Bitcoin In Tamil
முன்னனி இணையதளங்களின் தகவலின் படி உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய முதன்மையான க்ரிப்டோகரன்சிகளில் முன்நிலை வகிப்பது பிட்காயின் தான் . கிரிப்டோகரன்சியென்றால் முற்றிலும் இணையத்திலேயே இருக்ககூடிய டிஜிட்டல் கரன்சி .
பிட்காயின் தற்போது அதிகமாக புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. தொடர்ச்சியாக உயரும் பிட்காயின் மதிப்பு அதிலே முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்ற ஆர்வத்தை பலருக்கும் உண்டாக்குகிறது. ஆகவே அதுபற்றி அறிந்துகொள்ள பலரும் விருப்பம் தெரிவிக்கிறார்கள். இந்தப்பதிவு பிட்காயின் குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு அனைத்து தகவல்களையும் வழங்கும் என நம்புகிறோம்.
இணையம் கிரிப்டோகரன்சிகளுக்கான வாய்ப்பினை வழங்குகிறது. வழக்கமாக ஒவ்வொரு நாடும் தங்களுக்கான பணத்தை அச்சடித்துக்கொள்கின்றன. ஆனால், எந்த அரசாங்கத்தையும் சாராத சிறு சிறு தொழில்நுட்ப வல்லுநர்களால் ஆன குழுக்கள் முற்றிலும் டிஜிட்டல் மயமாக இயங்கக்கூடிய கிரிப்டோகரன்சியை உருவாக்கியுள்ளன. அப்படி பல்வேறு கிரிப்டோகரன்சிகள் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. உதாரணத்திற்கு, பிட்காயின், ஈத்தரீயம், டோஜ்காயின் என பல இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகின்ற கிரிப்டோகரன்சியாக இருக்கக்கூடியது பிட்காயின் தான். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உலகின் முதன்மையான பணக்காரராக இருக்கின்ற எலன் மஸ்க் ட்விட்டரில், பிட்காயினில் முதலீடு செய்திருப்பதாக அறிவித்தவுடன் பிட்காயின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது.
ஜனவரி, 2020 இல் வெறும் $ 9349 [ரூ 6,92,550] ஆக இருந்த பிட்காயின் மதிப்பு நவம்பர் 2021 இல் $66,521 [ரூ 49,27,700] ஆக உயர்ந்திருக்கிறது. சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இவ்வளவு வேகமாக பிட்காயின் மதிப்பு உயருவதனால் தான் இதிலே முதலீடு செய்ய பலரும் முன்வந்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக பலரும் முதலீடு செய்வதனால் இதன் மதிப்பு மேலும் மேலும் உயருகிறது.
பிட்காயின் குறித்து புதிதாக அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு சில அடிப்படையான கேள்விகள் எழும். அவற்றிற்கான பதிலை விரிவாக இங்கே பார்க்கலாம்.
> பிட்காயின் என்றால் என்ன?
> பிட்காயின் மிகவும் பாதுகாப்பானதா?
> பிட்காயின் மதிப்பை நிர்ணயிப்பது யார்?
> பிட்காயின் இந்தியாவில் வாங்குவது சட்டப்படி சரியானதா?
> இந்தியாவில் இருப்பவர் பிட்காயின் முதலீடு செய்வது எப்படி?
> பிட்காயின் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டுமா?
பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் 2009 ஆம் ஆண்டு உருவானது . இதனை உருவாக்கியவர் சடோஷி நாகமோடோ என சொல்லப்படுகிறது. இந்தப் பெயர் தனிநபரை குறிக்கிறதா அல்லது குழுவை குறிக்கின்றதா என தெரியவில்லை . ஆனால் பிட்காயின் உருவாக்க காரணமாக இருந்தவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது ” எந்த மத்தியதஸ்தரும் இல்லாத அதாவது RBI போன்று எந்த நிறுவனத்தையோ அல்லது சர்வரையோ சாராமல் முற்றிலும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய டிஜிட்டல் பணத்தை உருவாக்குவதே ”.
2011 இல் இதற்கான source code மற்றும் domain ஐ அறிமுகப்படுத்திவிட்டு தனது அடையாளங்களை அழித்துவிட்டார் . இதனால் இதுவரை பிட்காயின் உருவாக்கியது யாரென்றே தெரியவில்லை.
