நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பென்சில் ஆனது முழு வடிவம் பெற்றது. அதனைக்கொண்டு எழுத முடியும், எழுதியதை அழிக்க முடியும், உடைந்துபோனால் மீண்டு சீவி பயன்படுத்தவும் முடியும். இப்படிப்பட்ட பென்சில் உருவாக 500 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
நாம் இன்று பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பொருள்களில் பலவற்றை அதன் முன்னேறிய நிலையிலேயே [advanced] பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு செல்போன் என எடுத்துக்கொண்டால் அது கண்டறியப்பட்டபோது மிகவும் பெரியதாகவும் விலை அதிகமானதாகவும் இருந்தது. தற்போது விலை குறைவாக, மிகவும் சிறியதாக, அனைத்து வசதிகளும் கொண்டதாக பயன்படுத்துகிறோம். இனி வரக்கூடிய காலங்களில் இன்னும் பல சிறப்பம்சங்கள் இதில் இணையலாம். அதுபோலவே தான் பின் பக்கம் ரப்பர் உடன் நாம் இன்று பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பென்சிலைக்கூட முன்னேறிய நிலையில் தான் நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
நாம் இன்று பயன்படுத்தக்கூடிய பென்சிலானது இந்த வடிவத்தையும் பயன்பாட்டையும் அடைவதற்கு 500 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு? எதிர்பாராதவிதமாக கண்டறியப்பட்ட ஒரு மூலப்பொருளில் இருந்து பென்சில் பயணம் துவங்கியது. ஏகப்பட்ட போட்டிகள் முயற்சிகள் ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கிய பங்காற்றிக்கொண்டு இருக்கிறது பென்சில்.
கிராபைட் கண்டுபிடிப்பு
16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் பரோடேல் [Borrowdale] எனும் பகுதியில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அதன் வேர்ப்பகுதியில் சாம்பல் நிறத்திலான ஒரு உலோகம் போன்றதொரு பொருள் படிந்து இருப்பதை கண்டனர் அப்பகுதி மக்கள். ஈயம் போன்று தோற்றமளித்தாலும் அது ஒரு உலோகம் இல்லையென அவர்கள் அறிந்தார்கள். பிறகு தான் அவர்களுக்கு அது சுத்தமான கார்பன், கிராபைட் என்பது தெரிய வந்தது.
வேதிப்பொருள்கள் குறித்த பெரிய அறிமுகமற்ற அந்த காலகட்டத்தில் இதனை பயன்படுத்துவது எப்படியென்பதெல்லாம் அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் லெட் என்ற பொருளைக்கொண்டு ஒரு பேப்பரில் குறியீடுகளை குறிப்பதைவிட கார்பைட் கொண்டு குறித்தால் அதிக கறுப்பு நிறத்தோடு அடர்த்தியாக இருப்பதை மட்டும் அறிந்திருந்தார்கள். ரோமானியர்கள் காலத்தில் இதனை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஆங்கிலேயர்கள் கிராபைட் கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி குச்சிகளில் பொருத்தி எழுத பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலரோ அதனை காகிதங்களில் சுற்றி வெளியில் விற்கவும் ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அதற்கு பென்சில் என பெயர் வந்தது. தரமான பிரஷ் என்பதற்கு லத்தின் மொழியில் பென்சிலியம் [pencillum] என்று பெயர். அதுவே சுருங்கி பென்சில் என மாறிப்போனது.
மரக்கட்டை பென்சில்
கிபி 1600 களில் இங்கிலாந்து நாட்டின் கெஸ்விக் பகுதியைச் சேர்ந்த ஒரு தச்சர் புதிய ஐடியா ஒன்றுடன் வந்தார். அதன்படி கிராபைட் துண்டுகளுக்கு இருபுறமும் மரக்கட்டையை வைத்து ஒரு பென்சில் போன்ற அமைப்பை உருவாக்கலாம் என்பதுதான் அது. நீங்கள் படத்தில் பார்க்கும் செவ்வக வடிவத்திலான இந்த பென்சில் போன்ற அமைப்பு தான் முதன் முதலில் உருவான மாடர்ன் பென்சில் எனலாம். கிராபைட் முடிந்த பிறகு கூரிய கத்தியினால் இரண்டு பக்கமும் இருக்கின்ற மரக்கட்டையை சீவி திரும்ப திரும்ப பயன்படுத்திக்கொள்ள முடியும்.
வியாபாரம் துவங்கியது
உலக அளவில் விரும்பப்படும் ஒரு பொருளாக பென்சில் எழுதுபொருள் மாறத்துவங்கி இருந்த காலம். அதனை ஆங்கிலேயே அரசு லாபம் ஈட்டும் ஒரு விசயமாக மாற்றிட முயற்சியெடுத்தது. பரோடேல் [Borrowdale] பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து அதனை சுற்றி இருந்த பகுதிகளிலும் கார்பைட் தேடலை முடுக்கிவிட்டது. 1752 ஆம் ஆண்டு கிராபைட் திருடுவது குற்றமென அறிவித்தது. அதேபோல சுரங்கங்களில் பணியாற்றுகிறவர்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
பென்சில் தயாரிப்பு மற்றும் கிராபைட் ஏற்றுமதியில் இங்கிலாந்து முன்னனி வகித்தது. இதற்கிடையில் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் கிராபைட் கண்டறியப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் கிடைத்த கிராபைட் தரத்தை விட அது குறைவானதாக இருந்ததனால் இங்கிலாந்து முன்னனி வகித்தது. தொடர்ச்சியாக இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள நினைத்த இங்கிலாந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 வாரம் மட்டுமே கிராபைட் வெட்டி எடுக்கும் வேலையை செய்தது. இதனால் ஒரேயடியாக கிராபைட் தீர்ந்துபோகாமல் பார்த்துக்கொண்டது.
மாடர்ன் பென்சில் உருவாக்கம்
ஒரு போரும் அதனால் விளைந்த தடையும் தான் மாடர்ன் பென்சில் உருவாக காரணமாக அமைந்தது என்றால் ஆச்சர்யமான செய்தியாக நிச்சயமாக இருக்கும் அல்லவா. 1793 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடு பிரான்சு நாட்டின் மீது போர் தொடுத்தது.அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய பென்சில் இறக்குமதியாளராக பிரான்சு இருந்தது. போர் காரணங்களால் பிரான்ஸ் நாட்டுக்கு பென்சில் ஏற்றுமதியை ரத்து செய்தது இங்கிலாந்து. இதனால் பிரான்சில் பென்சில் தட்டுப்பாடு ஏற்பட்டது. மறுபக்கம் இந்த தடையால் இங்கிலாந்து நாட்டிற்கும் கூட இழப்பு ஏற்பட்டது.
போர் துவங்கி ஓராண்டுக்கு பிறகு இதற்கு தீர்வு காண விரும்பிய பிரான்சு நாட்டின் அமைச்சர் லாசரே கார்னோட் [Lazare Carnot] ஒரு குழு ஒன்றினை நிக்கோலாஸ்-ஜாக் கான்டே [Nicolas-Jacques Conté] என்ற அறிவியல் அறிஞர் மற்றும் மிலிட்டரி கமேண்டர் இடம் ஒப்படைத்தார். சூடான காற்று பலூன் தயாரிப்பில் முனைப்புடன் இருந்தார் கான்ட. அப்போது ஏற்பட்ட விபத்தில் தான் அவருடைய ஒரு கண் போயிருந்தது. அமைச்சரின் உத்தரவுக்கு பிறகு அந்த வேலையை ஓரம்கட்டிவிட்டு பென்சில் தயாரிப்பில் முனைப்பு காட்டினார் கான்டே.
அவரது முயற்சியில் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இதுவரைக்கும் வெறும் கிராபைட் துண்டுகளை நேரடியாக பயன்படுத்தி வந்ததற்கு மாற்றாக கிராபைட் உடன் வெவ்வேறான அளவுகளில் கிளே [clay] கலந்து பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார். அதிக அளவு கிளே கலந்தால் அடர்த்தி குறைவாக [lighter] எழுதும் பென்சிலையும் குறைந்த அளவு கிளேயில் அதிக அளவு கிராபைட் இருந்தால் அடர்த்தி அதிகமாக [darker]எழுதும் பென்சிலையும் உருவாக்கலாம் என கண்டறிந்தார்.
மேலும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பென்சில் வடிவமான – ஒரு மரக்கட்டையை இரண்டு துண்டுகளாக்கி அவற்றை கிராபைட் இன் இருபக்கமும் வைத்து ஒட்டி பயன்படுத்துவதற்கு மாற்றாக மரக்கட்டையில் ஒரு துளையிட்டு அதில் கிராபைட் மற்றும் கிளே கலவையை கொட்டி அதனை இன்னொரு மரப்பொருளால் மூடி பயன்படுத்தலாம் என கண்டறிந்தார். 1795 ஆம் ஆண்டு இந்த வடிவமைப்பிற்கு காப்புரிமை பெறப்பட்டது. தேவையே கண்டுபிடிப்பின் முதல் படி என்பதற்கு ஏற்றாற்போல எழுதுவற்கு மிகவும் ஏற்றதாக இருந்ததனால் பின்னாளில் இந்த பென்சிலுக்கு வரவேற்பு அதிகரித்தது. நாம் இன்று பயன்படுத்துகிறோமே 1HB , 2 HB பென்சில் இவை அனைத்துமே கான்டே என்பவரின் கண்டுபிடிப்புதான்.
