அமெரிக்க மக்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சம நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக ஜூலை மாதத்தில் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை நிறுத்துங்கள் என ஒரு இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது – “Stop Hate For Profit”. அதில் பல நிறுவனங்களும் இணைந்து வருகின்றன.
உலகம் முழுமைக்கும் இனவாதம் என்பது வேரூன்றிப்போய் இருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பு, வெள்ளை என்றால் இந்தியாவில் சாதி, மதம் என இருக்கும். பெயர்கள் தான் வேறு வேறே தவிர அனைத்தும் பிரிவினை என்ற ஒன்றை நோக்கியே செல்கிறது. பல சமயங்களில் இந்த இனவாதம் அல்லது பிரிவினைவாதத்தை மக்கள் கடந்து சென்றாலும் கூட அவ்வப்போது நடைபெறும் சில நிகழ்வுகள் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி இனவாதம் அல்லது பிரிவினைவாதத்திற்கு எதிராக மக்களை ஒரு கோட்டில் நிற்கச்செய்கிறது.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் போலீசாரின் தவறான அணுகுமுறையால் கொல்லப்பட்ட பிறகு இனவாதத்திற்கு எதிராக மக்கள் ஒன்று சேர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக இனவாத கருத்துக்களும் பிரிவினைவாத கருத்துக்களும் பெரிதும் இடம்பெறும் சமூக வலைதளங்களுக்கு எதிரான போராட்டத்தையும் சிலர் முன்னெடுத்து இருக்கிறார்கள். அதில் முதன்மையானதாக எதிர்ப்பை சந்தித்து இருப்பது “பேஸ்புக்” நிறுவனம் தான். அமெரிக்க அதிபரின் கருத்து தொடர்பான மார்க்கின் நிலைப்பாடு கூட அதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.
அமெரிக்காவில் தற்போது “Stop Hate For Profit” என்ற இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் இணையத்தளத்திற்குள் சென்று பார்த்தால் “We are asking all businesses to stand in solidarity with our most deeply held American values of freedom, equality and justice and not advertise on Facebook’s services in July. #StopHateforProfit” என கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதாவது, “அமெரிக்க மக்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சம நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக ஜூலை மாதத்தில் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை நிறுத்துங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் பல்வேறு நிறுவனங்கள் கடந்த வாரங்களில் இணைந்தன. மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிற யுனிலீவர் அதன் பிராண்டுகளான Dove, Ben & Jerry’s and Hellmann’s போன்றவை தங்களது விளம்பரங்களை டிசம்பர் 31,2020 வரைக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நிறுத்தப்போவதாக அறிவித்து இருக்கிறது.
தற்போது மிகப்பெரிய குளிர்பான நிறுவனமாக அறியப்படுகிற கோகோ கோலா நிறுவனமும் 30 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்யப்போவதை நிறுத்தப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதற்கான காரணமாக, கோகோ கோலா நிறுவனத்தின் சேர்மன் ஜேம்ஸ் குயின்சி கூறும்போது “இனவாதத்திற்கு இந்த உலகத்தில் இடமில்லை அதுபோலவே இனவாதத்திற்கு சமூக வலைதளங்களில் இடமில்லை” என தெரிவித்து இருக்கிறார்.
நிறுவனங்களின் புறக்கணிப்பிற்கு காரணம் என்ன?
சமூக வலைதளங்கள் மக்களிடம் நெருக்கமாக பொருள்களை கொண்டு சேர்க்க உதவின. அதேசமயம், சமூக வலைதளங்கள் பொய்யான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை உண்டாக்கும் கருத்துக்கள் உள்ளிட்டவற்றால் நிரம்பி வழியவும் ஆரம்பித்தன. இதன் காரணமாக, பெரும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்கள் சந்திக்க ஆரம்பித்தன. குறிப்பாக பேஸ்புக் இதில் பெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. பேஸ்புக் சார்பாக பல்வேறு நடவெடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டாலும் கூட ஒரு சராசரி மனிதனாக நாம் பேஸ்புக்கை பயன்படுத்தும்போது பார்க்கக்கூடிய பல விசயங்கள் பொய்யானதாகவோ அல்லது தவறான தகவலாகவோ இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
சமூக வலைதளங்களில் இருந்து 100% பொய்யான தகவல்களையும் இனவாத கருத்துக்களையும் நீக்குவது என்பது இயலாத காரியம் என்பதுதான் எதார்த்தம் என்றாலும் கூட தற்போது உலகில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு கொண்டு இருக்கும் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்கள் இதுபோன்ற கருத்துக்களை தங்களது தளங்களில் இருந்து நீக்குவதற்கு இன்னும் பல தொழில்நுட்ப முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருக்கிறது.
இதனை வலியுறுத்தித்தான் தற்போது பல நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்வதனை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள இருப்பதாக அறிவித்து உள்ளன. தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் விளம்பரங்களை புறக்கணிக்கும் பட்டியலில் இணைந்துகொண்டு இருப்பது பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு பின்னடைவை தந்திருக்கின்றன. இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் மதிப்பு குறைந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.