முன்னனி இணையதளங்களின் தகவலின் படி உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய முதன்மையான க்ரிப்டோகரன்சிகளில் முன்நிலை வகிப்பது பிட்காயின் தான் . கிரிப்டோகரன்சியென்றால் முற்றிலும் இணையத்திலேயே இருக்ககூடிய டிஜிட்டல் கரன்சி . நாம் பயன்படுத்தக்கூடிய பணம் கைகளால் தொட்டுப்பார்க்க முடியும் , பிறரிடம் நேரடியாக கொடுத்து வாங்க முடியும் . ஆனால் கிரிப்டோகரன்சி முற்றிலும் டிஜிட்டல் மயமானது . இதனை ஆன்லைனில் பரிமாறிக்கொள்ளலாம் , பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் . இந்த பிட்காயின் எந்தவொரு நாட்டிற்கும் சொந்தமானது கிடையாது. இதனை எந்த நாடோ அல்லது அரசோ கட்டுப்படுத்த முடியாது. இது முற்றிலும் இணையத்திலேயே இயங்கக்கூடியது. மக்கள் எந்த அளவிற்கு இதனை வாங்க விருப்பம் தெரிவிக்கிறார்களோ அந்த அளவிற்கு இதன் மதிப்பு உயரும்.
பிட்காயின் மிகவும் பாதுகாப்பானதா?
பிட்காயின் மிகவும் பாதுகாப்பானது தான். அதனை தற்போது யாரும் கட்டுப்படுத்தவில்லை, நிர்வகிக்கவில்லை. இதுவரைக்கும் கூட பிட்காயினில் முறைகேடு நடந்திருப்பதாக யாரும் பெரிய அளவிலான குற்றசாட்டை தெரிவிக்கவில்லை. பிட்காயின் மைனிங் [mining] என்ற தொழில்நுட்பத்தின்படி உருவாகிறது. ஒட்டுமொத்தமாகவே 21 மில்லியன் பிட்காயின்கள் உருவாக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை பிட்காயினை உருவாக்கியவர்கள் வைத்துள்ளார்கள். பிட்காயின் எப்படி உருவாகிறது, அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
பிட்காயின் தகவல் அனைத்தும் ஏதோ ஒரு சர்வரில் சேமிக்கப்பட்டு இருக்காது . மாறாக பிட்காயின் வைத்திருக்கக்கூடிய அனைவரது கணக்குகளிலும் மொத்த தகவலும் சேமிக்கப்பட்டு இருக்கும் . அதாவது வங்கி நமது விவரங்களை சேமித்து வைத்திருப்பதற்கு பதிலாக நாம் ஒவ்வொருவருமே அனைவரது தகவலையும் சேமித்து வைத்திருப்பதை போன்றது .
யாரேனும் ஒருவரிடத்தில் உணமையான தகவல் இருந்தால் கூட தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்படும் . இதுதான் இதன் மீதான நம்பிக்கையை அதிகரிக்க காரணம் . இதனால் ஒவ்வொருமுறை பிட்காயின் அனுப்பும்போது யார் யாருக்கு பணம் அனுப்புகிறார் உள்ளிட்ட பல தகவல்கள், பிட்காயின் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே அனுப்பப்பட்டு நமக்கு தெரியாமலேயே உறுதிப்படுத்தப்படும் . நாம் ஒருமுறை பண பரிமாற்றம் செய்திடும் போது ஒட்டுமொத்த தகவல்களையுமே அனுப்புவோம், இதனால் பிட்காயின் வைத்திருக்க கூடிய பலரை ஹேக் செய்தால் கூட யாரோ ஒருவரிடம் இருக்க கூடிய தகவலுடன் ஒத்துப்போகவில்லை என்றால் கூட அந்த பண பரிமாற்றம் நடைபெறாது.
பிட்காயின் மதிப்பை நிர்ணயிப்பது யார்?
