வீட்டிலிருந்தே வேலை செய்வதில் “உற்பத்தித்திறன்” அதிகரிப்பதாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவித்து இருந்தது. ஆனாலும் தொழில் நிறுவனங்கள் இதுவரை சோதித்துப்பார்க்க தயங்கிய “வீட்டிலிருந்தே வேலை” என்பது சூழ்நிலை காரணமாக இன்று செயல்பாட்டில் இருக்கிறது.
சென்னையில் செயல்பட்டு வந்த பெரும்பான்மையான டெக் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்து இருக்கிறது. “உற்பத்தித்திறன்” எப்போது அதிகமாக இருக்கிறது என்பதனை அறிந்துகொள்வதற்காக வேலை நேரத்தை குறைப்பது, விடுமுறைகளை அதிகரிப்பது, வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிப்பது போன்ற பல்வேறு ஆய்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அந்த ஆய்வின் முடிவுகள் மற்றும் அதன் அடிப்படையில் வைக்கப்படும் பரிந்துரைகள் அனைத்தும் அன்றைய நாள் செய்தித்தாள்களில் ஒரு ஆச்சர்யமான செய்தியாக மட்டுமே வரும். மற்றபடி யாரும் அதை கண்டுகொள்ள மாட்டார்கள்.
பாரம்பரியமான முறைகளில் இருந்து நிறுவனங்கள் புதிய முறைகளுக்கு மாறிட பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. சில நிறுவனங்களின் முதலாளிகளில் புதுமைத்துவத்தை விரும்புகிறவர்கள் இருந்தால் அவர்கள் வேண்டுமானால் இப்படிப்பட்ட புதிய முறைகளை கையில் எடுப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அந்த முயற்சி அந்த நிறுவனத்தோடு நின்றுபோய்விடும். உண்மையில் வீட்டிலிருந்தே வேலை என்பது பயனுள்ளதாக இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய அலசல் தான் இந்த பதிவு.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு
https://youtu.be/oiUyyZPIHyY
வீட்டிலிருந்தே வேலை செய்வது பலனுள்ளதா இல்லையா என்பதனை ஆராய்வதற்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நிகோலஸ் ப்ளூம் என்ற பேராசிரியர் உண்மையான பணியாட்களை கொண்டு ஆய்வு நடத்திட விரும்பினார். இதற்கு ஏற்றாற்போல சீனாவை சேர்ந்த Ctrip என்ற டிராவல் ஏஜென்சியை நடத்திவருகிற ஜேம்ஸ் லியாங் விருப்பம் தெரிவித்தார். இந்த நிறுவனத்தில் 16000 பேர் வேலை பார்த்து வந்தனர். அந்த நிறுவனத்தின் ஷாங்காய் தலைமையகம் விலைமதிப்புள்ள ஒரு இடத்தில் இயங்கி வந்தது. இதனால் இந்நிறுவனத்திற்கு ஆகும் செலவு அதிகமானது. மேலும் ஊழியர்களும் இங்கே வந்து செல்லவும் அருகே தங்கவும் அதிக செலவு செய்யவேண்டி இருந்தது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் ஜேம்ஸ் லியாங் இந்த ஆய்வுக்கு உடன்பட்டார்.
ஆய்வு துவங்கியது, முதல்கட்டமாக 500 பணியாளர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டார்கள். ஒரு பகுதியினர் அந்த ஏற்கனவே வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே வேலை செய்தனர். இன்னொரு பகுதியினர் வீடுகளில் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரே வேண்டுகோள் – தனி அறை இருக்க வேண்டும், சராசரியான பிராட்பேண்ட் இணைப்பு இருக்க வேண்டும் என்பதுதான். இரண்டு ஆண்டுகள் உன்னிப்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஆச்சர்யமான முடிவுகள் கிடைத்தன.
ஆமாம், அலுவலகத்தில் இருந்து பணியாற்றுகிறவர்களை காட்டிலும் அதிக செயல்திறனோடு வீட்டில் இருந்தவர்கள் பணியாற்றி இருப்பது ஆய்வில் தெரியவந்தது. அதோடு மட்டுமில்லாமல் வேலையை விட்டுப்போகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது, விடுமுறை எடுப்பதும் கூட அதிக அளவில் மாறுபட்டு இருந்தது. நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், ஒரு பணியாளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு $2000 டாலர்கள் நிறுவனத்திற்கு செலவு குறைந்ததாக சொல்லப்பட்டது. அவர்கள் வேலை செய்திட இடம், போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகியவைகளுக்கு ஆகின்ற செலவினங்கள் முற்றிலும் குறைந்து போயின.
ஆனால் இதில் ஒரு குறைபாடும் தென்பட்டது, வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 100 சதவிகிதம் வீட்டிலே இருந்தாலும் கூட தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதை போன்ற உணர்வினை பெற்றதாக தெரிவித்தனர்.
இங்கே சோதித்து பார்க்க வேண்டும்
தற்போது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அற்புதமான வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. ஆமாம், தற்போது பெரும்பான்மையான நிறுவனங்களில் ஊழியர்கள் அவர்களின் வீடுகளில் இருந்துதான் வேலை பார்த்து வருகிறார்கள். முந்தைய நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் என்ன வித்தியாசம் என்பதனை ஒவ்வொரு நிறுவனமும் தரவுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேலையின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதா, மேம்பட்டுள்ளதா, செலவு குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பது போன்ற தரவுகளை ஆராய வேண்டும்.
ஒட்டுமொத்த நிறுவனத்தையுமே வீட்டில் இருந்து பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் என்றில்லை. மாறாக, ஒரு பணியாளுக்கு ஒரு வருடத்தில் ஒரு மாதமோ அல்லது சில குறிப்பிட்ட நாட்களோ வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கலாம். காலம் மாறிக்கொண்டு இருக்கிறது, அதற்கேற்றவாறு நாம் புதிய விசயங்களை பின்பற்ற துவங்க வேண்டும்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.