பருவநிலை மாற்றம் ஒட்டுமொத்த பூமியின் பிரச்சனையாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் சிலர் எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் பூஜ்ய கரியமில வாயு வெளியீடு உள்ளபடியால் அதுவே சிறந்தது என்றும் பேசுகிறார்கள். உண்மையில் எலக்ட்ரிக் கார்கள் சுற்றுசூழலை மாசுபடுத்துவது இல்லையா? இந்த கேள்விக்கான விரிவான பதில் இங்கே.
ஏதோ ஒரு இடத்தில் அதிகமாக வெளியிடப்படும் கரியமில வாயுக்களால் ஒட்டுமொத்த பூமிக்கே ஆபத்து என்பதனால் அனைத்து நாடுகளும் சேர்ந்து பூமியில் சராசரி வெப்பநிலை உயராமல் இருக்க நடவெடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதிலே முக்கியமானது, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பது தான். பூமியில் ஒட்டுமொத்தமாக வெளியிடப்படும் கரியமில வாயுக்களின் அளவில் 14% ஆனது வாகனங்களில் இருந்து வெளியிடும் புகையால் தான் உருவாகிறது என்கிறது ஆய்வு. மேலும், வாகனங்களில் எடுத்துக்கொண்டால் 72% கார்பன் வெளியீடு கார்கள் மூலமாகவே நடக்கிறது, இரண்டாம் இடத்தில் 10% அளவுடன் விமானங்கள் இருக்கின்றன.
தொடர்ச்சியாக உயர்ந்துகொண்டே போகும் கார்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டே எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவெடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக ஒவ்வொரு நாடும் பல திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. ஆனால் எலக்ட்ரிக் கார்கள் ஒரு சரியான தீர்வா?
எரிபொருளில் இயங்கும் கார்களை விட மின்சார கார்கள் சிறந்தவையா?
வழக்கமான, கார்களுக்கும் மற்றும் மின்சார கார்களுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு எப்படி சேமிக்கப்பட்ட ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுகின்றன என்பது தான். மின்சார கார்களில் லித்தியம்-அயன் பேட்டரிகளில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலைக்கொண்டு எந்த வகையான எரிப்பும் இல்லாமல் மின் வேதியியல் முறையில் ஆற்றலை வெளியிட்டு இயக்க ஆற்றலாக மாற்றுகின்றன. இதன் பொருள் எரிபொருள் எரிக்கப்படுவதில்லை, எனவே வாகனம் ஓட்டும்போது CO2 மூலம் காற்று மாசுபாடு ஏற்படாது. இதுவே, மின்சார கார்கள் பருவநிலை மாற்ற கட்டுப்பாட்டிற்கு உகந்த ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட போதுமானதா?
நிச்சயமாக இல்லை. சோலார் பேனல்கள், காற்றாலை விசையாழிகள் அல்லது அணுக்கரு அல்லது நீர்மின்சாரம் ஆகியவற்றிலிருந்து இந்த கார்களை இயக்குவதற்கான மின் ஆற்றல் வந்தால் மட்டுமே ஓரளவிற்கு மின்சார கார்கள் சுற்றுசூழலுக்கு உகந்தவை என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால், அதே மின்சாரத்தை உருவாக்க எங்கோ ஒரு மின் உற்பத்தி நிலையத்தில் எரிபொருள்கள் எரிக்கப்படுகின்றன எனில் அவற்றின் CO2 உமிழ்வு மிக அதிகமாக இருக்கும். ஆக, கார்களில் இருந்து மாசு ஏற்படவில்லை என்றாலும் கூட தொலைதூரத்தில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தில் அந்த மாசு ஏற்பட்டுள்ளது என்பதே எதார்த்தம்.
மின்சார வாகனங்களுக்கு தேவைப்படும் மின்சாரம் அனைத்துமே இயற்கையான முறைகளில் தயாரிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். இப்போது, மின்சார வாகனங்கள் பூஜ்ய கார்பன் உமிழ்வு என்பதை நம்மால் ஏற்க முடியுமா? இந்தக் கேள்விக்கான பதிலை அறிய எலக்ட்ரிக் கார்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
மின்சார கார்களின் உற்பத்தி பூஜ்ஜிய உமிழ்வைக் கொண்டிருக்கிறதா?
