Friday, November 22, 2024
HomeTech Articlesஅமெரிக்கா வெளியிட்ட ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் வீடியோ | என்ன சொல்கிறது அமெரிக்கா?

அமெரிக்கா வெளியிட்ட ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் வீடியோ | என்ன சொல்கிறது அமெரிக்கா?

ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா
ஏலியன்ஸ் பற்றிய மறைமுக ஆராய்ச்சித்திட்டத்தின் முன்னால் தலைவர் லூயிஸ் எலிசொண்டோ “நாம் மட்டும் தனியாக இல்லை என்பதற்கு வலுவான சான்றுகள் இருக்கின்றன” என 2017 ஆம் ஆண்டு CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பதற்கான வலுவான ஆதாரமாக காட்டப்படுகின்ற மூன்று வீடியோக்களை அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் வெளியிட்டு இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது தான் ஆதாரபூர்வமாக இந்த வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த வீடியோக்கள் ஏற்கனவே 2007 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இணையத்தில் கசிந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பெண்டகன் இன்னமும் இந்த வீடியோக்களை வேற்றுகிரகவாசிகள் என்றோ அவர்களின் பறக்கும் தட்டுதான் என்றோ உறுதிப்படுத்தவில்லை, மேலும் இதனை “விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு” என்றுதான் வகைப்படுத்தி இருக்கிறது. 

வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சி

ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா

இந்த உலகில் அதிக முதலீடுகள் செய்யப்படும் ஆராய்ச்சித்திட்டங்களை வகைப்படுத்தினால் அதில் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சித்திட்டங்களும் அடங்கும். அந்த அளவிற்கு ஒவ்வொரு நாடும் அதனால் இயன்றவரையில் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஆராய்ச்சியை முடுக்கிவிட்டுள்ளன. அரசு நிறுவனங்களையும் தாண்டி பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஏன் சில தனி நபர்களும் கூட தங்களுக்கு இருக்கின்ற பேரார்வத்தினால் ஆராய்ச்சியை செய்துவருகிறார்கள். 

 

பல லட்சம் கோடி கிரகங்கள் கொண்ட இந்த பேரண்டத்தில் நிச்சயமாக பூமியைப்போலவே உயிரினங்கள் வாழத்தகுந்த ஒரு கிரகம் இருந்தே தீரும். அங்கே மனிதர்கள் மாதிரியாகவோ அல்லது மனிதர்களை விடவும் தொழில்நுட்பத்தில் அதிக முன்னேறியவர்களாகவோ ஏலியன்ஸ் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் ஏலியன்ஸ் இருப்பதை கண்டறிவது அவ்வளவு எளிமையான காரியமும் இல்லை. ஏலியன்ஸை கண்டறிவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து நான் இன்னொரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன். அதை படிக்க இங்கே கிளிக் செய்திடுங்கள்

 

எப்படி ஏலியன்ஸ் இருக்கலாம் என ஒரு பிரிவினர் நம்புகிறார்களோ அதைப்போலவே அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்றும் நம்பும்படியாக ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நிராகரிப்போரும் இங்கே இருக்கவே செய்கிறார்கள். ஆனால் ஏலியன்ஸ் இருப்பது உண்மைதான் என்போருக்கு மேலும் நம்பிக்கையூட்டும் விதத்தில் அடிக்கடி ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகள் வெளிவருவதுண்டு. 

 

அப்படி 2007 ஆம் ஆண்டும் 2017 ஆம் ஆண்டும் இரண்டு வீடியோக்கள் இணையத்தில் கசிந்தன. அந்த வீடியோக்களில் பறக்கும் தட்டு போன்ற பொருள் ஒன்று நமது வான்வெளியில் பறப்பதை விமானிகள் படம் பிடித்து இருப்பார்கள். அமெரிக்க ராணுவம் மிகவும் ரகசியமாக வைத்திருந்த அந்த வீடியோக்கள் தான் அவை. ஆனால் அவை வெளியான போது அது உண்மையானதா பொய்யானதா என்பது குறித்து எதையும் அமெரிக்கா சொல்லவில்லை.

3 வீடியோக்களை வெளியிட்ட பெண்டகன்

https://www.youtube.com/watch?v=Orln4ib9S6g

 

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் பறக்கும் தட்டு சம்பந்தமான 3 வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோக்கள் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்தவை தான் என்றாலும் கூட “பொதுமக்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் மீதான உண்மைத்தன்மை குறித்து பல்வேறு நபர்களும் கேள்வி எழுப்பி வருவதால் அந்த சந்தேகங்களை போக்கும் பொருட்டு இதை வெளியிடுகிறோம் [“clear up any misconceptions by the public on whether or not the footage that has been circulating was real”] என்ற செய்தியோடு வீடியோக்களை வெளியிட்டது பெண்டகன்.

