10 Most Important Events of Mankind
பூமியில் இயற்கையின் சிறந்த படைப்பு மனிதர்கள். மனிதர்கள் மட்டும் தான் தங்களை மேம்படுத்திக்கொள்ள புதிது புதிதாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி மனித குலத்தின் வரலாற்றில் நடைபெற்ற 10 முக்கிய நிகழ்வுகளைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
நெருப்பு கண்டுபிடிப்பு
மனிதர்கள் நெருப்பை உண்டாக்க கற்றுக்கொள்வதற்கு முன்பாக மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் எதுவும் இருந்திருக்கவில்லை. நெருப்பை மனிதர்கள் உருவாக்க கற்றுக்கொண்டதற்கு பிறகுதான் அந்த புத்திசாலித்தனத்தால் பிற விலங்குகளிடம் இருந்து வேறுபடத்துவங்கினர். அடுத்தடுத்த உருவாக்கங்களை மனிதர்கள் உருவாக்கிட அவர்களிடம் இருந்த புத்திசாலித்தனத்தை அடையாளப்படுத்தி ஊக்குவித்தது நெருப்பு கண்டுபிடிப்பு தான். சுமார் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் மனிதர்கள் நெருப்பை உருவாக்க கற்றுக்கொண்டனர்.
நெருப்பு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னதாக சிங்கம், புலி, சிறுத்தை போன்ற பிற விலங்குகளைப்போலவே பச்சைக் கறியை சாப்பிட்டே வந்தனர். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அனைத்தும் மெதுவாக மாறத்துவங்கியது. நெருப்பு மனிதர்களின் உடல் அளவிலும் மன அளவிலும் பழக்க வழக்கங்களிலும் பெரும் மாறுதல்கள் உண்டாக காரணமாக அமைந்தன.
சக்கரம் கண்டுபிடிப்பு
மனிதர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்றாக சக்கரம் கருதப்படுகிறது. சக்கரம் இல்லையேல் போக்குவரத்து என்பது சாத்தியமற்றதாக மாறியிருக்கும். ‘சக்கரம்’ கண்டுபிடிப்பு என்பது மனிதன் தனது சுய அறிவினால் நிகழ்த்தியது எனக்கூறப்படுகிறது. இதற்கு மிக முக்கியக்காரணம், இயற்கையில் சக்கரம் கண்டுபிடிக்க தூண்டுகோலாக எதுவும் இல்லை என கூறப்படுகிறது. வெளிச்சத்தை கண்டுபிடிக்க சூரியனும், ஆடைகளை கண்டுபிடிக்க இலைகளும், ஈட்டி போன்ற ஆயுதங்களை கண்டுபிடிக்க கூரான மரக்கிளைகள் இருந்தன. ஆனால் சக்கரத்திற்கு அப்படி எந்த தூண்டுகோளும் இல்லை.
பெரும்பாலானவர்கள் சக்கரம் மெசொப்பொத்தேமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்புகிறார்கள், ஆனால் உலகின் பழமையான சக்கரம் கிமு 3330 இல் ஸ்லோவேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதே மிகப்பெரிய சாதனை. அதிலும் இரண்டு சக்கரங்களை ஒரு அச்சு [axle] மூலமாக சேர்த்து வடிவைத்தது ஆகப்பெரிய கண்டுபிடிப்பு.
பணம் உபயோகம்
தங்களுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள எவராலும் முடியாது. மனிதர்கள் இதனை உணர்ந்தபோது பண்டமாற்று முறையை பயன்படுத்துவங்கினார்கள். ஒரு பொருளை கொடுத்து இன்னொரு பொருளை பெற்றுக்கொள்வது தான் பண்டமாற்று முறை. ஆனால் இதில் பல சிக்கல்கள் இருந்துவந்தது. இவற்றை சமாளிக்க பணம் என்கிற பொதுவான விசயம் தேவைப்பட்டது. கிமு 3000 இல் சுமேரியர்கள் பார்லி பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். பார்லி அதனுள்ளே மதிப்பினைக் கொண்டிருந்தது, ஏனெனில் அதை சாப்பிடவும் விதைக்கவும் முடியும், ஆனால் அதே நேரத்தில் மேசமடோமியர்கள் வெள்ளி கற்களை பயன்படுத்தத் தொடங்கினர். வெள்ளி சிறிய உள்ளார்ந்த மதிப்பைக் கொண்டிருந்தது, ஏனெனில் அதை சாப்பிடவோ விதைக்கவோ முடியாது.