ஒரு காரை உருவாக்கும் சுழற்சியானது, மூலப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு, பல பாகங்களாகத் தயாரிக்கப்படுவதன் மூலம் தொடங்குகிறது. இந்த செயல்முறை வழக்கமான மற்றும் மின்சார கார்கள் இரண்டிலும் ஒன்றாகவே இருக்கிறது. ஆயினும்கூட, உற்பத்தி செயல்முறையின் முடிவில், மின்சார கார்கள்தான் அதிக கார்பன் உமிழ்வை உருவாக்குகின்றன என்று குறிப்பிட்ட விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது ஏன்? மின்சார கார்கள் அதிக செலவுகளைக் கொண்ட பெரிய பேட்டரிகளில் ஆற்றலைச் சேமிக்கின்றன .(அவை பெரியவை, அவற்றின் வரம்பு பெரியது). இந்த பேட்டரிகள் பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் மட்டுமே இருக்கும் லித்தியம், நிக்கல், கோபால்ட் அல்லது கிராஃபைட் போன்ற அரிய பூமி வேதிப்பொருள்களால் (REE) உருவாக்கப்படுகின்றன, அவற்றை பூமியில் இருந்து எடுக்க நடைபெறும் சுரங்க நடைமுறைகளில் கார்பன் வெளியீடு என்பது அதிகம். அதனால்தான் மின்சார கார்கள் பசுமையானதா இல்லையா என்று கேட்டால் பதில் சொல்வது சற்று சிக்கலான ஒன்றாக இருக்கும்.
உதாரணமாக, 1 டன் REE உற்பத்தி செய்ய, 75 டன் அமிலக் கழிவுகள் (அது எப்போதும் சரியான முறையில் கையாளப்படுவதில்லை) மற்றும் 1 டன் கதிரியக்க எச்சங்களும் உருவாகின்றன என்று சீன சொசைட்டி ஆஃப் ரேர் எர்த்ஸ் [Chinese Society of Rare Earths] தெரிவித்துள்ளது. இதில் இன்னொமொரு சிக்கல் உள்ளது. பூமியில் இதுவரைக்கும் லித்தியம் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அடுத்த 185 ஆண்டுகளுக்கு இது இருக்கும் என்று கணக்கிட்டால் கூட அளவு குறைய குறைய அதன் மதிப்பு என்பது பல மடங்கு ஆகலாம் என கணிக்கப்படுகிறது. கோபால்ட், கிராஃபைட் மற்றும் நிக்கல் போன்றவற்றைப் பொறுத்தவரை, அவை அதிக அளவில் இருப்பதாக தெரிகிறது.
எலக்ட்ரிக் கார்களின் பேட்டரிகள் எங்கு செல்கின்றன? அவை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மறுசுழற்சி செய்யப்படுகிறதா?
international council of clean transportation (ICCT) யின் ஆய்வின்படி, அமெரிக்காவில் 99% lead-acid பேட்டரிகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாக கூறுகிறது. அதேசமயம், லித்தியம் அயர்ன் பேட்டரிகளை எடுத்துக்கொண்டால் அவை இந்த அளவில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவது இல்லை. 2011ல் நடத்தப்பட்ட ஆய்வில் வெறும் 5% அளவிலான லித்தியம் தான் சேகரிக்கப்பட்டது என்றும் மீதம் உள்ளவை பூமியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வரும் காலங்களில் இந்த நிலை மாறலாம். ஒருமுறை கார்களில் பயன்படுத்தப்பட்டுவிட்ட லித்தியம் பேட்டரிகளை மீண்டும் மறுசுழற்சி செய்து கார்களில் பயன்படுத்த முடியாது என்றும் திறன் குறைவான மோட்டார்களை இயக்க மறுசுழற்சி செய்யப்பட்ட பேட்டரிகளை பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள் .
எலக்ட்ரிக் கார்கள் உண்மையில் மாசற்றதா?
இல்லை என்பது தான் சரியான பதில். ஒப்பீட்டளவில் வேண்டுமானால் தற்போதைய பெட்ரோல், டீசல் வாகனங்களை விட குறைவான மாசுபாட்டை மின்சார வாகனங்கள் ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், அது முற்றிலுமான தீர்வு இல்லை என்பதே எதார்த்தம். கார்களை இயக்கும் போது கார்பன் வெளியீடு இல்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட, கார்களை உருவாக்குவதற்கு, கார்களுக்கு தேவையான எரிபொருளை உருவாக்குவதற்கு, லித்தியம் பேட்டரியை உருவாக்க தேவையான பொருள்களை பூமியில் இருந்து வெட்டி எடுப்பதற்கு என பல நிலைகளில் கார்பன் வெளியீடு இருக்கவே செய்கிறது. ஆகவே, பூஜ்ய கார்பன் வெளியீடு என்ற அங்கீகாரத்தை எலக்ட்ரிக் கார்கள் பெற முடியாது.
அதேபோல, பூமியில் குறிப்பிட்ட அளவு தான் லித்தியம் இருக்கிறது என்பதனால் ஒரு நீண்டகால, பொருளாதார அளவில் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மாற்றாக மின்சார வாகனங்கள் இருக்காது என்பதே எதார்த்தமான உண்மை. ஆகவே விஞ்ஞானிகள், பல நூற்றாண்டுகளுக்கான மாற்று தீர்வை நோக்கிய நகர்வை செய்திட வேண்டியது அவசியம்.
இதற்கு இடையில், மக்களின் வாகனங்கள் பயன்பாட்டை எதார்த்தத்தில் குறைப்பதன் மூலமாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு, பொது போக்குவரத்தை அதிகரித்து தனி நபர்கள் கார்கள் பயன்படுத்துவதை குறைத்தாலே பெரிய அளவில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த முடியும்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.