ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு தற்போது தான் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் health insurance குறித்த உங்களின் அடிப்படை கேள்விகள் துவங்கி அனைத்து கேள்விகளுக்குமான பதில்களை இந்தப்பதிவில் நீங்கள் வாசித்து தெரிந்துகொள்ள முடியும்.
Table Of Contents :
ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடு ஏன் அவசியம்?
ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பதால் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
எப்படி சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ஐ தேர்வு செய்வது?
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை இளம் வயதிலேயே எடுப்பது நல்லது என்கிறார்களே, ஏன்?
ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய சாமானிய மக்களின் சந்தேகங்கள்
ஹெல்த் இன்சூரன்ஸ் என்றால் என்ன?
ஹெல்த் இன்சூரன்ஸ் [Health Insurance] என்பதை மருத்துவ காப்பீடு [medical insurance] என்றும் அழைப்பார்கள். குறிப்பிட்ட தொகையை செலுத்தி நீங்கள் Health Insurance ஐ வாங்கி வைத்திருந்தால் விபத்து அல்லது நோயினால் உங்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் பெறக்கூடிய மருத்துவ சிகிச்சைக்கு ஆகிற செலவை நீங்கள் இன்சூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்திடம் இருந்து பெற முடியும். ஒவ்வொரு இன்சூரன்ஸ் நிறுவனமும் பலவிதமான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆகும் செலவை மட்டும் ஏற்கும் அளவிலான இன்சூரன்ஸ் பாலிசிகளும் உண்டு. இன்சூரன்ஸ் வைத்திருப்பவர் இறந்துபோனால் இழப்பீடு வழங்கும் வகையிலான விரிவான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளும் உண்டு.
மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு எண்ணற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் [Insurance Companies] இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பலவிதமான பிரீமியம் கட்டணங்களின் அடிப்படையில் பலவிதமான மருத்துவ காப்பீட்டு பாலிசிகளை வழங்குகின்றன. அவற்றில் உங்களுக்கு உரியவற்றை, தகுந்த முறையில் அலசி ஆராய்ந்து பெறுவது அவசியம். இல்லையேல் உங்களுக்கு தேவை ஏற்படும் சூழலில் உங்களுக்கு இன்சூரன்ஸ் பலன் அளிக்காமல் போக வாய்ப்பு உண்டு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மருத்துவ காப்பீடு ஏன் அவசியம்?
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் வைத்திருப்பது இந்தியாவில் கட்டாயம். அதுபோல மருத்துவ காப்பீடு ஒவ்வொருவரும் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் இந்தியாவில் இல்லை. பிறகு எதற்க்காக ஒருவர் மருத்துவ காப்பீடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு இயல்பாக எழலாம்.
மருத்துவத்திற்கு ஆகும் செலவு என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதேபோல, புதிய புதிய நோய்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த சூழலில், நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ ஏதேனும் விபத்து அல்லது நோயினால் பாதிக்கப்பட்டுவிட்டால் உங்கள் சேமிப்பு அனைத்தையும் நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்யும் நிலை வரலாம். அப்படி ஒரு சூழல் வந்தால் நீங்கள் அதில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் மருத்துவ காப்பீடு உதவும்.
பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவமனைகளோடு நேரடியாக தொடர்பில் இருக்கின்றன. சில இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மருத்துவ காப்பீட்டு அட்டையை நீங்கள் மருத்துவமனையில் சேரும்போது கொடுத்துவிட்டால் போதும் அவர்களே அனைத்தையும் பார்த்துக்கொள்ளுவார்கள். நீங்கள் ஒரு சிறந்த மருத்துவ காப்பீட்டை பெற்று வாங்கி வைத்திருந்தால் மிகப்பெரிய மருத்துவமனையில் கூட சிகிச்சை பெற முடியும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் நன்மைகள் | Health Insurance Benefits In Tamil
தரவுகளின்படி 75% க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தங்களது மருத்துவ செலவுகளை அவர்களது சேமிப்பில் இருந்துதான் செய்கிறார்கள் என அறிய முடிகிறது. மருத்துவ காப்பீடு என்பது ஏதோ குறிப்பிட்ட மக்களுக்குத்தான் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், யார் வேண்டுமானாலும் மருத்துவ காப்பீடு எடுக்க முடியும். மருத்துவ காப்பீடு எடுப்பதனால் பல நன்மைகள் இருப்பதாக சொல்கிறார்கள். அவற்றை இங்கே பார்க்கலாம்.
நிம்மதியான மருத்துவ சிகிச்சை : நமக்கோ அல்லது நமது குடும்ப உறுப்பினர்களுக்கோ விபத்தோ அல்லது திடீர் உடல்நலக்குறைபாடோ ஏற்பட்டுவிட்டால் முதலில் நமக்கு நிம்மதி இன்மை ஏற்படும். இதற்கு முக்கியக்காரணம், மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்திட பணம் வேண்டும் என்பதனால் தான். இப்போதைய சூழலில், சிறு நோய்களுக்கே லட்சங்களில் செலவு செய்திட வேண்டி உள்ளது. ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருந்தால் பிரச்சனையே இல்லை. மருத்துவ சிகிச்சைக்கு ஆகிற செலவை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்கும் அல்லது நீங்கள் செலுத்திவிட்டு பிறகு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.
குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு : யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட சூழலில், மிகப்பெரிய விபத்தோ அல்லது நோய் பாதிப்போ குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டால் அதற்கு சிறப்பான சிகிச்சை அளித்திட பெரும் தொகை தேவைப்படும். நாம் பொருளாதார பின்புலம் இல்லாதவராக இருந்தால் சிக்கல் தான். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருந்தால் அது பலன் தரும்.
சேமிப்பை காக்கலாம் : நாம் பல்வேறு கனவுகளோடு தான் பணத்தை சேமித்து வைக்கிறோம். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவ செலவுகள் நம் ஒட்டுமொத்த சேமிப்பையும் தகர்த்துவிடும். அப்படி எதுவும் நேராமல் இருக்க ஹெல்த் இன்சூரன்ஸ் உதவும்.
மருத்துவமனையை கடந்தும் உதவும் பாலிசிகள் உண்டு : மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மட்டும் பொருந்துகிற மருத்துவ காப்பீடுகள் உண்டு. அதேபோல, மருத்துவமனையில் பெரும் சிகிச்சை போக மருந்துகள் மாத்திரைகள் வாங்குவதற்கு ஆகக்கூடிய செலவுகளை ஏற்கும் இன்சூரன்ஸ் பாலிசிகளும் இருக்கின்றன.
வருமானவரி விலக்கு பெறலாம் : மருத்துவ காப்பீடு பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவ காப்பீட்டிற்கு செலுத்தும் தொகைக்கு Section 80D of the Income Tax Act, 1961 விதிப்படி வருமானவரி விலக்கு பெற முடியும்.
எப்படி சிறந்த Health Insurance ஐ தேர்வு செய்வது?
அனைத்தையும் போலவே மருத்துவ காப்பீடு வழங்குவதற்கும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கின்றன. நீங்கள் எந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு வாங்கினாலும் சரி குறிப்பிட்ட சில விசயங்களை நீங்கள் வாங்கும் இன்சூரன்ஸ் பாலிசி கொண்டுள்ளதா என்பதை தெரிந்துகொண்டு வாங்குங்கள். நீங்கள் செலுத்தப்போகும் மாதாந்திர கட்டணத்திற்கு ஏற்றவாறு சில விசயங்கள் மாறுபடலாம். ஆகவே, உங்களுக்கு ஏற்ற ஒரு பாலிசியை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
Co-pay : நீங்கள் வாங்கக்கூடிய இன்சூரன்ஸ் பாலிசியில் Co-pay என்பது எத்தனை சதவிகிதம் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். 0% co-pay என்றால் நீங்கள் மருத்துவமனை கட்டணத்தில் எதையும் கட்டத்தேவை இல்லை. உதாரணத்திற்கு, 25% co-pay என இருந்தால் மருத்துவ கட்டணத்தில் நீங்கள் 25% செலுத்த வேண்டும், இன்சூரன்ஸ் நிறுவனம் 75% கட்டணத்தை செலுத்தும்.
அறை வாடகை : சில இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பாலிசிகள் மருத்துவமனையில் அறை எடுத்தால் அதற்கான கட்டணத்தை ஏற்பது இல்லை. அறை கட்டணம் உங்களது இன்சூரன்ஸ் பாலிசியில் ஏற்பட்டுள்ளதா என்பதை நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.
மருத்துவமனைகளின் எண்ணிக்கை : நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் நிறுவனம் எந்தெந்த மருத்துவமனைகளோடு தொடர்பில் உள்ளதோ அங்கே நீங்கள் சென்று சிகிச்சை பெற்றால் தான் உங்களுக்கு பலன் கிடைக்கும். ஆகவே, உங்கள் பகுதியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் நீங்கள் இன்சூரன்ஸ் வாங்கும் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் ஏற்கப்படுமா என்பதை சரிபார்த்துக்கொண்டு பாலிசியை வாங்குங்கள்.
மருந்து செலவுகள் : சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கக்கூடிய இன்சூரன்ஸ் பாலிசிகள் மருத்துவமனை சிகிச்சைகளை கடந்து மருந்து செலவுகளையும் ஏற்கின்றன. உங்கள் பாலிசியில் அந்த மாதிரியான விசயங்கள் உள்ளனவா என பாருங்கள். பலர் தங்களது பாலிசியில் என்னென்ன விசயங்கள் உண்டு என்பதையே தெரிந்துகொள்வது இல்லை.
ICU சிகிச்சை : உங்களது இன்சூரன்ஸ் பாலிசி ICU சிகிச்சை கட்டணத்தையும் உள்ளடக்கியதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதிக செலவு ஏற்படுவதே ICU சிகிச்சையில் தான்.
அதிகப்படியான நோய்கள் : குறிப்பிட்ட நோய்களுக்கு பெறுவதற்கான சிகிச்சைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குவது இல்லை. நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கப்போகும் நிறுவனத்தில் என்னென்ன நோய்கள் விட்டுப்போய் உள்ளன என்பதை பாருங்கள்.
