Site icon Tech Tamilan

செவ்வாய் கிரக குடியேற்றம் ஏன் அவசியமானது தெரியுமா? | Why human go to mars?

செவ்வாய் கிரக குடியேற்றம் ஏன் அவசியமானது தெரியுமா

செவ்வாய் கிரக குடியேற்றம் ஏன் அவசியமானது தெரியுமா

செவ்வாய் கிரக குடியேற்றம் ஏன் அவசியமானது தெரியுமா

Mars

அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு மனித இனம் வாழ வேண்டும் என நீங்கள் விரும்பினால் மனிதன் இதுவரை செல்லாத கிரகங்களுக்கு தைரியமாக செல்ல வேண்டும் – பிரபல விண்வெளி ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் நாசாவின் 50 ஆம் ஆண்டுவிழாவில் கூறிய வார்த்தைகள் இவை.



விண்வெளி ஆராய்ச்சிக்காக பல்வேறு நாடுகள் பல மில்லியன் தொகையினை ஆண்டுதோறும் செலவு செய்கிறார்கள். எலன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் போன்ற தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கின்றன. இவை அனைத்தும் விண்வெளி சார்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துவந்தாலும் கூட “செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம்” தொடர்பான திட்டங்களையும் வைத்திருக்கின்றன. அதனை நோக்கி முயற்சிகளை செய்துவருகின்றன. பூமி என்றதொரு கிரகம் இருக்கும் போது மிகப்பெரிய அளவில் செலவு செய்து ஏன் செவ்வாய் கிரகத்திற்கு செல்லவேண்டும்? இந்தக்கேள்வி பெரும்பாலானவர்களுக்கு எழலாம். இந்தக்கட்டுரை அதற்கான பதிலை வழங்கும்.

மனித இனம் நீண்ட காலம் வாழ்வதை உறுதி செய்ய

மனித இனம் அடுத்த பில்லியன் ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் எனில் மனிதன் இதுவரை போகாத கிரகங்களுக்கு போக வேண்டும் என ஸ்டீபன் ஹாக்கிங் ஏன் சொன்னார்? 165 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக பூமியில் டைனோசர் என்ற மிகப்பெரிய உயிரினம் வாழ்ந்ததற்கான படிமங்கள் இப்போது கிடைக்கின்றன. இவ்வ்ளவு பெரிய உயிரினம் மறைந்துபோனதற்கு காரணம் என்னவெனில் அப்போது பூமியின் மீது பெரும் விண்கல் ஒன்று மோதியது தான் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மீண்டும் அப்படியொரு நிகழ்வு நடக்குமாயின் மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களும் அழிந்துபோகும்.

 

அப்படிப்பட்ட பேரழிவை தவிர்க்க வேண்டுமெனில் பூமியை தவிர்த்து வேறு பல இடங்களிலும் மனிதனை குடியேற செய்யவேண்டும். அப்போது தான் பூமியின் மீது தாக்குதல் நடைபெற்றாலும் கூட மனித இனத்தால் மீண்டு வாழ முடியும். இதுதான் நாம் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்திற்க்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முக்கியக்காரணம்.

மக்கள்தொகை அதிகரிப்பு, அதிவேக சுற்றுசூழல் பாதிப்பு, அரசியல் நிலையற்ற தன்மை, வளங்கள் போதாமை போன்ற பல்வேறு காரணங்களால் பூமி அச்சுறுத்தலை அன்றாடம் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் எங்கிருந்தோ வரும் விண்கல் வந்துதான் பூமியை அழிக்க வேண்டும் என்பதில்லை. நாமே நம்மை அழித்துக்கொள்வோம். இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவேண்டும் எனில் நாம் நிச்சயமாக விண்வெளிக்கு மேலே மக்களை குடியமர்த்திட வேண்டும்.

மனிதனின் பேரார்வம்

தெரியாத ஒன்றினை தெரிந்துகொள்வதில் தான் மனித இனத்தின் வெற்றியே அடங்கி இருக்கிறது. அதுதான் வளர்ச்சி எனவும் மனித இனம் நம்புகிறது. அந்த பேரார்வம் தான் அமெரிக்காவை கொலம்பஸ் கண்டறிய உதவியது, நீல் ஆம்ஸ்டராங் நிலவிற்கு செல்ல உதவியது, இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் தான் மனிதனின் செவ்வாய் கிரக பயணமும் துவங்கியது எனலாம். இந்த அளவில்லாத பிரபஞ்சத்தில் எங்கேயாவது தங்களைப்போன்ற  உயிரினங்கள் வாழ்கின்றனவா? பூமியைப்போல வாழத்தகுந்த கிரகங்கள் இந்த பிரபஞ்சத்தில் எங்கேயேனும் இருக்கின்றனவா? என தேடத்துவங்கியது மனித மூளை.

செவ்வாய் கிரகம் தான் அருகில் இருக்கும் ஒரே கிரகம்

பூமியைப் போன்றதொரு கிரகம் கண்டுபிடிப்பு என பல்வேறு செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் அவற்றிற்கு செல்லாத மனிதன் ஏன் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முயற்சி செய்கிறான் எனில் பூமியைப்போன்று உயிரினம் வாழத்தகுந்த கருதப்படுகிற கிரகங்களில் செவ்வாய் கிரகம் தான் பூமிக்கு மிக அருகில் இருக்கும் ஒரே கிரகம். அதனால் தான் மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முயற்சி செய்கிறான்.

ஆதிக்கம் செலுத்த போராடும் நாடுகள்

அப்பல்லோ விண்வெளி வீரர் ஆல்டரின் அமெரிக்க நாட்டின் செனட் சபையிடம் தெரிவித்த கருத்துகள் இவை தான். செவ்வாய் கிரகத்திற்கு செல்ல நடக்கும் அறிவியல் ஆய்வுகள் வெறுமனே விண்வெளி ஆய்வு என ஒதுக்கிவிட முடியாது, இந்த நூற்றாண்டில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு மிக முக்கியமான விசயமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நிரந்தர குடியேற்றம் இருக்கும். அமெரிக்கா இந்த முயற்சியில் இறங்காவிட்டால் பிற நாடுகள் அதனை செய்யும். அதனை செய்கின்ற நாடுகள் பொருளாதார மற்றும் அரசியல்  பலன்களை அதிகம் பெறுவார்கள்.

 

இதுபோன்ற கருத்துக்களினால் தான் ஒவ்வொரு நாடும் தங்களது பணத்தை செய்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவது அவ்வளவு எளிதான விசயம் இல்லை என்றாலும் கூட முடியாத விசயம் அல்ல என்பது தான் உண்மை. நிச்சயம் ஒருநாள் மனிதர்கள் பூமி தவிர்த்து வேறு பல கிரகங்களிலும் வாழ்வார்கள். அப்போது நம் இனம் பிறந்த இடம் அதுதான் என ஒரு நட்சத்திரத்தை காட்டி ஆசிரியர் வேறொரு கிரகத்தில் விண்வெளி பாடம் எடுத்துக்கொண்டு இருப்பார்.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version