Saturday, October 5, 2024
HomeTech Articles10 தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புகள் | 10 Inventions by Thomas Alva Edison

10 தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்புகள் | 10 Inventions by Thomas Alva Edison

தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றிக்கதை

Thomas Alva Edison

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர். அவர் தனது வாழ்நாளில் 1,093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகளை வைத்திருந்தார். அவரது கண்டுபிடிப்புகளுக்காகவே கண்டுபிடிப்புகளின் அரசன் என புகழப்பட்டார். நியூ ஜெர்சியில் உள்ள மென்லோ பூங்காவில் உள்ள அவரது புகழ்பெற்ற ஆய்வகத்தில் தான் அவரது பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அவரது எண்ணற்ற கண்டுபிடிப்புகளில் முக்கியமான 10 கண்டுபிடிப்புகள் இங்கே!

தாமஸ் ஆல்வா எடிசன் [Thomas Alva Edison In Tamil] பிறந்தபோது அவருக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. அதோடு நான்கு வயது வரைக்கும் அவரால் பேச இயலவில்லை. பிறகு அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடுகளால் அவர் எட்டு வயதில் தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் அது நீடிக்கவில்லை. உங்கள் மகன் எடிசனுக்கு மூளை வளர்ச்சி சரியில்லை, அவனை வகுப்பறைக்குள் இனிமேலும் அனுமதிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. அப்படி பள்ளியால் நிராகரிக்கப்பட்ட எடிசனுக்கு அவரது அம்மா வீட்டிலேயே பாடம் சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். அப்படி மூளை வளர்ச்சி குறைந்த பையனாக அறியப்பட்ட எடிசன் தான் பின்னாட்களில் உலகம் போற்றும் கண்டுபிடிப்புகளின் பேரரசன் என போற்றப்பட்டார். அது விந்தையால் ஏற்பட்டது அல்ல, கடின முயற்சியால் கடின உழைப்பால் ஏற்பட்டது. அப்படிப்பட்ட எடிசன் தனது வாழ்நாளில் பல அறிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நமது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். எடிசனின் முக்கிய கண்டுபிடிப்புகளில் 10 கண்டுபிடிப்புகளை இங்கே பார்க்கலாம்.

10 Inventions By Thomas Alva Edison

1. மின் வாக்கு பதிவு கருவி [Electrographic Vote-recorder]

2. யுனிவர்சல் ஸ்டாக் டிக்கர் [Universal stock ticker]

3. செக்ஸ்டுப்ளெக்ஸ் மற்றும் மல்டிபிளக்ஸ் தந்தி [Sextuplex and multiplex telegraph]

4. கார்பன் ஒலிவாங்கி [Carbon microphone]

5. ஃபோனோகிராஃப் [Phonograph]

6. ஒளிரும் விளக்கு [Incandescent light bulb]

7. மின்சார விநியோக முறை [Electricity distribution system]

8. மின்சாரத்தை அளவிடும் மீட்டர் [The Electric Power Meter]

9. எலக்ட்ரிக் கார்களுக்கான அல்கலைன் பேட்டரி [Alkaline Battery for Electric Cars]

10. ஃப்ளோரோஸ்கோப் [fluoroscope]

11. இரும்பை பிரித்தெடுக்கும் முறை [Magnetic Iron Ore Separator]

1. மின் வாக்கு பதிவு கருவி [Electrographic Vote-recorder]

தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதல் கண்டுபிடிப்பான மின் வாக்கு பதிவு கருவிக்கான காப்புரிமையை தனது 22 ஆம் வயதில் பெற்றார். அதே காலகட்டத்தில் மின் வாக்கு பதிவு கருவியை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வந்தார்கள். ஆனால் அவர்களை வென்று முதல் காப்புரிமையை பெற்றார். அப்போதைய காலகட்டங்களில், அமெரிக்க காங்கிரசில் வாக்குப்பதிவு அனைத்தும் குரல் வாக்கெடுப்பு முறையிலேயே இருந்தது. அதற்கு மாற்றாக, மின் வாக்கு பதிவு கருவி கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால், மிக விரைவாகவும் சரியாகவும் வாக்குப்பதிவை பதிவிடும் இந்த மாற்றை அப்போதைய அமெரிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆகவே, அது பயன்பாட்டுக்கு வரவில்லை.

2. யுனிவர்சல் ஸ்டாக் டிக்கர் [Universal stock ticker]

edison and his mother

கோல்ட் அண்ட் ஸ்டாக் டெலிகிராப் நிறுவனத்திற்காக யுனிவர்சல் ஸ்டாக் டிக்கர் என்ற கருவி 1871 இல் உருவாக்கப்பட்டது. எடிசனின் மேம்படுத்தப்பட்ட ஸ்டாக் டிக்கர் மூலமாக பங்குச்சந்தை பரிமாற்ற தகவல் மிக விரைவாக பரிமாறப்பட்டது, அப்போது இது பெரும் புரட்சிகரமாக பார்க்கப்பட்டது. நிகழ்நேர பங்குச் சந்தை பரிமாற்ற தகவல் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக இயந்திர முறையில் அனுப்பப்பட்டது.

3. செக்ஸ்டுப்ளெக்ஸ் மற்றும் மல்டிபிளக்ஸ் தந்தி [Sextuplex and multiplex telegraph]

1872-76 முதல், எடிசன் மல்டிபிளக்ஸ் தந்தி கண்டுபிடிப்பில் ஈடுபட்டு காப்புரிமை பெற்றார். இதன் மூலமாக ரயில் நிலையங்கள் மற்றும் நகரும் ரயில்களுக்கு இடையே செய்திகளை அனுப்ப முடியும், ஒரே நேரத்தில் ஆறு செய்திகளை இதன் மூலமாக அனுப்ப முடியும். இது வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்திற்கு வயரிங் செய்திட வேண்டிய தேவையை குறைத்து மில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்தியது. 1837 ஆம் ஆண்டு சாமுவேல் மோர்ஸால் கண்டுபிடிக்கப்பட்ட தந்தியில் எடிசன் பல மேம்பாடுகளை செய்து புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அதிலே இரண்டு தான் இவை. மொத்தமாக 200 காப்புரிமைகளை தந்தி அமைப்பில் மேற்கொண்ட மேம்பாடுகள் மூலமாக எடிசன் பெற்றார்.

4. கார்பன் ஒலிவாங்கி [Carbon microphone]

“இந்த உலகத்திற்கு என்ன தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்கிறேன். பிறகு அதற்கு தேவையானதை கண்டறிகிறேன்” – எடிசன்

கார்பன் ஒலிவாங்கி என்பது தொலைபேசியின் உள்ளே ஒலியை மின் ஒலி சமிக்ஞையாக மாற்றும் ஒரு சாதனம். எடிசன் இந்த கண்டுபிடிப்பிற்க்காக காப்புரிமை கோரி 1876 இல் விண்ணப்பித்தார். ஆனால் பலர் அவருக்கு முன்பே அதை கண்டுபிடித்ததாகக் கூறி காப்புரிமை கோரினார்கள். பிறகு வழக்குகள் நடைபெற்று 1892 இல் நீதிமன்றம் எடிசனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

5. ஃபோனோகிராஃப் [Phonograph]

தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றிக்கதை

1877ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒலிப்பதிவு சாதனம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. தனது குரலை பதிவு செய்திட விரும்புகிறவர் ஒரு ஊதுகுழாயில் பேச வேண்டும். ஒரு பதிவு ஊசி பின்னர் ஒரு உலோக உருளை மீது ஒலி அதிர்வுகளை பதிவு செய்யும். அந்த உருளையில் ஒரு தகர படலம் சுற்றப்பட்டு இருக்கும். எடிசன் பதிவு செய்த வாக்கியம் “Mary had a little lamb.” என்பது தான்.

6. ஒளிரும் விளக்கு [Incandescent light bulb]

“மேதைகளில் இயற்கையாகவே மேதைமை 1% பேருக்கு தான் இருக்கும். மீதமுள்ள 99% மேதைகள் கடுமையான உழைப்பினாலேயே மேதைகளாக ஆகிறார்கள்” – எடிசன்

எடிசன் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருந்தாலும் அவர் கண்டுபிடித்த ஒளிரும் மின்விளக்கு தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இதனை எடிசன் 1879 இல் கண்டுபிடித்தார். 1802 ஆம் ஆண்டில் ஹம்ப்ரி டேவி என்பவர் முதன் முதலாக மின்சார பல்பினை கண்டறிந்தாலும் கூட அது நீடித்து எரியும் தன்மை கொண்டிருக்கவில்லை. ஆகவே அதனை யாரும் பயன்படுத்த நினைக்கவில்லை. எடிசன் தான் தனது கடுமையான கண்டுபிடிப்பின் பலனாக 1200 மணி நேரத்திற்கும் அதிகமாக எரியக்கூடிய மின்சார விளக்கினை கண்டுபிடித்தார். தற்போது அவர் கண்டுபிடித்த மின்சார விளக்கினால் தான் மனிதர்கள் பயன்படுத்தி வந்த மெழுகுவர்த்தி விளக்குகள், மற்ற விளக்குகள் அனைத்திற்குமான மாற்று கிடைத்தது.

7. மின்சார விநியோக முறை [Electricity distribution system]

எது தேவையென அறிந்து அதனை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவது தான் எடிசன் வழக்கம். மின்விளக்கு கண்டுபிடித்தவுடன் அதனை பயன்படுத்த தேவையான மின்சாரத்தை வீடுகளுக்கு பகிர்ந்து அளிக்கும் முழு மின் அமைப்பை உருவாக்க வேண்டும் என எடிசன் நினைத்தார். 1882 ஆம் ஆண்டில் அவர் நேரடி மின்னோட்டத்தை (DC) அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பைக் கண்டுபிடித்தார், அதில் ஒரு மின்சாரம் ஒரு திசையில் மட்டுமே பாயும்.