மிகப்பெரிய தொழிலாக மாறிய பென்சில் தயாரிப்பு
கான்டே தயாரித்த பென்சிலுக்கு கிடைத்த வரவேற்பினால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதை தயாரிக்க முயற்சிகள் செய்யப்பட்டன. அதற்காக அவர்கள் கான்டே தயாரித்த பென்சிலை ஆராய்ந்து எந்த விதத்தில் கிராபைட் மற்றும் கிளே இணைக்கப்பட்டிருக்கிறது என ஆராய முற்பட்டார்கள். அது அவர்களுக்கு பலன் தரவில்லை. அமெரிக்காவிலும் கூட பல்வேறு பொருள்களை கலந்து பென்சில் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போர் மற்றும் ஏற்றுமதியில் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவில் பென்சில் தட்டுப்பாடு நிலவ துவங்கியது.
தோரே [Thoreau] என்ற பென்சில் தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்காவில் 1821 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு மிக முக்கியக்காரணம், தோரோவின் உறவினர் கிராபைட் இருக்கும் ஒரு சுரங்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்திருந்தார். இவர்களுடைய பென்சிலில் கார்பைட் உடன் திமிங்கிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட மெழுகு கலந்து பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. கான்டே தயாரித்த பென்சிலுக்கு ஈடுகொடுக்க முடியாவிட்டாலும் கூட அமெரிக்காவில் பெரும்பகுதியாக தோரே நிறுவனம் தயாரித்த பென்சில்கள் விற்பனைக்கு வந்தது.
இளம் பருவத்தில் தந்தைக்கு பென்சில் தயாரிப்பில் உதவிய ஹென்றி டேவிட் தோரே பிறகு அங்கிருந்து விலகி படிக்கத்துவங்கினார். இவர் ஹார்வேர்டு பல்கலைக்கழத்தில் பயின்று பிறகு ஆசிரியராக பணி புரிந்தார், பின்னர் அதில் விருப்பமில்லாமல் அங்கிருந்து விலகி தனது குடும்ப தொழிலான பென்சில் தயாரிப்பில் என்ன மேம்படுத்தலாம் என சிந்திக்க ஆரம்பித்தார. அதன்பிறகு தான் கிராபைட் உடன் கிளே கலந்து பென்சில் தயாரிக்கலாம் என்ற யோசனை அவருக்கு வருகிறது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னரே கான்டே என்பவர் இப்படியொரு பென்சிலை உருவாக்கி இருக்கிறார் என்பது தெரியாமலேயே ஹென்றி இந்த முயற்சியில் இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது திடிரென குடும்பத்தொழிலுக்கு வரும் ஹென்றி வரும்போதெல்லாம் மிகப்பெரிய மாற்றத்தை செய்துவிட்டே போவார். கிராபைட் மற்றும் கிளே அவற்றை அரைக்க மெஷின், மரத்துண்டில் துளையிட ஒரு கருவி என சகலமும் கொண்டுவந்தார்.
இப்படி ஒவ்வொரு அடியாக முன்னேறித்தான் பென்சில் இன்று இப்படியொரு முன்னேறிய நிலைக்கு மாறி வந்திருக்கிறது. 1858 ஆம் ஆண்டு வரைக்கும் பென்சிலில் ரப்பர் என்ற ஒன்று இணைக்கப்படாமல் தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு தான் பென்சிலுடன் ரப்பர் இணைத்து வழங்கப்பட்டிருக்கிறது. அதற்குப்பிறகு பல்வேறு நாடுகளிலும் பென்சில் தயாரிக்கும் நிறுவனங்கள் உருவாகின. அவை சில மாற்றங்களை செய்தன. இன்றளவும் கூட ஒவ்வொரு நிறுவனமும் ஏதோ ஒரு மாற்றத்தை பென்சில் தயாரிப்பில் செய்துகொண்டுதான் இருக்கின்றன
இன்று ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் தவழுகின்ற பென்சில் 500 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்தது என்பது ஆச்சர்யம் கலந்த உண்மை. உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் இந்த வரலாற்றைக்கூறினால் அதன் பெருமையை அவர்கள் உணர்வார்கள். நாளை பள்ளியில் ஒரு பென்சிலை தொலைக்க மாட்டார்கள்.
இதுபோன்ற அருமையான கட்டுரைகளை உங்களது வாட்ஸ்ஆப்பில் பெற விரும்பினால் இந்த லிங்கை கிளிக் செய்து குரூப்பில் இணைந்துகொள்ளுங்கள்
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.