட்சுமி.
உங்கள் பகுதியில் குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு தேவை ஏற்பட்டால் அதனை உங்களால் பூர்த்தி செய்திட முடியுமென நீங்கள் நினைத்தால் உடனே தைரியமாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்குங்கள். வெற்றி உங்களுடையதே.
Read More : 600 ட்ரோன்களை உருவாக்கிய ட்ரோன் பிரதாப் கதை