மேலும் இது கட்டடத்திற்கும் கருவி தயாரிப்பிற்கும் மிகவும் மென்மையானது. அதன் மதிப்பின் கருத்து சமூகத்தில் ஒரு பெரிய மாற்றத்தைத் தூண்டியது. சுமார் கிமு 600 இல் லிடியாவின் மன்னர் அலியாட்ஸ் நாணயங்களை அச்சிடத் தொடங்கினார். அவை தங்கம் மற்றும் வெள்ளி உலோகத்தால் ஆனவை மற்றும் மன்னரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டவை. இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு நாணயமும் லிடியன் நாணயத்தின் வழித்தோன்றல் என்றே கூறலாம்.
நாணயங்களைத்தாண்டி இப்போது தாளில் அச்சடிக்கப்படும் நோட்டுகள் வந்துவிட்டன, இணையக்கரன்சிகளும் வந்துவிட்டன.
எழுத்துக்கள் உருவாக்கம்
எந்த மொழி முதலில் உருவானது என்ற சண்டைகள் ஒருபுறம் இருந்தாலும் கூட, மனிதர்கள் செய்திகளை பரிமாறிக்கொள்ள எழுத்துக்களை பயன்படுத்த துவங்கியது என்பது மனித குல வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வு. ஒருவரின் கண்டுபிடிப்புகள், கருத்துக்கள் அடுத்தவர்களுக்கு கிடைத்தால் தான் முன்னேற்றம் என்பது எளிதான விசயமாக இருக்க முடியும். இல்லையேல் ஒருவர் துவங்கிய இடத்தில் இருந்தே வருகிறவர் துவங்க வேண்டி இருக்கும்.
சாக்ரடீஸ் சொல்வாராம் ‘எழுத்துக்கள் தான் மனிதர்களை மந்தமாக்கியது’ என்று ஆனால் எழுத்துக்கள் இல்லையேல் விசயங்களை நாம் பரிமாறிக்கொள்ள முடியாது என்பது நிதர்சனம்.
நேரம் பின்பற்றுதல்
ஆங்கிலத்தில் அழகான பழமொழி ஒன்று உண்டு. ‘time is everything’ இதற்கு ‘நேரம் தான் எல்லாமுமே’ என்பதுதான் பொருள். விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்றாக இருப்பது நேரம் தான். இந்த நேரத்தை மனிதர்கள் அளப்பதற்கு கற்றுக்கொண்டுள்ளது மனிதகுல வரலாற்றின் பெரும் சாதனை தான். பண்டைய கால கிரேக்கர்கள், சீனர்கள், சுமேரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் பூமியின் சுழற்சியை அளவிட சண்டியல்கள், மணிநேர கண்ணாடிகள், நீர் கடிகாரங்கள் மற்றும் சதுரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினர். ஆனால் இடைக்காலத்தில் உள்ள கிறிஸ்தவ துறவிகள் தான் ஒரு நாள் என்பதனை மணி என பிரித்தனர். இவர்கள் ஒரு நாளின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை செய்யவேண்டி இருந்தபடியால் இவர்கள் நாள் என்பதை மணி என பிரிக்கலானார்கள். குறிப்பிட்ட நேரத்தை குறிக்க மணியோசை எழுப்பவும் இவர்கள் தான் திட்டமிட்டார்கள்.
இந்த உலகில் மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதது ‘நேரம்’ தான். மனிதகுலத்தை இன்று நேரம் கட்டுப்படுத்த துவங்கிவிட்டது என்றால் மிகையாகாது.
அச்சகங்கள் உருவாக்கம்
அறிவை பகிர்ந்தால் மட்டுமே ஒரு இனத்தால் முன்னேற முடியும். எழுத்துக்கள் மனித அறிவை பகிர்ந்துகொள்ள எந்த அளவிற்கு உதவி செய்ததோ அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவியது ‘அச்சகங்கள்’ தான். அனைவருக்கு ஒரு விசயம் சென்றுசேர அச்சகங்கள் பேருதவி புரிந்தன.