தங்கத்தின் விலையை நிர்மாணிப்பது எது என்பதற்கான விடையே இதற்கான விடையும் . ஆம் தங்கத்திற்க்கான தேவை , அதன் மீதான நம்பிக்கை , மக்களின் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும்போது அதன் விலை அதிகரிக்கின்றது அல்லவா அதனைபோலவே தான் பிட்காயின் விசயத்திலும் நடக்கிறது . 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இருக்கும் என அதன் எல்லை தெரிந்துவிட்டதனால் அதனை வாங்க பலரும் விரும்புகிறார்கள் . அதற்கான தேவை அதிகரித்தபடியால் அதன் விலை கடுமையாக உயர்ந்துகொண்டிருக்கிறது .
பிட்காயின் இந்தியாவில் வாங்குவது சட்டப்படி சரியானதா?
பிட்காயினை இந்தியாவில் வாங்குவது, விற்பது, வைத்துக்கொள்வது சட்டப்படி சரியானது தான். ஆனால் இந்திய அரசு, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கான விதிமுறைகள் எதையும் இதுவரைக்கும் வரையறை செய்திடவில்லை. ஆகவே, கிரிப்டோகரன்சிகளுக்கு எந்தவித பொறுப்பையும் இந்திய அரசு ஏற்காது. பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்தால் அதற்கு முழு பொறுப்பும் உங்களுடையது தான். அதற்கான வரையறை எதுவும் இதுவரை இல்லை என்பதனால் எந்தவித சட்டபூர்வ கட்டுப்பாடும் இல்லை.
இந்தியாவில் இருப்பவர் பிட்காயின் முதலீடு செய்வது எப்படி?
இந்தியாவில் பிட்காயினை வாங்க விரும்புகிறவர்கள் Bitcoin Exchange மூலமாக வாங்கலாம். ஒரு பிட்காயின் விலை சுமார் 40 லட்சத்திற்கும் மேல் இருப்பதனால் இதனை நம்மால் வாங்க முடியாதோ என நினைக்க வேண்டாம். எப்படி பங்குசந்தையில் முதலீடு செய்கிறோமா அதைப்போலவே ரூ500 முதல் பிட்காயினில் முதலீடு செய்வதற்கான வசதியை Bitcoin Exchange வழங்குகின்றன. நீங்கள் வாங்கும் தொகைக்கு ஏற்றதுமாதிரியான பிட்காயின் மதிப்பு உங்களது கணக்கில் சேரும். பிட்காயின் மதிப்பு உயர்ந்தால் உங்களிடம் இருக்கும் பிட்காயின் மதிப்பும் உயரும். நீங்கள் விற்க விரும்பும் போது அதே Bitcoin Exchange மூலமாக விற்றால் அப்போதைய பிட்காயின் மதிப்பிற்கான இந்திய ரூபாயை பெற முடியும்.
ZebPay யில் நீங்கள் பிட்காயின் வாங்க நினைத்தால் அங்கே ஒரு கணக்கை நீங்கள் துவங்க வேண்டும். பின்னர், உங்களுக்கான அடையாள அட்டையை சமர்ப்பித்து KYC ஐ செய்திட வேண்டும். பின்னர் நீங்கள் உங்களுடைய வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை NEFT, RTGS, debit அல்லது credit card மூலமாக ZebPay வேலட் க்கு டிரான்ஸ்பர் செய்ய வேண்டும். அங்கிருந்து நீங்கள் பிட்காயினை வாங்கலாம். அங்கேயே நீங்கள் பிட்காயினை விரும்பும் நேரத்தில் விற்கவும் செய்யலாம்.
பிட்காயின் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டுமா?
பிட்காயின்முதலீட்டில் ஈடுபடுகிறவர்களுக்கு இயல்பாக எழுகிற கேள்வி ‘பிட்காயின் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டுமா?’ என்பது தான். நிச்சயமாக, பிட்காயின் வருமானத்திற்கும் வருமான வரி கட்ட வேண்டும். பிட்காயினும் ஒரு முதலீட்டு விசயமாகவே கருதப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரைக்கும் பிட்காயின் மூலமாக வருகிற வருமானத்திற்கு இவ்வளவு வரி என்ற எந்த விதியையும் அறிமுகம் செய்யவில்லை. மாறாக, ஒருவருக்கு எந்தவிதத்தில் இருந்து வருமானம் வந்தாலும் அதற்கு வருமான வரி விதிக்கும் விதத்தில் தான் வருமான வரி சட்டம் இருக்கிறது. ஆகவே, பிட்காயின் மூலமாக வருகிற வருவாயும் வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்படும்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.