Site icon Tech Tamilan

மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? இதெல்லாம் தான் செய்யபோகிறார்களா?

facebook mark zukerberg

facebook mark zukerberg

Metaverse

தற்போது டிஜிட்டல் உலகில் அதிகம் புழக்கத்திற்கு உள்ளான வார்த்தையாக “மெட்டாவெர்ஸ் [Metaverse]” மாறி இருக்கிறது. அண்மையில் பேசிய மார்க் ஜுக்கர்பெர்க் தாங்கள் இனிமேல் செய்யப்போகும் அனைத்து வேலைகளுக்குமான ஒட்டுமொத்த நிறுவனமாக Meta Platforms Inc. இருக்கும் என அறிவித்துள்ளார். அதன்படி, மெட்டாவெர்ஸ் டிஜிட்டல் உலகை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசெல்லப்போகிறது என அனைவரும் கணிக்கிறார்கள். அப்படி என்ன மாற்றங்களை செய்யப்போகிறது மெட்டாவெர்ஸ்? வாருங்கள் பேசுவோம்.

பேஸ்புக் நிறுவனத்தை உருவாக்கியவர் மார்க் ஜுக்கர்பெர்க் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நிறுவனத்தின் கீழாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல கிளை நிறுவனங்கள் இருக்கின்றன. தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் நிறுவனத்தின் பெயரை Meta Platforms Inc என மாற்றியுள்ளதாக அறிவித்தார். அதன்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் பெயர்கள் மாற்றப்படாது எனவும் இனிமேல் தாங்கள் செய்திடும் அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனத்தின் பெயராக மெட்டா இருக்கும் எனவும் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார்.

மெட்டாவெர்ஸ் எந்த மாதிரியான தொழில்நுட்பங்களை உருவாக்கும்?

மெட்டாவெர்ஸ் பெயரை அறிமுகம் செய்து பேசிய மார்க் இதுகுறித்து சில விசயங்களை சொல்லியிருக்கிறார். அதன்படி, இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு முக்கியமானதாக இருப்பது மக்களுடன் தொடர்பில் இருப்பது தான். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அதைத்தான் செய்து வருகின்றன. ஆனால் மெட்டாவெர்ஸ் அதில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை புகுத்த இருக்கிறது. உதாரணத்திற்கு, விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரு உண்மையில்லாத ஒரு மாய உலகை படைக்க இருக்கிறது மெட்டாவெர்ஸ். நீங்கள் விலைக்கு வாங்கிய ஒரு தொழில்நுட்ப கண்ணாடியை அணிந்துகொள்வதன் மூலமாக உங்களால் அந்த விர்ச்சுவல் உலகத்திற்குள் உங்களால் செல்ல முடியும்.

 

அங்கே இன்னொரு நண்பருடன் உங்களால் பேச முடியும். அங்கே நீங்கள் விளையாட முடியும். விர்ச்சுவல் உலகில் விளையாடும் தொழில்நுட்பத்தை மையப்படுத்தி  “ரெடி ப்ளேயர் ஒன்” என்ற ஒரு ஹாலிவுட் திரைப்படமே வந்துள்ளது. உதாரணத்திற்கு, நீங்கள் இப்போது பப்ஜி விளையாட்டை மொபைல் போன் திரையில் பார்த்துக்கொண்டுதானே  விளையாடுகிறீர்கள். ஆனால் புதிய தொழில்நுட்பத்தில், நீங்கள் அவர்கள் கொடுக்கும் ஒரு கிட்டை அணிந்துகொண்டு வீட்டில் ஒரு அறையில் இருந்து விளையாடலாம். ஒரு கண்ணாடி, ஒரு இணைப்பு கருவி என நீங்கள் அனைத்தையும் அணிந்துகொண்டு விளையாடினால் நீங்களே நேரடியாக களத்தில் விளையாடுவது போன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்படும்.

அதேபோல, டிஜிட்டல் முறையில் அமைக்கப்படும் விர்ச்சுவல் உலகிற்கு உங்களால் சுற்றுலா செல்ல முடியும். அங்கே பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். அங்கே விளம்பரங்கள் இருக்கும். அதன் மூலமாக மெட்டாவெர்ஸ் சம்பாதிக்கவும் முடியும்.

