மிகப்பெரிய உயிரினமாக அறியப்படும் டைனோசர்கள் அழிவதற்கு சிறு கோள் ஒன்று 60 டிகிரி கோணத்தில் மோதியதே காரணம், தொடர்ச்சியாக பருவநிலையை மாற்றக்கூடிய வாயுக்கள் வளிமண்டலத்தில் உருவாகி பேரழிவை ஏற்படுத்தின.
சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமாக அறியப்படுகிற டைனோசர் எப்படி அழிந்தது என்பது குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகளும் யூகங்களும் வெளியிடப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் தற்போது லண்டனில் இருக்கும் இம்பேரியல் பல்கலைக்கழகத்தை [Imperial College London] சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு சோதனை மாதிரியை உருவாக்கி இருக்கிறார்கள். அதன்மூலமாக டைனோசர்கள் அழிவதற்கு காரணமாக இருக்கின்ற சிறுகோள் தாக்குதலின் போது என்ன நடந்திருக்கலாம் என்பதை அறிய முடிவதாக கூறி இருக்கிறார்கள்.
அதன்படி இம்பெரியல் பல்கழகத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கிய மாதிரியில் [simulations] 60 டிகிரி கோணத்தில் சிறிய கோள் ஒன்று பூமியை தாக்கியிருக்க வேண்டும் எனவும் அப்படி மோதும் போது அது காலநிலையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். அப்படி மோதும் போது வெளியிடப்பட்ட பல பில்லியன் டன் கணக்கான சல்பர் காற்றில் வெளியாகி அதனால் சூரிய ஒளியே பூமிக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டு அதனால் பூமியில் 75% உயிர்கள் இறந்து போயின. இதில் டைனோசர்களும் அடக்கம் என விளக்கி இருக்கிறார்கள்.
இந்த மாதிரி குறித்து பேசிய ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் காரெத் கொலின்ஸ் [Gareth Collins], டைனோசர்கள் அழிவின் போது மிக மோசமான நிகழ்வுகள் நடந்தன. ஒரு சிறிய கோள் ஒன்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சரியான கோணத்தில் மோதி பூமியின் வளிமண்டலத்தில் பருவநிலையை மாற்றி அமைக்கும்படியான வாயுக்களை வெளியிட்டுள்ளன. அதன் பிறகு ஒரு தொடர்ச்சியான நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. அதுதான் டைனோசர்களை முற்றிலுமாக அழித்தொழித்து இருக்கின்றன.
தற்போது மெக்சிகோவில் இருக்கின்ற சிக்ஸுலப் [Chicxulub] பள்ளத்தை சுற்றிலும் இருக்குமிடத்தில் பெரும்பாலும் தண்ணீர் அதோடு போரஸ் கார்போனேட் மற்றும் ஆவியாகிய பாறை ஆகியவையே தென்படுகின்றன. இவை அந்த தாக்குதலின்போது சூடாகி அதனால் ஏராளமான கார்பன் டை ஆக்ஸைடு, கந்தகம், நீராவி போன்றவை வளிமண்டலத்தில் வீசப்பட்டிருக்க வேண்டும். மிகவும் நுண்ணிய கந்தக தூசுகள் பூமியில் சூரிய ஒளி படுவதை தடுத்தன. ஆகையினால் பூமியில் இருக்கும் தாவரங்களின் ஒளிசேர்க்கை ஒருபுறம் நின்று போக மறுபுறம் பூமி மிகவும் குளுமையானதாக மாறிக்கொண்டே போனது. இப்படி நடந்த நிகழ்வுகள் பூமியில் அப்போதைக்கு இருந்த 75% உயிர்களை அழித்திருக்கிறது.
சிக்ஸுலப் போன்ற மிகப்பெரிய பள்ளங்கள் சில நிமிடங்களிலேயே உருவாகிவிடுகின்றன. மேலும் அந்த பள்ளத்திற்குள் ஒரு புதிய பாறையும் உருவாகின்றன. இப்படிப்பட்ட பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கோள்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள புதிதாக உருவான பாறைகள் பற்றி தெரிந்துகொள்வதற்கு இந்த மாதிரி உருவாக்கங்கள் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என துணை ஆசிரியர் தாமஸ் டேவிசன் [Department of Earth Science and Engineering] தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய ஆய்வறிக்கை Nature Communications இல் விரிவாக எழுதப்பட்டு இருக்கிறது. ஆங்கிலம் தெரிந்தவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.