 

ஆனால் மேலும் ஒரு செய்தியையும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வீடியோக்களில் இடம்பெறும் பொருள்கள் வேற்றுக்கிரவாசிகள் பயணிக்க பயன்படுத்தும் பறக்கும் தட்டு என்பதை உறுதிப்படுத்தவில்லை. மாறாக “விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு” (unexplained aerial phenomena) என்றே கூறியிருக்கிறது. 

என்னவாக இருக்கும்?

ஏலியன்ஸ்களை கண்டறிவதில் என்ன சிக்கல் இருக்கிறது?

ஏரியா 51 என்ற பகுதியில் ஏலியன்ஸ் குறித்த ஆராய்ச்சிகளை ரகசியமாக அமெரிக்கா நடத்துவதாக ஏற்கனவே பல செய்திகள் இணையத்தில் உலாவருகின்றன. அதனை அமெரிக்கா மறுத்து வந்தாலும் கூட ஒவ்வொரு நாடும் இதுபோன்ற ரகசிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுவதும் சகஜமான ஒன்றாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பொருள் கூட அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ உருவாக்கிய ஒரு விமானமாக இருக்கலாம் அல்லது உண்மையிலேயே வெற்றிக்கிரவாசிகள் பயணிக்கும் பறக்கும் தட்டாகவோ கூட இருக்கலாம். [அப்படி அவர்கள் நம்மை கண்டறிந்து இருந்தால் நிச்சயமாக அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சித்து இருப்பார்கள் அல்லது நம்மை தாக்கி இருப்பார்கள். ஆனால் இதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது] 

 

1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ரோஸ்வெல் என்ற இடத்தில் ஒரு விவசாயி பறக்கும் தட்டு போன்றதொரு அமைப்பின் பாகங்களை கண்டறிந்தார். இப்படியொரு பொருள்கள் கண்டறியப்பட்டவுடன் பறக்கும் தட்டு குறித்த பேச்சுக்கள் வேகமெடுத்தது. இறுதியில் தான் சோவியத் யூனியனை கண்காணிக்க அமெரிக்கா உருவாக்கிய ரகசிய திட்டத்தின் உடைந்த பாகங்கள் தான் இவை என கண்டறியப்பட்டது. ஆகவே தான் இந்த வீடியோக்களில் இருப்பவை கூட அவர்களின் ஆராய்ச்சிகளில் ஒன்றாகக்கூட இருக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

வேற்றுகிரகவாசிகளை கண்டறிவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

நியூ ஹாரிஸான் [New Horizons]

இதுகுறித்து நாம் விரிவாக ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறேன். அதை இங்கே கிளிக் செய்து படிக்கலாம். அதில் குறிப்பிட்டுள்ளபடி, அப்படியே இந்த பேரண்டத்தில் நம்மைப்போன்ற உயிரினங்கள் இருந்தாலும் கூட நாம் அதை கண்டறிவதற்கான தொழில்நுட்பவசதியில் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறோம் என்பதே உண்மை. மனிதர்கள் வடிவமைத்ததிலேயே அதிகபட்ச வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது நியூ ஹாரிஸான் [New Horizons] தான். ஒருமணி நேரத்தில் 58,500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வல்லது நியூ ஹாரிஸான் செயற்கைகோள். அந்த வேகத்தில் பயணம் செய்தால் கூட ஒரு ஒளி ஆண்டு தூரத்தை கடப்பதற்கு 20,000 ஆண்டுகள் ஆகும்.

 

இன்று தொலைநோக்கிகள் வாயிலாகவே பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் கிரகம் மனிதர்கள் வாழ ஏதுவானதாக இருக்கிறது என கூறுகிறோம். ஆனால் அங்கே நேரடியாக ஒரு குழுவை அனுப்பி சோதனை செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் தற்போது நம்மிடம் இல்லை என்பதே உண்மை. ஆனால் மனிதர்கள் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். ஒருநாள் ஹாலிவுட் திரைப்படங்களில் பார்ப்பதைப்போல ஒளி வேகத்தில் செல்லக்கூடிய விண்வெளி கப்பல்களை வடிவமைப்பார்கள் என நம்புவோம். அதுவரைக்கும் நாம் காத்திருக்க வேண்டியது இருக்கும். அதற்கிடையில் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஏலியன்ஸ் வேண்டுமானால் நம்மை கண்டுபிடிக்கலாம். நம்மை சந்திக்க வரலாம். 


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular