Site icon Tech Tamilan

யோகிதா ரகுவன்ஷி : இந்தியாவின் முதல் பெண் சரக்கு வண்டி ஓட்டுனர் | Yogita Raghuvanshi

யோகிதா ரகுவன்ஷி இந்தியாவின் முதல் பெண் சரக்கு வண்டி ஓட்டுனர் Yogita Raghuvanshi story

First Indian Women Truck Driver

யோகிதா ரகுவன்ஷி [Yogita Raghuvanshi] சரக்கு வண்டியை ஓட்டும் இந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர் என அறியப்படுகிறார். மஹாராஷ்டிராவை சேர்ந்த யோகிதா ‘தான் சக்கரத்தின் மேலே இருக்கும் போது மிகவும் சக்தி வாய்ந்தவராக உணர்கிறேன்’ என கூறுகிறார். இவர் எப்படி இந்த வேலைக்குள் நுழைந்தார், வாருங்கள் பார்ப்போம்.



யோகிதா ரகுவன்ஷி [Yogita Raghuvanshi] மகாராஷ்டிராவின் நந்தூர்பார் என்ற பகுதியை சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் தனது கணவனின் உந்துதலால் வழக்கறிஞருக்கு படித்தார். அப்போது நல்ல கணவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகளுக்கு தாய் என மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்த போது விட்டுச்சென்றது ஒரு சரக்கு லாரியும் குழந்தைகளும் தான். கணவனின் மறைவுக்கு பின்பு ஒரு ஓட்டுனரை வேலைக்கு அமர்த்தி சரக்கு வண்டியை இயக்கினார் யோகிதா. ஆனால் அதில் கொஞ்சமும் லாபம் கிட்டாதபடியால் சிந்திக்க ஆரம்பித்தார். ஏன் லாபம் கிட்டவிட்டலை என்ற அவரது கேள்விக்கு கிடைத்த பதில் தான் அவரை சரக்கு வண்டிக்கே ஓட்டுநர் ஆக்கியது. ஆமாம், ஒரு வேலையாளை பணிக்கு அமர்த்தி சரக்கு வண்டியை ஓட்டினால் அவருக்கு சம்பளம் போக மீதம் பெரிய அளவில் இருக்காது என அவர் உணர்ந்தார்.

பட்டம் பெற்றும் குடும்பத்திற்காக செய்த தியாகம்

கணவர் இறந்த போது வழக்கறிஞர் படிப்பை முடித்திருந்தார் யோகிதா. அப்படி இருக்க நீங்கள் ஏன் வக்கீல் பணிக்கு செல்லவில்லை என்ற கேள்வியை முன்வைத்தபோது ‘என்னால் வக்கீல் தொழிலுக்கு சென்றிருக்க முடியும். ஆனால் வக்கீல் வேலையை பொறுத்தவரைக்கும் பல ஆண்டுகள் ஒருவரிடம் ஜூனியராக வேலை பார்க்க வேண்டும். அதற்கு கிடைக்கும் சம்பளம் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு இருக்காது. ஆகவே தான் சரக்கு வண்டிக்கு ஓட்டுநர் ஆகலாம் என நினைத்தேன். இந்தியா போன்ற வளரும் நாட்டில் எப்போதும் சரக்கு வண்டி ஓட்டுநருக்கு வேலை இருந்துகொண்டே இருக்குமல்லவா’ என குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் இந்த வேலைக்கு வந்தபோது எந்த மாதிரியான சிக்கல்களை சந்தித்தீர்கள் என கேட்டபோது ‘எந்த சாலையில் சென்றால் முக்கிய சாலையை பிடிக்க முடியும் என்பதெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது. ஆங்காங்கே கேட்டுக்கொண்டு செல்வது துவக்கத்தில் பெரும் சவாலாக இருந்தது. லாரியில் பழுது ஏற்படும் போதோ அல்லது ஓய்வெடுக்கும் இடங்களிலோ ஒரு பெண்ணாக சில சிக்கல்கள் இருக்கவே செய்யும்’ என குறிப்பிடுகிறார்.

இந்த வேலையில் நீங்கள் ஈடுபட்டிருப்பதை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் ‘நான் சரக்கு வண்டியை ஓட்டுகிறவர் என்று இன்னமும் கூட பலர் நம்புவதில்லை. நேரடியாக பார்ப்பவர்களும் கூட ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். நான் உணவு அருந்தவோ ஓய்வு எடுக்கவோ செல்லுமிடங்களில் ஆண் ஓட்டுநர்கள் தான் அதிகம் இருப்பார்கள். அப்போது என் மீது அக்கறை கொண்ட பலர், இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லலாமே என கேட்பார்கள். அப்படி கேட்பவர்களிடம் நான் ஏன் இந்த வேலையை விட வேண்டும் என கேட்டால் அவர்களிடம் அதற்கு சரியான பதில் இருக்காது. இப்படிப்பட்ட அறிவுறைகளையும் தடங்களையும் நான் தாண்டி செல்கிறேன்’ என கூறுகிறார்.

நீங்கள் இந்த தேசத்தின் பெண்களுக்கு ஏதேனும் கூறிக்கொள்ள விரும்புகிறீர்களா என்றதற்கு ‘நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒருவருக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும், அவர்களைப் பற்றி உலகம் என்ன நினைக்கும் என்ற எண்ணத்திற்கு அடிபணிந்துவிடக்கூடாது. நாம் விரும்பினால், நாம் எதையும் செய்யலாம் மற்றும் சமூக நிலைப்பாடுகளை உடைக்கலாம். இந்த சக்கரத்தின் பின்னால் நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன், தொலைதூர பெண்களுடன் தொடர்புடைய ஒரு வேலையை நான் எடுத்ததில் பெருமைப்படுகிறேன். எனது பணியில் ஒவ்வொரு நாளும் சவால்களை எதிர்கொள்ள நான் விரும்புகிறேன், இது எனக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கிறது’ என்று கூறுகிறார்.

இந்தியாவில் செயல்பட்டுவரும் சர்வதேச எண்ணெய் நிறுவனமான ஷெல் ஒரு முன்னெடுப்பை செய்துவருகிறது. தடைகளை உடைத்து வெற்றி பெறுகிறவர்களை அடையாளப்படுத்தும் விதமாக ‘Great Things Happen When We Move’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை அடையாளப்படுத்தும் விதமாக சில நபர்களின் வெற்றிக்கதைகளை குறும்படமாக வெளியிட்டது ஷெல்.

முன்னேறும் போது நல்ல விசயங்கள் நடக்கும்.

வாழ்த்துக்கள் யோகிதா ரகுவன்ஷி!





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version