Perseverance Rover
2012 ஆம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கி சாதித்தது. தற்போது மீண்டுமொரு முறை செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவரை [Perseverance rover] தரையிறக்கி சாதனை புரிந்துள்ளது நாசா. இதில் இந்திய வம்சாவளி ஸ்வாதி மோகன் அவர்களின் பங்களிப்பு இதில் அதிகம்.
பூமியில் ஒருநாள் வளங்கள் குறையலாம் அல்லது ஏதாவது ஒரு காரணத்தால் பூமியை தவிர்த்த வேறொரு கிரகத்தில் மனிதர்கள் குடியேற வேண்டிய அவசியம் ஏற்படலாம். பூமிக்கு அருகே இருக்கக்கூடிய கோள்களில் மனிதர்கள் உயிர்வாழ தகுதியான கோள் என கருதப்படுவது செவ்வாய் கோள் தான். அந்த காரணத்தாலேயே விஞ்ஞானிகள் பெரும் முயற்சி எடுத்து செவ்வாய் கோள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னதாக அங்கிருக்கும் வளங்களை ஆராய்ந்து அங்கே ஏற்கனவே உயிரினங்கள் வாழ்ந்தனவா, மனிதர்கள் வாழுவதற்கு ஏதுவான சூழல் இருக்கிறதா என்பதை ஆராய்வது முக்கியம். ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை அனுப்பி சில ஆய்வுகளை மேற்கொண்டது தற்போது மீண்டும் பெர்சவரன்ஸ் ரோவரை தரையிறக்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது.
பூமியில் இருந்து சுமார் 208.17 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வாய் கிரகம். சுமார் 470 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்திருக்கிறது பெர்சவரன்ஸ் ரோவர். செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு சிக்னல் வருவதற்கு 11 11 நிமிடங்கள் ஆகும். செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த பிறகு ரோவர் தரையிறங்க 7 நிமிடங்கள் ஆனது. இந்த 7 நிமிடமும் பூமியில் இருந்து எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தானாகவே செயல்பட்டு வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது பெர்சவரன்ஸ் ரோவர்.
பெர்சவரன்ஸ் ரோவர் என்ன செய்யப்போகிறது?
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஜெசெரோ எனும் பல கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பள்ளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஜெசெரோ பள்ளத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஒருவேளை அங்கே நீர் இருந்திருந்தால் உயிரினங்களும் இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்பது நாசா விஞ்ஞானிகளின் கணிப்பாக இருக்கிறது. ஆகவே தான் பெர்சவரன்ஸ் ரோவர் அங்கே தரையிறக்கப்பட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர் நல்ல நிலையில் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்திய பின்னர் அது ஆய்வுகளை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெசெரோ பள்ளத்தில் துளையிட்டு அங்கே ஆய்வுகள் நடத்தப்படும். வித்தியாசமான மண் மாதிரி கிடைத்தால் அவர் ஒரு சிறிய சிலிண்டரில் போட்டு சேமிக்கப்படும். நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளார்கள் மற்றொரு திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள். அங்கே சேமிக்கப்படும் சிலிண்டர்களை எடுத்துவர பல பில்லியன் கணக்கிலான தொகையை செலவிட்டு மீண்டுமொரு விண்வெளி பயணத்தை நிகழ்த்திடவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஸ்வாதி மோகன் : திட்டத்தை வழிநடத்திய இந்திய வம்சாவளி பெண்
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது ஒருபுறம் மகிழ்ச்சியென்றால் இன்னொருபுறம் இந்த திட்டத்தை இந்திய வம்சாவளி பெண்ணான ஸ்வாதி மோகன் வழிநடத்தியது தான் அடுத்த மகிழ்ச்சி. எட்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இந்த திட்டத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றி திட்டத்தை வெற்றிபெற செய்திருக்கிறார் ஸ்வாதி மோகன். அவர் பிபிசி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி உங்களுக்காக,
கேள்வி: பல வருட உழைப்புக்குப் பிறகு, இத்தனை பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகான சில மணி நேரங்களை எப்படிக் கடந்தீர்கள்?
பதில்: அது கொஞ்சம் கனவு போல இருந்தது. சமீபத்தைய மார்ஸ் 2020 விண்வெளித் திட்டம் கொஞ்சம் சிக்கலானது. எனவே அது வெற்றியாக கொண்டாடப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இறுதி நிமிடத்தில் எல்லாமே ஒருங்கிணைந்து வந்தது தான் வெற்றி.
கே: அந்த கடைசி சில நிமிடங்களில் உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது எனக் கூற முடியுமா?
ப: ஒரு திட்ட விவரிப்பாளராக என்ன நடக்கிறது, நான் என்ன கூற வேண்டும் என்கிற என் பணியில் கூடுதல் கவனத்தோடு இருந்தேன். பல விஷயங்கள் மிகக் கச்சிதமான வரிசையில் நடக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு விஷயம் நடந்து முடிந்த உடன், நான் அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்தினேன். என்ன நடக்கிறது என்பதை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ளப் போதுமான திறன் என்னிடம் இல்லை.
கே: ஒரு திட்டத்துக்கு எட்டு வருடம் முதலீடு செய்வது என்பது மிக நெடிய காலம். இந்தப் பணிக் காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்துக் கூறுங்களேன்?
