Site icon Tech Tamilan

Copyright, Trademark, Patents என்ன வித்தியாசம்?

Copyright என்ற வார்த்தை நம்மில் அதிகம் பேருக்கு பரிட்சயமான வார்த்தையாக இருக்கலாம். இவை அனைத்துமே உருவாக்குகிறவர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு பயன் மற்றும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையே. Copyright, Trademark, Patents இடையே சிறிய வித்தியாசங்கள் இருக்கின்றன. வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்.

Difference between Copyright, trademark and patents

Copyright என்ற வார்த்தை நம்மில் அதிகம் பேருக்கு பரிட்சயமான வார்த்தையாக இருக்கலாம். இவை அனைத்துமே உருவாக்குகிறவர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு பயன் மற்றும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டவையே. Copyright, Trademark, Patents இடையே சிறிய வித்தியாசங்கள் இருக்கின்றன. வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்.


பல உணவகங்களுக்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டி என்ற உணவகத்தின் பெயரையே வைத்திருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் நீங்கள் சற்று கவனித்து பார்த்தால் அந்த பெயரில் பல வித்தியாசங்கள் இருக்கும். உதாரணத்திற்கு, தலைப்பாகட்டு, திண்டுக்கல் தலப்பாகட்டு, சென்னை தலைப்பாகட்டு என சிறிய வித்தியாசங்கள் இருக்கும். சிலருக்கு அது ஏன் என தெரியும். பலருக்கு அது தெரியாது. அதுபோலவே கோகோ கோலா நிறுவனத்தின் பாட்டில் போன்று இன்னொரு நிறுவனத்தால் தயாரித்து விற்க முடியாது.

அதுபோலவே ஒருவர் எழுதிய புத்தகத்தை அவரது உரிமை இல்லாமல் இன்னொரு பதிப்பகம் வெளியிட முடியாது. எப்படி ஒருவரின் பெயரில் இருக்கும் சொத்துக்களை பிறரால் பயன்படுத்த முடியாதோ அதுபோலவே ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் அறிவு சார்ந்து, வணிகம் சார்ந்து உருவாக்கிய பொருளையும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறர் பயன்படுத்த முடியாது. அதனை ஒட்டியது தான் Copyright [பதிப்புரிமை] , Trademark [வணிகச் சின்னம்], Patents [காப்புரிமைகள்], புவிசார் குறியீடு அனைத்துமே.

Difference between Copyright, trademark and patents​

Copyright மற்றும் Patents ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை தான். இலக்கியம், எழுத்துக்கள், படைப்புகள் சார்ந்துள்ளவை மீதான உரிமையை குறிப்பதற்கு Copyright [பதிப்புரிமை] என அழைப்பார்கள். மறுபுறமோ, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், மருத்துவ கண்டுபிடிப்புகள் சார்ந்துள்ளவை மீதான உரிமையை குறிப்பதற்கு  Patents [காப்புரிமைகள்] என சொல்வார்கள். இந்த இரண்டையும் நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள இந்த உதாரணம் உதவும் என நினைக்கிறேன். ஒருவர் எழுதிய நாவல் அல்லது  ஒருவர் எடுத்த வீடியோ அல்லது ஒருவர் எடுத்த புகைப்படம் அல்லது ஒருவர் உருவாக்கிய கலை உருவம் இவற்றை வேறொருவர் உரிமை கொண்டாடாமல் பாதுகாப்பதற்கு Copyright பயன்படும். பேஸ்புக், யூடியூப் பயன்படுத்துவோர் பிறரது வீடியோ அல்லது இசையை பயன்படுத்தும்போது Copyright Issue வை சந்திப்பது இதனால் தான்.

மறுபுறம், ஒரு மொபைல் நிறுவனத்தின் மொபைல் போன்ற ஒன்றை இன்னொருவர் உருவாக்குவதையோ அல்லது ஒருவர் Patents செய்து வைத்துள்ள தொழில்நுட்பத்தை வேறொருவர் அப்படியே உருவாக்குவதையோ தடை செய்திட உதவுவது Patents.

ஆங்கிலத்தில் எளிமையாக இப்படி விளக்குவார்கள் “For copyrights, it’s new artistic and literary works; for patents, it’s new scientific and technological works.”

நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதும் போதோ அல்லது இசையை உருவாக்கும் போதோ Copyright என்பது தானாகவே அதற்கு கிடைத்துவிடுகிறது. ஆனால் நீங்கள் முறைப்படி அதனை Copyright செய்து வைத்துக்கொள்ளும்போது பிறர் அதனை பயன்படுத்தி பலனடைந்தால் அவர் மீது வழக்கு தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ் திரைப்படத்துறையில் கதைத்திருட்டு வழக்குகள் நடைபெறுவதை சரியான உதாரணமாக இதற்கு கூறலாம்.

Patent என்பது தானாக எதற்கும் வழங்கப்படுவது இல்லை. நீங்கள் ஒரு விசயத்தை புதிதாக உருவாக்கியுள்ளீர்கள் என்றால் அது பற்றி காப்புரிமை வழங்கும் நிறுவனத்தில் பதிவு செய்திட வேண்டும். நீங்கள் பதிவு செய்தவுடன் அதனை ஆராய நிபுணர் ஒருவர் நியமிக்கப்படுவார். உங்களுடைய கண்டுபிடிப்பு அவர்களுடைய விதிகளுக்கு ஒத்துப்போனால் Patent வழங்குவார்கள்.

Trademark இந்த இரண்டில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டது. ஒரு நிறுவனம் உருவாக்கக்கூடியதை பாதுகாப்பதற்காக பயன்படுவது தான் Trademark. அது நிறுவனத்தின் லோகோவாக இருக்கலாம், பெயராக இருக்கலாம், அதன் தனித்தன்மை வாய்ந்த பொருள்களாக இருக்கலாம். நாம் முன்னர் குறிப்பிட்டோமே, திண்டுக்கல் தலப்பாக்கட்டி என்ற பெயரை பிறர் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றது இதனால் தான். அதேபோல கோகோ கோலா நிறுவனம் அதன் பாட்டில் வடிவமைப்பிற்கும் Trademark வாங்கி வைத்துள்ளது.

கால அளவை பொறுத்தவரைக்கும் இலக்கிய பதிப்புரிமை சார்ந்து இருக்கும் Copyright என்பது உருவாக்கியவர் உயிரோடு இருக்கும் வரைக்கும்  + அவர் இறந்த பின்பு 60 ஆண்டுகள் வரைக்கும் இருக்கும். உலகின் பல்வேறு ஆண்டுகளில் 70 ஆண்டுகள் என இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் பதிப்புரிமை ஆயுள்காலம் + 60 ஆண்டுகள்.

Patent என்பது பதியப்பட்ட நாள் துவங்கி 20 ஆண்டுகள் வரைக்கும் தான். புதிய கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும், கண்டுபிடிப்புகளின் பலனை மக்கள் அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் 20 ஆண்டுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட 20 ஆண்டுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட நிறுவனத்தால் அதிக விலைக்கு விற்கப்படும். அதுவே 20 ஆண்டுகளுக்கு பின்பு அதே மருந்தை வேறு நிறுவனங்கள் வேறு பெயர்களில் விற்க ஆரம்பிக்கும். இதனால் விலை குறைவு ஏற்பட்டு மக்களுக்கு பலன் உண்டாகும்.

Trademark என்பதற்கு கால அளவு கிடையாது. குறிப்பிட்ட நிறுவனம் செயல்பாட்டில் இருக்கும் காலம் வரைக்கும் இந்த உரிமை அவர்களுக்கு இருக்கும்.





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version