Site icon Tech Tamilan

GPS தெரியும், அதென்ன VPS? வாங்க தெரிஞ்சுக்கலாம்

what is vps in tamil-min

GPS தொழில்நுட்ப வசதி வருவதற்கு முன்பாக அறியாத ஒரு ஊருக்கோ அல்லது ஒரு கடைக்கோ செல்ல வேண்டுமெனில் பலரிடம் வழி கேட்டுத்தான் செல்ல வேண்டி இருக்கும். ஆனால், மொபைல் போன் மற்றும் GPS (Global Positioning System) தொழில்நுட்பம் வந்த பிறகு யாரிடமும் வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புகிறோமோ அந்த இடத்தை தேர்வு செய்து Get Direction கொடுத்தால் போதும் நமக்கான வழியினை இறுதி வரை GPS மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். அதனையும் மேம்படுத்தும் விதமாக வந்துள்ள புதிய தொழில்நுட்பம் தான் VPS (Visual Positioning System). 

VPS technology பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் GPS technology பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

GPS என்றால் என்ன?

GPS தொழில்நுட்பம் என்பது செயற்கைகோள் அடிப்படையிலான ஓர் நேவிகேஷன் தொழில்நுட்பம். அமெரிக்காவில் மிலிட்டரி வாகனங்கள் மற்றும் இராணுவ வீரர்கள் சரியான இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. மேலும், இந்த GPS தொழில்நுட்பத்தை பொதுவெளியில் பகிர்ந்தால் அது தங்களுக்கு எதிராகவே போர்க்களங்களில் பயன்படுத்தப்படலாம் என நினைத்து பொது பயன்பாட்டுக்கு GPS தொழில்நுட்பத்தை வழங்காமல் இருந்தது அமெரிக்க ராணுவம்.

1983 ஆம் ஆண்டு Soviet SU-15 என்கிற ஜெட் விமானம் கொரியாவை சேர்ந்த பயணிகள் விமானத்தை தாக்கி அளித்தது. கொரிய பயணிகள் விமானம், தவறுதலாக சோவியத்தின் தடை செய்யப்பட்ட எல்லைக்குள் பயணித்த காரணத்தால் தான் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது மிகப்பெரிய நிகழ்வாக அப்போது கருதப்பட்டது. ஒருவேளை GPS தொழில்நுட்ப வசதி கொரிய விமானத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என சொல்லப்பட்டது.

இதனையடுத்து அப்போதைய அமெரிக்க அதிபராக விளங்கிய ரொனால்ட் ரீகன் மீண்டும் இதுபோன்றதொரு அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்பதற்காக GPS தொழில்நுட்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதி வழங்கினார்.

Read more about GPS Here ஜிபிஎஸ் என்றால் என்ன?GPS எப்படி செயல்படுகிறது?

GPS இல் சிறந்து விளங்கும் Google

இன்று நாம் அனைவரும் கூகுளின் மேப் மூலமாகத்தான் GPS வசதியை பயன்படுத்தி வருகிறோம். தற்போதைய சூழலில், கூகுள் நிறுவனம் தான் GPS தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வருகிறது. தொடர்ச்சியாக, சிறந்த GPS சேவையினை வழங்கவும் அது தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு, Stay Safe என்ற வசதியின் மூலமாக, குடும்ப உறுப்பினர் ஒருவர் வாடகை வாகனத்தில் பயணிக்கும் போது குறிப்பிட்ட வழியில் இருந்து 0.5 கிலோமீட்டர் தொலைவு தவறி சென்றால் அலர்ட் பெற முடியும். இதுபோன்ற பல சிறப்பான வசதிகளை கூகுள் மேப்பில் வழங்கி வருகிறது. 

ஆனால், கூகுள் நிறுவனத்தை தவிர வேறு சில நிறுவனங்களும் GPS சேவையில் சிறந்து விளங்குகின்றன. உதாரணத்திற்கு, MapQuest, Maps. Me, MapFactor போன்ற நிறுவனங்கள் உள்ளன. அதேபோல, ரஷ்யாவில் GLONASS, சீனாவில் Beidou என பல நிறுவனங்கள் உள்ளன.

VPS என்றால் என்ன?

அண்மைய காலமாக GPS தொழில்நுட்பத்தை விடவும் மேம்படுத்தப்பட்ட VPS தொழில்நுட்பம் வந்துவிட்டது. GPS தொழில்நுட்பத்தில் சில குறைபாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு, பழைய மேப்புகள், சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமை போன்ற காரணங்களால் சில நேரங்களில் தவறான பாதைகளை காட்டுவது, செல்ல முடியாத இடங்களில் பாதைகளை காட்டுதல், தவறான திசையை காட்டுவது என குறைபாடுகள் ஏற்படுவது உண்டு.

இந்தக்குறையை சரிசெய்து மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான் VPS தொழில்நுட்பம். VPS என்பதற்கு Visual Positioning System என்று பொருள். GPS தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோள்கள் மூலமாக பெறப்படும் தகவல்கள் அடிப்படையில் தான் நமக்கு நேவிகேஷன் வசதி வழங்கப்படும். VPS தொழில்நுட்பத்தில், செயற்கைக்கோள்கள் மூலமாக பெறப்படும் தகவல்களோடு குறிப்பிட்ட கருவியில் உள்ள கேமரா மூலமாக எதிர்ப்புறம் உள்ள கடைகள், இடங்கள் போன்றவற்றின் விஷூவல் தகவல்கள் பெறப்பட்டு மேம்படுத்தப்பட்ட நேவிகேஷன் தகவல்களை வழங்கும்.

குறிப்பாக, இந்த VPS தொழில்நுட்பம் நகரங்களிலும், வானம் மறைக்கப்பட்ட நெருக்கமான இடங்களிலும் பெரிதும் பயன்படும்.

இதையும் படிங்க : இந்தியாவின் நேவிகேஷன் navIC க்கு அனுமதி | இனி GPS ஐ நம்பியிருக்க வேண்டாம்

TECH TAMILAN

Exit mobile version