1886 ஆம் ஆண்டில், ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸின் AC அடிப்படையிலான மின் அமைப்பு முறை எடிசனின் DC அமைப்பிற்கு போட்டியாக மாறியது. AC மின் அமைப்பு நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை கடத்த உகந்ததாக இருந்தது. பல நன்மைகள் AC யில் இருப்பதனால் AC மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான சரியான அமைப்பாக மாறியது. தற்போது இது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க பயன்படுகிறது, அதே நேரத்தில் டிசி பொதுவாக பேட்டரி மூலம் இயங்கும் சாதனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற குறைந்த மின்னழுத்த பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

8. மின்சாரத்தை அளவிடும் மீட்டர் [The Electric Power Meter]

மின்சாரத்தை வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பும் போது அதனை அளவிடுவது அவசியமானது. அப்போது தான் எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறார்களோ அதற்கு ஏற்றாற்போல போல கட்டணங்கள் விதிக்க முடியும். ஆகவே மின்சாரத்தை அளவிடும் மீட்டர் ஒன்றினை கண்டுபிடித்தார் எடிசன். அவர் கண்டறிந்த Webermeter கருவிக்கு 1881 இல் காப்புரிமை வாங்கினார்.

9. எலக்ட்ரிக் கார்களுக்கான அல்கலைன் பேட்டரி [Alkaline Battery for Electric Cars]

தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றிக்கதை

எடிசன் மின்சாரம் மூலம் கார்களை இயக்க முடியும் என்று நம்பினார். அவர் நம்பியது இப்போது தான் மெல்ல நடந்துகொண்டு வருகிறது. ஆனால் இதனை அப்போதே செய்து காட்டியவர் எடிசன். 1899 ஆம் ஆண்டில் அவர் ஒரு அல்கலைன் பேட்டரியை உருவாக்கத் தொடங்கினார். 1900 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 4,000க்கும் மேற்பட்ட கார்கள் மின்சாரத்தில் இயங்கியது. ரீசார்ஜ் செய்யாமல் 100 மைல்கள் (161 கிலோமீட்டர்) இயங்கும் பேட்டரியை உருவாக்குவதே அவரது குறிக்கோளாக இருந்தது. எடிசன் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். ஆனால் எடிசனின் பணி வீண் போகவில்லை — பேட்டரிகள் அவரது மிகவும் இலாபகரமான கண்டுபிடிப்பாக மாறியது. அவரது நண்பர் ஹென்றி ஃபோர்டும் எடிசனின் பேட்டரிகளை தனது மாடல் டிஎஸ்ஸில் பயன்படுத்தினார்.

10. ஃப்ளோரோஸ்கோப் [fluoroscope]

1895 இல் வில்ஹெல்ம் ரோன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த பிறகு, எடிசன் அவற்றைப் பரிசோதிக்கும் வேலைக்குச் சென்றார். 1896 ஆம் ஆண்டில் அவர் ஒரு மருத்துவ ஃப்ளோரோஸ்கோபிக் சாதனத்தை உருவாக்கினார், இது ஒரு பொருளின் உட்புறத்தில் நகரும் படங்களைப் பெறுவதற்கு X-கதிர்களை பயன்படுத்த உதவியது.

11. இரும்பை பிரித்தெடுக்கும் முறை [Magnetic Iron Ore Separator]

1880 மற்றும் 1890 களில் தாதுப்பொருள்களில் இருந்து காந்தம் மூலமாக இரும்பை பிரித்தெடுக்கும் முறையை எடிசன் கண்டறிந்தார். இதனை அடுத்து அவர் பெருமளவு முதலீட்டில் பல சுரங்கங்களை வாங்கினார். ஆனால், அது பெரிதும் லாபம் தரவில்லை. ஆகவே அதனைவிட்டு வெளியேறினார். ஆனால் அங்கே அவர் கற்றுக்கொண்ட பாடம் பின்னாட்களில் அவர் சிமெண்ட் தொழிற்சாலை உருவாக்கும் போது பெரிதும் பயன்பட்டது. 

“வெற்றி பெறுகிற போது உற்சாகமாக இருப்பது சிறப்பல்ல. தோல்வி அடையும் போது வெற்றிபெற உற்சாகத்தோடு தொடர்ந்து உழைப்பது தான் சிறப்பு” – எடிசன்

எடிசன் மிகப்பெரிய சாதனையாளராக உருவானதற்கு அவரது அம்மாவும் அவரது கடின உழைப்பும் தான் உண்மையான காரணம். கடுமையாக உழைத்தால் எவராலும் வெற்றியாளராக வர முடியும் என்பது தான் எடிசன் ஒவ்வொரு முறையும் எடிசன் கூறிக்கொண்டே இருக்கும் உண்மை.

https://techtamilan.in/thomas-alva-edison-history-in-tamil/
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular