கடல் நீல நிறமாக காட்சி அளிப்பது ஏன்? கடலை முதன் முதலாக பார்க்கும் போது நாம் பிரமிப்படைவோம். அந்த பிரமிப்போடு கடலை உற்று கவனித்தால் சில கேள்விகள் நமக்குத் தோன்றும். அதிலே முதன்மையானது கடல் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது என்ற கேள்வி. இதற்கான சரியான பதிலை கண்டறிந்து உலகிற்கே உரைத்தவர் நம் தமிழ்நாட்டை சேர்ந்த சர் சிவி ராமன் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா. இன்னும் பல ஆச்சர்யங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
அந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு கடல் மார்க்கமாகவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். அப்படித்தான் தமிழகத்தை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானி சர் சிவி ராமன் அவர்களும் கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்வார். எத்தனையோ லட்சம் கோடி பேர் கடல் மார்க்கமாக பயணம் மேற்கொண்டிருந்தாலும் “கடலை கவனித்து அது ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது” என்ற கேள்வியை எழுப்பியவர் சர் சிவி ராமன் தான். 1921ல் கல்கத்தா பல்கலைக்கழக பிரதிநிதியாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற கடல் பயணம் மேற்கொண்ட போது தான் இக்கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்டார்.
வானத்தில் இருந்து அனைத்து நிறங்களும் தானே கடலில் படுகிறது. பிறகு கடல் நீல நிறத்தில் மட்டும் காட்சி அளிப்பது ஏன்? அப்படியே வானத்தில் இருந்து வரும் நிறத்தால் தான் கடல் நீல நிறமாக உள்ளது என்றால் இரவு நேரத்தில் கூட கடல் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது அது எப்படி? என அவர் பல கேள்விகளை தனக்குள்ளே எழுப்பினார். அறிவியல் அறிஞர்களுக்கே உரித்தானது தானே அது.
படிக்க : யார் இந்த சர் சிவி ராமன்?
சூரியனில் இருந்து வரும் ஒளியினை இந்த கடல்நீரின் மூலக்கூறுகள் எதிரொலிப்பதில் இருந்துதான் நீல நிறம் தோன்றுகிறது என யோசித்தார். கல்கத்தா வந்தவுடன் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்த சிவி ராமன், ஒரு ஆய்வறிக்கை ஒன்றினை லண்டனில் இருக்கும் ராயல் சொசைட்டிக்கு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்த ஆண்டு மூலக்கூறுகள் ஒளியை எதிரொளிக்கும் குறித்த முழு கட்டுரையை வெளியிட்டார்.
அவருடைய ஆய்வு முடிவு தான் ராமன் விளைவு என அழைக்கப்படுகிறது. அதன்படி, ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.
இந்த கண்டுபிடிப்பிற்காக அவர் பயன்படுத்திய கருவிகளின் செலவு ரூ 300 மட்டுமே. இந்த கண்டுபிடிப்பு அவருக்கு நோபல் பரிசை பெற்றுத்தந்தது.
கடல் நீர் நீல நிறமாக காட்சி தருவதற்கும் இதுவே காரணம். சூரியனில் இருந்து வரும் ஒளியில் சிவப்பு முதல் ஊதா வரைக்கும் அனைத்து நிறங்களும் இருக்கும். அந்த ஒளியானது கடல் நீரில் படும் போது சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சம் போன்ற நிறங்கள் கடல் நீரில் உள்ள துகள்களால் உறிஞ்சப்படுகிறது. பெரும்பாலும் பச்சை மற்றும் நீல நிறக்கதிர்கள் மட்டும் எதிரொலிக்கின்றன. எதிரொளிக்கப்படும் நிறத்தில் நீல நிறம் அதிகமாக இருப்பதனால் அவை நமக்கு நீல நிறத்தில் தோன்றுகிறது.
படிக்க : வானம் நீல நிறமாக தோன்றுவது ஏன்?
கடல் நீல நிறமாக இருப்பதற்கு சூரிய ஒளி எந்த கோணத்தில் விழுகிறது என்பதும் முக்கியம். கடலுக்கு மேலே இருந்து விழும் போது அதிக நீல மற்றும் பச்சை நிறங்கள் தான் எதிரொளிக்கப்படும். அதேபோல, கீழ் கோணத்தில் இருந்தால் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களும் எதிரொளிக்கும். இந்த சமயங்களில் கடல் நீரின் நிறம் மாறுவது போல நமக்கு தோன்றமளிக்கும்.
கடல் நீர் அசுத்தம் அடைந்து இருந்தாலும் கூட கடல் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும்.
இரவிலும் எப்படி கடல் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது?
மேற்கூறிய பதிலில் சூரிய ஒளி பட்டுத்தான் கடல் நீல நிறமாக காட்சி அளிக்கிறது என கூறினேன். அதை படிக்கும் போது, நான் இரவிலும் கடலை பார்த்து இருக்கிறேனே கடல் சூரிய ஒளி இல்லாதபோதும் கூட நீல நிறத்தில் தான் இருக்கிறது, அது எப்படி? என நீங்கள் கேட்கலாம்.
இரவு நேரங்களில் கடல் பொதுவாக நீல நிறத்தில் இருக்காது. அப்படி உங்களுக்கு இரவிலும் கடல் நீர் நீல நிறத்தில் இருந்தால் அதற்கு நிலாவின் வெளிச்சம் அல்லது மனிதரால் உருவாக்கப்பட்ட மின்விளக்கின் வெளிச்சம் காரணமாக இருக்கும். நிலாவில் இருந்து வரும் ஒளிக்கற்றையிலும் அனைத்து நிறங்களும் இருக்கும். அதிகமாக அதில் நீல நிறம் தான் இருக்கும். அது கடல் நீரில் பட்டு நம் கண்களுக்கு எதிரொளிக்கும் போது நீல நிறமாக தோன்றும்.
நீங்கள் சர் சிவி ராமன் அவர்களின் முழு வரலாற்றையும் படித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.