அச்சகம் என்ற ஒன்றினை ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை அனைத்தையும் கையிலேயே எழுத வேண்டிய தேவை இருந்தது. அச்சகங்கள் அறிவியல் புரட்சி என்றே சொல்லலாம்.
மின்சாரம் கண்டுபிடிப்பு
இன்றைய உலகில் மின்சாரம் இல்லையேல் எதுவும் இல்லை. நாம் இன்று பயன்படுத்திக்கொண்டிருக்கும் அறிவியல் சாதனங்கள் அனைத்திற்கும் எரிபொருள் மின்சாரம் தான். பெஞ்சமின் பிராங்க்ளின் தனது அறிவியல் சோதனைகளின் வாயிலாக மின்சாரத்தை கண்டறிந்தார். மனிதர்களை பெருமளவில் முன்னேற்றிட மின்சாரம் என்ற ஆற்றல் பேருதவி செய்தது.
தொலைத்தொடர்பு சாதனங்கள் உருவாக்கம்
நினைத்துக்கூட பார்த்திராத பல சாதனங்களை மனிதன் உருவாக்கி இருக்கிறான். அதில் மிகவும் முக்கியமானவை தொலைத்தொடர்பு சாதனங்கள். வானொலி, தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, அலைபேசி என பல விசயங்களைக் கூற முடியும். இவை வெகு விரைவாக மனிதர்கள் தொடர்புகொள்ளவும் கருத்து பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் உதவி புரிந்தன. ஒவ்வொரு தசாப்தத்திலும் இந்த கண்டுபிடிப்புகள் புதிய முன்னேற்றத்தை அடைந்துகொண்டு இருக்கின்றன.
கணினி, இன்டர்நெட் மற்றும் செயற்கைகோள்
மனித மூளைக்கு எதுவும் ஈடாகாது என்றாலும் கூட மிகப்பெரிய எண்களையும் தரவுகளையும் கையாளக்கூடிய திறன் கணினிகளிடம் தான் இருக்கின்றன. சாதாரண கணினி என்ற அளவினைத்தாண்டி சூப்பர் கம்ப்யூட்டர் வரைக்கும் நாம் முன்னேறி இருக்கிறோம். ஒரு மனிதன் 200 அல்லது 300 ஆண்டுகள் செலவழித்து செய்யக்கூடிய கணித வேலைகளை சில நொடிகளில் இந்த கணினிகளால் செய்துமுடிக்க முடியும்.
இன்டர்நெட் இன்று மனிதர்களின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு அதன் பயன்பாடு என்பது அதிகரித்து இருக்கிறது. இன்று இன்டர்நெட்டின் சக்தியை நம்மால் ஊகிக்கிக்க முடியாத அளவிற்கு வளர்ந்துநிற்கிறது. அதன் பயன்பாடுகள் மனித குலத்தின் வாழ்வியலையே சுலபமாக்கி இருக்கிறது.
தொலைத்தொடர்பு, வானிலை, கண்காணிப்பு, விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் பெரும் முன்னேற்றம் அடைந்திட செயற்கைகோள் மிகவும் இன்றியமையாத ஒன்று.
மருத்துவ கண்டுபிடிப்புகள்
யார் ஒருவரையும் மையப்படுத்தி கூறமுடியவில்லை என்றாலும் கூட மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரித்ததில் ஒவ்வொரு மருத்துவ கண்டுபிடிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே. சில பத்தாண்டுகளுக்கு முன்பாக பிரசவ கால இறப்புகள், டெங்கு, காலரா போன்ற நோய்களால் ஏற்படும் இறப்புகள் ஏராளம். இன்று இதயத்தை பிளந்து அறுவை சிகிச்சை, மூளைக்குள் அறுவை சிகிச்சை என மருத்துவ உலகம் சாதனை புரிந்துகொண்டு இருக்கிறது. பூமியில் பிற விலங்கினங்கள் எவையும் தங்களது வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ள இவ்வளவு சிறப்பாக செயலாற்றியது கிடையாது. மனித இனம் மட்டும் தான் இத்தகு சிறப்பொடு நிற்கிறது.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.