Space X
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அழைத்துச்செல்லும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெரும் சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது. வெற்றிகரமாக 4 விண்வெளி வீரர்களுடன் புறப்பட்ட ராக்கெட் 27 மணிநேர பயணத்திற்க்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையம் குறித்து நீங்கள் அறிந்திடாத பல தகவல்களை உங்களுக்காக கடந்த பதிவில் பதிவிட்டு இருந்தோம். விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை அனுப்பும். கடந்த 2011-ம் ஆண்டே, நாசா, இறக்கையுள்ள விமான ஷட்டில்களுக்கு ஓய்வளித்துவிட்டது. இடைப்பட்ட ஆண்டுகளில், நாசா, ரஷ்யாவின் சோயஸ் விண்கலத்தில் இருக்கைகளை வாங்கிக் கொண்டு இருந்தது. அப்படி சோயூஸ் விண்கலத்தில் ஒரு விண்வெளி வீரரை அனுப்ப வேண்டுமெனில் கட்டணமாக ரூ 600 கோடி கட்டணமாக செலுத்த வேண்டும். இப்படி அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதை தவிர்க்கும் பொருட்டு தான், நாசா தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிடும் திட்டத்திற்கு துவக்கம் தந்தது.
Crew-1 mission
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வணிக ரீதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பிடும் திட்டத்தில் இணைந்துள்ளன. ஆறு திட்டத்தில் Crew-1 தான் முதல் திட்டம். நாசா இப்படி தனியார் நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து செயல்படுவதற்கு மிக முக்கியக்காரணம், மனிதர்கள் மற்றும் பொருள்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மலிவு விலையில் கொண்டு செல்வதற்க்கும் மீண்டும் பூமிக்கு கொண்டுவருவதற்கும் தான். வெற்றிகரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தனிநபர் கூட அதற்கான கட்டணத்தை செலுத்தி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுவர முடியும். இதனை வர்த்தக ரீதியிலும் அணுகிட முடியுமென நம்புகிறது நாசா.
போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் 2014 ஆம் ஆண்டு நாசா ஒரு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி ஒருங்கிணைந்த விண்கலம், ராக்கெட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் மூலமாக நான்கு விண்வெளி வீரர்களை கொண்டு செல்ல வேண்டும், எப்போதும் ஏழு பேர் கொண்ட ஒரு குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவன் மூலமாக ஆராய்ச்சியின் திறனை மேம்படுத்த முடியும் என நாசாவின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், கடந்த மே மாதம் ஒரு விளக்கப் பயணத்தை நடத்தியது. அதில் டக் ஹர்லே மற்றும் பாப் பெஹ்ன்கென், சர்வதேச விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சேவையை விட, போயிங் நிறுவனத்தின் சேவை ஒரு வருடம் பின் தங்கி இருக்கிறது.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம்
அனைத்து சோதனைகளையும் கடந்து நாசாவின் ஒப்புதலை பெறுவதென்பது அசாத்தியமான ஒன்று. ஆனால் அதனை செய்துகாட்டியது எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். முதல் பயணத்தில் 44 வயதான விக்டர் க்ளோவர், 51 வயதான கமாண்டர் மைக்கேல், 55 வயதான ஷானர் வாக்கர், 55 வயதான சோச்சி நோகுச்சி ஆகிய நால்வரும் ஃபால்கன் ராக்கெட் மற்றும் டிராகன் கேப்சியூஸ் மூலமாக கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, இன்று (16 நவம்பர் 2020) 00.27 GMT (இந்திய நேரப்படி அதிகாலை 5.57மணி)நேரத்துக்குப் புறப்பட்டனர். ஐஎஸ்எஸ் நிலையத்தைச் சென்றடைய 27 மணி நேரமாகும். நாளை (செவ்வாய்க்கிழமை), 04.00 GMT மணி அளவில் ((இந்திய நேரப்படி காலை 9.30மணி), விண்வெளி மையத்துடன் இணைப்பதற்கு நேரம் குறித்து இருக்கிறார்கள்.
வெற்றிகரமாக இத்திட்டம் நிறைவேறிடும் பட்சத்தில் இனி விண்வெளிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எளிதாக மனிதர்களை அனுப்பிட இயலும். வர்த்தக ரீதியிலான பெரும் வெற்றியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதன் மூலமாகப் பெறும்.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து ஏவப்படும் ராக்கெட் மூலமாக விண்வெளி வீரர்கள் சர்வதேச விமான நிலையத்தை அடைய இருக்கிறார்கள் குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட இந்தத்திட்டத்தின் வாயிலாக பெரும் பணத்தை நாசா சேமிக்க உள்ளது. இப்படி சேமிக்கும் பணத்தைக்கொண்டு நிலவிற்கு மனிதர்களை அனுப்பிடும் ராக்கெட் உருவாக்கத்தில் ஈடுபட இருக்கிறது நாசா.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.