மார்க் ஜுக்கர்பெர்க் தான் இதனை முதலாவதாக செய்கிறாரா?

நிச்சயமாக இல்லை. விர்ச்சுவல் உலகை கட்டமைப்பதிலும் அந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் பல கேம் நிறுவனங்களே கூட அதி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே சமூகவலைதளத்தில் சிறப்பான ஆப்களை தன்னகத்தே வைத்திருக்கும் மார்க் தற்போது அதில் அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மெட்டாவெர்ஸ் மாதிரியான ஒரு மிகப்பெரிய நிறுவனம் இந்த தொழில்நுட்பத்திற்குள் வருவதனால் விலை குறைவாக இந்த தொழில்நுட்பம் மக்களுக்கு கிடைக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

 

 

இத்தாலியைச் சேர்ந்த பேஷன் நிறுவனமான கூச்சி (Gucci) ‘கூச்சி விர்ச்சுவல் 25’ என்ற பெயரில் 25 விர்ச்சுவல் காலணிகளை விற்பனை செய்திருக்கிறது. 9 அமெரிக்க டாலர்கள் மற்றும் 12 அமெரிக்க டாலர்களுக்கு இந்த விர்ச்சுவல் காலணிகளை வாடிக்கையாளர்கள் வாங்கியிருக்கிறார்கள். இந்தக் காலணிகள் உங்கள் வீட்டிற்கு பார்சலாக வராது. உங்களது கணக்கில் இருக்கும் அவ்வளவுதான். இந்தக் காலணிகளை ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் நாம் போடும் புகைப்படங்களுக்காப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். அதாவது, புகைப்படம் எடுக்கும்போது (கேமரா கண் கொண்டு பார்க்கும் போது) இந்தக் காலணிகளை நாம் அணிந்திருப்பது போலவே இருக்கும். அதுதான் விர்ச்சுவல் காலணிகளாம்.

ஆனால் விளம்பரத்துறைக்கும் இந்த தொழில்நுட்பத்தை மெட்டாவெர்ஸ் கொண்டு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. உதாரணத்திற்க்கு, தற்போது 360 டிகிரியில் ஒரு பொருளை சுற்றிப்பார்க்கும் வசதியெல்லாம் வந்துவிட்டது. இந்த விர்ச்சுவல் முறையில் குறிப்பிட்ட கண்ணாடியை நீங்கள் அணிந்துகொண்டால் அந்தப்பொருளை நேரடியாகவே நீங்கள் பார்த்து வாங்குவது போன்ற அனுபத்தை பெற முடியும். இதன்மூலமாக விற்பனையை பெருக்க முடியும். விளம்பரத்தின் மூலமாக மெட்டாவெர்ஸ் அதிக பணத்தையும் ஈட்ட முடியும்.

விர்ச்சுவல் உலகம் நல்லதா?

ஒரு பொறுப்புள்ள மனிதராக சிந்தித்துப்பார்த்தால் விர்ச்சுவல் உலகம் என்பது நமது தொழில்நுட்ப அறிவிற்கு எல்லையில்லை என்பதை நிரூபிப்பதற்கு மட்டுமே உதவும். மற்றபடி, மனிதர்களுக்கு அது நன்மை பயக்குமா என்றால் நிச்சயமாக இருக்காது. இப்படித்தான் பொழுதுபோக்கிறாக விளையாட்டு கேம்கள் வந்தன. ஆனால் தற்போது பல இளைஞர்களின் வாழ்க்கையே கேம் என்ற நிலை உண்டாகிவிட்டது.விர்ச்சுவல் உலகம் என்ற ஒன்று வந்தால் பலர் பூட்டிய அறைகளுக்கு உள்ளேயே தங்களது வாழ்க்கையை வாழ்ந்துவிடுவார்கள் என்பதை மறுக்க முடியாது.

தொழில்நுட்பம் நமது கட்டுப்பாட்டில் இருக்கும் வரைக்கும் தான் நமக்கு நல்லது. நாம் தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும்போது நமக்கு அது நல்லதல்ல.





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version