ப: எட்டு வருடங்கள் இந்த திட்டத்தில் பணியாற்றியதை என் வாழ்நாளில் மிகப் பெருமையாகக் கருதுகிறேன். இருப்பினும் இந்த எட்டு ஆண்டுகளில் நான் முதலில் இழந்தது என் தூக்கத்தைத் தான். இந்த திட்டத்தின் வன்பொருட்கள் (hardware) வரத் தொடங்கியதில் இருந்து எனக்கு தொடர்ந்து அழைப்பு வரத் தொடங்கின. காரணம் நாங்கள் அதை பல்வேறு சோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருந்தோம். எனவே எப்போதும் என் தொலைபேசியை என்னுடனேயே வைத்திருந்தேன்.
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது, என்ன சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொள்வது, தொடர்ந்து இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற வேகமும், ஊக்கமும் கொஞ்சம் தனிப்பட்ட வாழ்கையில் தொய்வை ஏற்படுத்தியது. அதோடு எனக்கு தொலை பேசி அழைப்போ அல்லது அலுவலகத்துக்கு வருமாறு திடீர் அழைப்போ வரும் போதெல்லாம் என் குடும்பம் சில தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்தது. இந்த விஷயத்தில் என் குடும்பம் எனக்கு மிகவும் பக்கபலமாகத் துணை நின்றது.
கே: நாசாவில் உங்கள் பயணத்தைக் குறித்துக் கூற முடியுமா
ப: நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே விண்வெளி சம்பந்தமாக வேலை பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். நான் அமெரிக்காவில் இருந்ததால் எனக்கு விண்வெளி என்ற உடன் நாசா தான் என் கவனத்துக்கு வந்தது. எனவே என்னால் நாசா குறித்து என்ன எல்லாம் தேடித் தெரிந்து கொள்ள முடியுமோ அதை எல்லாம் தேடி அறிந்து கொண்டேன்.
நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே என் முதல் உள்ளகப் பயிற்சியை (இன்டர்ன்ஷிப்) நாசாவின் கொட்டார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரில் மேற்கொண்டேன். அதன் பின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பின் போது, கோடை காலத்தை ஜெட் ப்ரொபல்சன் லெபாரட்டரியில் செலவழித்தேன். அப்போதே நிறைய பேருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். அதன் பின் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் ஓர் உள்ளகப் பயிற்சியை மேற்கொண்டேன்.
அதன் பிறகு க்ராஜுவேட் பள்ளிக்குச் சென்ற போது நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் மற்றும் நாசாவின் மார்ஷல் ஸ்பேஸ் சென்டரில் பணிபுரிபவர்களோடு பேச வாய்ப்பு கிடைத்தது. எனவே விண்வெளித் துறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்க இந்த வாய்ப்புகள் பயன்பட்டன.
கே: நீங்கள் விண்வெளி மீது காதல் கொள்ள ஸ்டார் டிரெக் காரணம் எனக் கூறியுள்ளீர்கள்? உங்களை ஸ்டார் டிரெக் எப்படி ஈர்த்தது?
ஆம். 9 அல்லது 10 வயது இருக்கும் போது ‘ஸ்டார் டிரக் நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ என்கிற தொலைக்காட்சித் தொடரில் ஒரு பகுதியைப் பார்த்தேன். அதில் பேரண்டத்தில் மிக அழகான படங்கள் பல்வேறு சூழலில் காட்டி இருந்தார்கள். அந்தத் தொடரில் வரும் பிரிட்ஜ் ஆஃப் எண்டர்பிரைசில் நான் பயணிக்க விரும்பினேன். பறந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் புதிய விஷயங்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என விரும்பினேன்.
அங்குதான் எல்லாம் தொடங்கியது. இந்தத் தொடருக்குத் தேவையான படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன எனத் தேடினேன். அந்தத் தேடல் ஹப்பில் விண்வெளித் தொலைநோக்கிக்கு இட்டுச் சென்றது. அப்படியே விண்வெளித் துறையில் என் பயணம் வளர்ந்தது
கே: நீங்கள் இன்னும் இந்தியா உடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
ப: ஆம். இப்போதும் என் குடும்பத்தின் சொந்த பந்தங்கள் நிறைய பேர் இந்தியாவில் தான் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக பெங்களூரில் என் தாத்தா பாட்டி பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். கோடை கால விடுமுறையை இந்தியாவில் ஊர் சுற்றிக் கழித்திருக்கிறேன்.
கே: இந்தியா போன்ற பல நாடுகளும் செவ்வாயில் விண் ஊர்தியைத்தரையிறக்க இலக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் கருத்து மற்றும் வழிகாட்டுதல்கள் என்ன?
எந்த ஒரு கோளிலும் தரையிறங்குவது என்பது சவாலான விஷயம் தான். பல விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். எந்த கோளில், எந்த நேரத்தில், எந்த இடத்தில் தரையிறக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்து பல வேறுபட்ட சூழல்கள் நிலவும். பல தடைகள் ஏற்படும்.
அதே குறிக்கோளோடு இருப்பவர்கள் மேற்கொண்ட விஷயங்களில் இருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் என்னால் கொடுக்க முடிந்த நல்ல ஆலோசனை. சில நேரங்களில் நம் வெற்றியை விட, நம் தோல்வியில் இருந்துதான் அதிகம் கற்றுக் கொள்ள கொள்வோம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.