மருத்துவ காப்பீடு வாங்க வேண்டும் என்பதற்காக வாங்கி வைத்துக்கொள்வதில் எந்தவித பலனும் இல்லை. மாறாக, உங்களுக்கு என்னென்ன விசயங்கள் தேவையோ அது எந்த இன்சூரன்ஸ் பாலிசியில் இருக்கிறதோ அதை வாங்கி வைத்துக்கொள்வது தான் சிறந்தது.
ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை இளம் வயதிலேயே எடுப்பது நல்லது என்கிறார்களே, ஏன்?
ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்கள் தெரிவிக்கும் கருத்துப்படி, ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை இளம் வயதிலேயே எடுப்பது நல்லது. அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் இங்கே,
பாலிசி கட்டணம் : எப்படி புதிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் குறைவோ அதைப்போலவே இளம் வயதில் நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க பாலிசி கட்டணம் குறைவாகவே இருக்கும். இளம் வயதினருக்கு உடல்நல குறைபாடு எளிதில் ஏற்படாது என்ற நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.
காத்திருப்பு காலம் : சில தனித்துவமான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சையை இன்சூரன்ஸ் பாலிசி மூலமாக செய்திட வேண்டும் எனில் காத்திருப்பு காலத்தை கடந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் 40 வயதில் மருத்துவ காப்பீட்டை வாங்கிவிட்டு 6 மாதம் கழித்து சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால் அது இன்சூரன்ஸில் அடங்காது.
சில குறிப்பிட்ட நோய்களுக்கு காத்திருப்பு காலம் என்பதை மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வைத்துள்ளன. உதாரணத்திற்கு, ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் சர்க்கரை நோய்க்கு காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள் என வைத்துள்ளது என வைத்துக்கொள்வோம். நீங்கள் குறிப்பிட்ட இன்சூரன்ஸ் பாலிசியை 3 ஆண்டுகள் வைத்திருந்த பிறகு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற இன்சூரன்ஸ் ஐ பயன்படுத்தலாம்.
இதுமாதிரியான காத்திருப்பு காலத்தை எளிதாக கடக்க நீங்கள் இளம் வயதிலேயே பாலிசியை வாங்கிவிட்டால் போதும்.
நிராகரிப்பு குறைவு : நீங்கள் இளம் வயதில் மருத்துவ காப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்தால் அதனை நிறுவனங்கள் நிராகரிக்க குறைவான வாய்ப்பே உள்ளது. அதனை தொடர்வது என்பது எளிது.
ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க நினைத்தால் பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
வயது சான்று : ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், பிறந்தநாள் சான்று உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும்.
அடையாள சான்று : பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை அடையாள சான்றாக கொடுக்கலாம்.
இருப்பிட சான்று : ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை இருப்பிட சான்றாக கொடுக்கலாம்.
மருத்துவ சான்று : சில நேரங்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மருத்துவ சோதனை அறிக்கையை கேட்டால் நீங்கள் மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து மருத்துவ இன்சூரன்ஸ் வாங்கிக்கொள்ள முடியும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய சாமானிய மக்களின் சந்தேகங்கள்
1: மருத்துவ காப்பீடு ஒரு மோசடி
மருத்துவ காப்பீடு ஒரு மோசடி என்கிற கருத்து பலரிடம் உள்ளது. இதற்கு முக்கியக்காரணம், பல நோய்களுக்கு காப்பீடு பொருந்தாது என்று கடைசி நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், மருத்துவ காப்பீட்டு பலன்களையும் விதிகளையும் நன்றாக ஆராய்ந்து சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கினால் இதுபோன்ற பிரச்சனைகள் எழ வாய்ப்பு இல்லை என இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றுகிறவர்கள் கூறுகிறார்கள்.
2: ஏற்கனவே இருக்கும் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவமனை கட்டணத்தை நான் செலுத்த வேண்டும்
சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது பாலிசிதாரர்களுக்கு பாலிசி எடுப்பதற்கு முந்தைய காலங்களில் உருவாகி உள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற காப்பீடு வழங்குவது இல்லை. அவை காத்திருப்பு காலங்களை வைத்துள்ளன. ஆனால், சில இன்சூரன்ஸ் பாலிசிகளில் அப்படி காத்திருப்பு காலங்கள் எதுவும் இல்லை.
3: மொத்த செலவையும் ஏற்றுக்கொள்வது இல்லை
உண்மை தான். பல இன்சூரன்ஸ் பாலிசிகளில் மொத்த மருத்துவ செலவையும் ஏற்பது இல்லை. ஆனால், அந்த விவரங்களை இன்சூரன்ஸ் பாலிசிகளில் தெளிவாக பதிவிட்டு இருப்பார்கள். அதை விசாரித்து புரிந்துகொண்டு பாலிசியை பெற்றுக்கொள்வது கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கும்.
Read More : Health Insurance இல் “copay” என்றால் என்ன?